அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் கோவில்

தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள விராதனூர் எனும் ஊரில் அமைந்துள்ளது

அருள்மிகு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில்.

இது பழமை வாய்ந்த கோவில்களுள் ஒன்றாகும்.

மூலவர் – அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன்

பழமை – 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர் – விராதனூர்

மாவட்டம் – மதுரை

மாநிலம் – தமிழ்நாடு

தல வரலாறு :

சுமார் 750 வருடங்களுக்கு முன்பு உத்திரகோசமங்கை என்ற ஊரிலிருந்து இரண்டு குடும்பத்தினர் தங்கள் குலதெய்வமான அழகர்கோவில் பெருமாளுக்கு நேர்த்திக் கடன் செலுத்த

புறப்பட்டு வந்தனர்.வழியில் உள்ள விராதனூரில் இளைப்பாறினார்கள்.

தங்கள் குழந்தையை உறங்க வைப்பதற்காக அங்கிருந்த ஆலமரத்தில் தொட்டில் கட்டினர்.

குழந்தையை உறங்க வைத்திவிட்டு பெரியவர்களும் உறங்கி விட்டனர். விழித்த போது

தொட்டிலில் குழந்தையைக் காணவில்லை. குழந்தையை காணாமல் மிகவும் பதற்றத்துடன்

இருந்தனர்.மரத்தின் மீது அந்த குழந்தை அமர்ந்திருந்ததைக் கண்ட பெற்றோர்

கண்ணீர் விட்டு இறைவா! குழந்தையை காப்பாற்று என அழுதனர். அப்போது இறைவன்

அந்த ஊரில் தனக்கு கோயில் அமைத்து வழிபடும்படி அசரீரியாக கூறியது.

இறைவனின் கட்டளைப்படி அவர்களும் ரிஷபாரூடர் சிலை வைத்து கோயில் கட்டி

வழிபாடு செய்தார்கள்.குழந்தையை காணாமல் அழுத கண்ணீரை போக்கியதால்

இறைவனுக்கு ‘அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன்” என்ற திருநாமம் சூட்டப்பட்டது.

ரிஷபாரூடர் :

அசுரர்கள் தொல்லையினால் தேவர்கள் கயிலாயம் சென்று தங்களை காப்பாற்ற

சிவனிடம் முறையிட்டனர்.சிவன் தேவர்களால் செய்யப்பட்ட தேரில் ஏறி

அசுரர்களுடன் போருக்கு புறப்பட்டார். தேரின் அச்சு முறிந்து விட்டது. சிவனிடம்

கொண்ட அன்பின் காரணமாக மகாவிஷ்ணு காளை உருவம் கொண்டு சிவனை

ஏற்றிச் சென்றார். இதன் பின் சிவனுக்கு ‘ரிஷபாரூடர்” என்ற திருநாமம் உண்டாயிற்று.

விஷ்ணு இங்கு இடபவாகனமாக இருப்பதால் சிவனையும்,சக்தியையும்,

பெருமாளையும் ஒரே மூலஸ்தானத்தில் தரிசிக்கலாம்.

தலச்சிறப்பு :

பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் ரிஷபாரூட மூர்த்தி உப மூர்த்தியாகத்தான்

இருப்பார். ஆனால் மதுரை அருகே உள்ள விராதனூர் அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன்

கோயிலில் ரிஷபாரூடர் மூலவராக அருள்பாலிக்கிறார்.கோயிலின் வாசல் தெற்கு நோக்கி

அமைந்துள்ளது. பெரும்பாலும் சிவாலயங்களில் மையப் பகுதியில் தான் மூலவர்

சன்னதி இருக்கும். ஆனால் இங்கு வட மேற்கு வாயு மூலையில் அமைந்துள்ளது.

தனி மண்டபத்தில் நந்தி சன்னதியின் வலப்புறம் பத்ரகாளி இடப்புறம் வீரபத்திரர்

அர்த்தமண்டபத்தில் விநாயகர், முருகன் அருள்பாலிக்கிறார்கள்.

பிரதோஷ காலங்களில் மூலவரையே ரிஷபாரூடராக வழிபடலாம் என்பது

இக்கோயிலின் சிறப்பு.

தன்னிடம் வந்து கண்ணீர் விட்டு பிரார்த்திப்பவர்களை கைவிடமாட்டார்.

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து

புத்தாடை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

#அழுத_கண்ணீர்_ஆற்றிய #ஈஸ்வரன் #ரிஷபாரூடர்

Share this:

Write a Reply or Comment

1 × two =