மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன்: –

ஸ்ரீ

National Leader

1981 – 1982 களில் அந்நாள் தமிழக அமைச்சர் திரு.செ.அரங்க நாயகம் அவர்களின் வீட்டிற்கு எதிரே இருந்த வீட்டில் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை சர்வ சாதாரணமாக பார்த்திருக்கின்றேன். சந்தித்து இருக்கின்றேன்.

அவருடனும், அவருடன் அப்போது இயக்கத்தில் இருந்த சில, பல தலைவர்களுடனும் நான் சந்தித்து உரையாடி இருக்கின்றேன். தலைவர் அவர்களுடைய மிகப்பெரிய பலம் அவரிடம் இருந்த ஒழுக்கம், ஒழுக்கம், ஒழுக்கம் தான். அதனால் தான் என்னவோ அன்றையிலிருந்து இன்று வரை எனக்கு என்று ஒரு தலைவர் உண்டு என்றால் அது தலைவர் மேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை தவிர வேறு யாரையும் நான் சொல்ல மாட்டேன்.

அரசியல் ரீதியாக முன்னாள் இந்திய பிரதமர் இராஜீவ் காந்தி அவர்களின் படுகொலை புலிகள் இயக்கத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கலாம். முன்னாள் இந்திய பிரதமர் இராஜீவ் காந்தி அவர்களின் படுகொலை போன்று ஆயிரம் குற்றசாட்டுகளை தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது இன்று ஆயிரம் பேர் வைக்கலாம். அந்த விவாதங்களில் அரசியல்வாதிகள் பங்குபெற்று தங்கள் பசியாறி போகட்டும்.

ஆனால் அரசியலுக்கு அப்பாற்பட்டு, விவாதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு விஷயத்தை நான் நினைவு கூற விரும்புகின்றேன். ஒரு தமிழன் 1980 களில் சாதாரணமாக நம்மைப்போல் இருந்து, பின் நன்கு வளர்ந்து இலங்கையின் பாதிப் பகுதியை ஆண்ட விஷயத்தின் பிரமாண்டத்தை இலங்கைக்கு ஒரு முறை நீங்கள் சென்று வந்த பின் தான் உங்களால் உணர முடியும். செல்லரித்த வரலாற்று புத்தகங்களில் நாம் படித்த சோழ, சேர, பாண்டிய வரலாற்றை விட தமிழ் இனத்தில் மேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரனின் வரலாறு பெரியது.

கற்பழிப்பு, கொலை, கொள்ளை கிடையாது அவன் ஆண்ட போது அவன் கட்டுபாட்டில் இருந்த பிரதேசங்களில். ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ்.

மக்களில் பெரும்பன்மையோனோர் ஒருவித தயக்கத்துடன் இன்று  ஈழத்தில் வாழ்ந்தாலும் தம்பி மீண்டும் வந்து தங்களை மீட்க வேண்டும் என்கின்ற உணர்வு ஒவ்வொரு தமிழரிடத்திலும் திருடனுக்கு தேள் கொட்டிய உணர்வு போல் உள்ளத்தில் புதைந்து  இருக்கின்றது.

என் சிறிய வயதில் இருந்தே நிறைய அரசியல் தொடர்புடன் நான் வளர்க்கப்பட்டதால் சராசரி மனிதனை விட எனக்கு சற்று அரசியல் அறிவு அதிகம் என என்னால் உறுதியாக சொல்ல முடியும். அந்த வகையில் ஈழத்தை பற்றி அதிகம் பேசி என்னை அதிகம் ஈர்த்தவர் திரு.வைகோ அவர்கள். 1989 – ல் திரு.வைகோ அவர்கள் அண்ணாமலை பலகலைகழகத்திற்கு பேச வந்த போது வெடி, வெடித்து அவரை வரவேற்று மகிழ்ந்தவன். அந்தளவிற்கு திரு.வைகோவை நேசித்த நான், அவர் அரசியல் சூழ்நிலை காரணமாக பேச வேண்டிய தருணத்தில் பேசாமல் இருந்து விட்டார் என்பதை நினைத்து வருத்தப்படாத நாட்களே இல்லை.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், அன்னை இந்திரா காந்தி என இருவரில் ஒருவர் உயிரோடு இருந்து இருந்தாலும்  தமிழனுக்கு இந்த தோல்வி வந்திருக்காது.

உண்மையான தமிழின போராளி திரு.பழ.நெடுமாறன் அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்து இருந்தாலும் கண்டிப்பாக இந்த நிலைமை நம் இன ஈழ மக்களுக்கு வந்திருக்காது.

இருக்க வேண்டியவர்கள் இல்லாததால் நாம் நிறைய இழந்து விட்டோம். இனி பல ஜென்மம் செய்தாலும் நம்மால் கண்டிப்பாக இப்படியொரு சாம்ராஜ்ஜியத்தை கட்டி எழுப்ப முடியாது என்கின்ற அளவிற்கு மேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் ஆட்சி இருந்து இருக்கின்றது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டிய தருணம் இது.

மேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை பார்க்க முடியாதவர்கள் நீங்கள் வாழும் இந்த ஜென்மத்தில் அவர் ஆண்ட பகுதியையாவது ஒருமுறை பார்த்து வந்து விடுங்கள் – சோழ, சேர, பாண்டிய மன்னர்களின் பெருமைகளை பேசுவதை நிறுத்திவிட்டு.

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த இந்த பூமியில் தான் எட்டப்பனும் பிறந்தான் என்பது எந்த அளவு உண்மையோ அந்த அளவிற்கு நம் இனத்தின் கரு அறுப்பிற்கு நம் அரசியல் தலைவர்களே காரணம். இதற்கு பிராயசித்தமாக நாமாவது சிறிய அளவில், முடிந்தவரை ஈழ சொந்தங்களுக்கு உதவுவோம்.

உதவ ஆரம்பித்தால் பிறந்த பிறப்பிற்கான அர்த்தம் கண்டிப்பாக புரிபடும்;பிடிபடும் – புரிந்தபின், அறிந்தபின் புதியதாக வாழ்வோம் இனிமேலாவது அடுத்தவர்களையும் கணக்கில் வைத்து.

 

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

two + twelve =