#அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில்:
திருஞானசம்பந்தர் இங்கு வந்து அறையணிநாதரை வணங்கி பதிகம் பாடிவிட்டு திருவண்ணாமலை செல்ல விரும்பினார்.
ஆனால், ஏதோ சில காரணங்களால் அவரால் திருவண்ணாமலை செல்ல முடியவில்லை. எனவே, இக்கோயிலிலேயே அண்ணாமலையாரை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின் இங்கிருந்தே தூரத்தில் தெரிந்த #திருவண்ணாமலையாரை குறித்து பதிகம் பாடினார்.
#சம்பந்தர் பிரதிஷ்டை செய்த சிவன் சன்னதி அறையணிநாதர், அம்பாள் சன்னதிகளுக்கு இடையே தனியே இருக்கிறது. சம்பந்தர் திருவண்ணாமலையாரை வணங்கி பதிகம் பாடிய இடத்தில் ஒரு பீடத்தின் மேல் அவரது இரு பாதங்களும் இருக்கிறது. இந்த இடத்தில் இருந்து பார்த்தால் திருவண்ணாமலையை முழுவதுமாக பார்க்கலாம் என்பது விசேஷம்.
இங்கு நவக்கிரகத்தில் உள்ள #சனீஸ்வரர் வலது காலை தூக்கி, காகத்தின் மீது வைத்தபடி வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு அருகிலேயே மற்றொரு சனீஸ்வரர் நின்ற கோலத்தில் தனியாகவும் இருக்கிறார்.
இங்குள்ள #காலபைரவர் நாய் வாகனம் இல்லாமல் காட்சி தருவதும், துர்க்கை அம்மன் தெற்கு பார்த்தபடி இருப்பதும் வித்தியாசமான தரிசனம் ஆகும்.
அம்பாள் #பொன்னழகி தனிச்சன்னதியில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறாள். திருவண்ணாமலை சென்ற ரமண மகரிஷி வழியில் இக்கோயிலுக்கு வந்து #அதுல்யநாதேஸ்வரரை வணங்கி விட்டு அதன்பின்னரே திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையாரை வழிபட்டார். இவருக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது.
#சிறப்பம்சங்கள் :
இங்கு சுவாமி சுயம்பு லிங்கமாக மேற்கு பார்த்தபடி ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி தருகிறார். திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது, பிற சமயத்தினர் கோயிலை அடைத்து சுவாமி வழிபாட்டை நிறுத்தி வைத்திருந்தனர். சம்பந்தர் பதிகம் பாடி கதவை திறந்து மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வந்தார்.
அவர் எளிதாக சுவாமியை தரிசனம் செய்ய பிரதோஷ நந்தி வலதுபுறமாகவும், அதிகார நந்தி இடது புறமாகவும் சற்று சாய்ந்து கொடுத்ததாம். இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள இரண்டு நந்திகளும் இரு வேறு திசைகளில் திரும்பியபடியே இருக்கிறது.
விழுப்புரத்தில் இருந்து 35கி.மீ, தூரத்தில் இவ்வூர் இருக்கிறது. திருக்கோவிலூர் செல்லும் பஸ்கள் இவ்வூர் வழியாக செல்கிறது.
Share this: