மாங்காடு காமாட்சி:
மாங்காடு காமாட்சி அம்மன் தவசக்தியின் பெண்மை வடிவம் என்று போற்றப்படுகிறாள்.
அந்த தலத்தில் ஈசனை எண்ணி தவமிருந்த காமாட்சி தேவியின் தவக்கோலம் அனலாக வெளிப்பட்டு அந்தப் பகுதியையே வாட்டி வந்தது.
அந்த நேரத்தில் தான் ஆதிசங்கரர் அங்கு வந்தார். காமாட்சி அன்னையின் தவ அனல் குறைவதற்காக சிவசக்தி அம்சமான மகாமேரு என்ற 43 திரிகோணங்கள் கொண்ட, ஸ்ரீசக்கரத்தை அங்கு ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்தார்.
சக்தி வாய்ந்த இந்த மகாமேரு அபூர்வ மூலிகைகள் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த மேருவுக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு, ஜவ்வாது, சந்தனம் உள்ளிட்டவை மட்டுமே சாத்தப்படுகிறது.
பின்னர் காமாட்சி அன்னையும் ஸ்ரீசக்ரமும் கொண்ட கோயிலை சோழ அரசர்கள் ஸ்ரீவித்யா முறைப்படி அமைத்தனர் என்கிறார்கள். சில காலம் முன்பு வரை கூட பக்தர்கள் இங்கு வந்து எண்ணியது நிறைவேறினால் ஸ்ரீசக்ர மேருவை புனுகுவால் மெழுகுகிறேன் என்று வேண்டிக் கொள்வார்களாம். தவசக்தியின் அடையாளமாக விளங்கும் மாங்காடு மகாமேரு காமாட்சி அன்னையின் சூட்சும வடிவமாகும்.
இந்த அர்த்த மேருவில்தான் அன்னை காமாட்சி வாசம் செய்கின்றாள். காமாட்சியம்மனின் திருஉருவம் அர்த்த மேருவான ஸ்ரீசக்கரத்திற்குப் பின்புறமாய் தவக்கோலத்தில் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றது. அன்னை காமாட்சியம்மனின் மகிமைகளை அள விட்டுக் கூற இயலாது.
Share this: