December 24 2018 0Comment

பாசுரம் 3 – ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

பாசுரம் 3: ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

 
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.
பொருள்:
தோழியரே! மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு, வாமன அவதாரம் எடுத்த பரந்தாமன், இந்த பிரபஞ்சத்தையே அளந்து தன்னுடையதாக்கிக் கொண்டான். அவனது பெருமை குறித்து பாடவும், பாவைக்கு மலர் சாத்தி வழிபடவும் நீராடக் கிளம்புவோம்.
இந்த வழிபாட்டால் தேசமெங்கும், மாதம் மும்மாரி பெய்யும். வயல்களில் நெல் செழித்து வளரும். வயலுக்குள் மீன்கள் பாய்ந்தோடி மகிழும்.
குவளை பூக்களில் புள்ளி வண்டுகள் தேன் குடித்து மயங்கிக் கிடக்கும். பசுக்கள் வாரி வழங்கும் வள்ளலைப் போல, தாராளமாக பால் தரும். அள்ள அள்ளக் குறையாமல் செல்வம் பெருகும்.
விளக்கம்:
ஓங்கி உலகளந்த திரிவிக்ரமனாகிய திருமாலை வணங்கினால், என்னென்ன கிடைக்கும் என்பதை ஆண்டாள் பட்டியல் இடுகிறாள். இங்கே தனது தேசப்பற்றை வெளியிடுகிறாள்.
தங்கள் ஊர் மட்டுமின்றி தேசமே செழிக்க மார்கழி நோன்பு வகை செய்யும் என்று கருத்து தெரிவிக்கிறாள். நாமும், உலக நன்மைக்காக திருமாலிடம் மன்றாடுவோமே!
Share this:

Write a Reply or Comment

5 + sixteen =