என்றும் அன்புடன்…
நேற்று(25-04-2014) இரவு என்னுடைய மிக நெருங்கிய நண்பரான திரு.இனிகோ இருதையராஜ் – ன் (தலைவர், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம்) தாயார் காலமானார் என்ற செய்தி கேட்டு அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். நேற்று இரவு 11:30 முதல் விடியற்காலை 3:45 மணி வரை அவர் தாயைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார். அவரிடம் பேசி விட்டு வீடு திரும்பும்போது எனக்கு என் மேலேயே கோபம் ஏற்பட்டது. காரணம் எனக்கு எல்லாமுமாக இருந்தும், இருக்கும் என் தாயார் மீது சில சமயம் கோபித்த சில தருணங்கள் என் நினைவில் வந்து சென்றது. எனக்கும் என் தாயாருக்கும் எப்போதும் ஒரே ஒரு விஷயத்திற்காக தான் சண்டை வரும். அது எதற்காக என்றால் எப்போது பார்த்தாலும் ஓய்வு இல்லாமல் எதாவது வேலை செய்து கொண்டு இருக்கிறார்களே என்று அவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு கோபப்படுவது உண்டு. அதிலும் குறிப்பாக விடியற்காலையிலேயே வீட்டின் முற்றம் பெருக்கி தண்ணீர் தெளிப்பதை பார்க்கும்போது, ஏம்மா 4 மணிக்கு எழுந்து வேலை பார்க்குற 6 மணி வரை தூங்க வேண்டியதுதானே என்று சத்தம் போடுவேன். அதற்கு காரணம் என்னை வளர்பதற்கு என் அம்மா அப்பா மிக்க கஷ்டப்பட்டார்கள். இன்று எனக்கு இருக்கும் மிகப்பெரிய வசதி வாய்ப்புகள் எதையும் அனுபவிக்காமல் 1999 – ல் என் தந்தை காலமானார். நீங்களாவது அப்பாவுக்கு கிடைக்காத அந்த சந்தோஷத்தை சேர்த்து அனுபவியுங்கள் என்று கூறுவேன். இதயெல்லாம் அசைப்போட்டு கொண்டே நண்பர் வீட்டிலிருந்து வரும் வழியிலே இனிமேல் எந்த தருணத்திலும் என் தாயார் மீது கோபித்து கொள்ளக் கூடாது என்றும், அதை 200% முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டு, விடியற்காலை சரியாக 4:15 மணிக்கு காரை விட்டு இறங்கி வீட்டிற்குள் போக முற்பட்டபோது என் தாயார் வெளிமுற்றத்தை பெருக்கி கொண்டு இருந்தார்கள். எப்போதும் சத்தம் போடும் நான் இன்று தலைகுனிந்து வீட்டின் உள்ளே செல்ல கால் வைத்தபோது, ஏன் தான் இப்படி தூங்காம வேலை, வேலைன்னு ஊரு சுத்திக்கிட்டு இருக்கயோ உடம்பு என்ன ஆகுறது!… என்று முதல் முறையாக காலையிலேயே என்னை என் அம்மா கண்டித்ததை நினைத்து ஆச்சரியத்தில் வியந்து போனேன்…. அவரவர் கவலை அவரவருக்கு…. ஆண்டாளை அம்மாவாக பார்த்த தருணம் அது…
ஒரு நண்பனாக, ஒரு சகோதரனாக மிகுந்த பணிவன்புடன் உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்வது அவரவர் அம்மாவை போற்றி பாதுகாப்போம்.
இனிமேலும் பகலில் தொலைத்து இரவில் தேடி கொண்டிருக்கக் கூடாது என்பதை நினைவில் நிறுத்தி கொண்டு தயவுசெய்து இதை என்னுடைய வேண்டுகோளாக எடுத்து கொள்ளாமல் ஒவ்வொருவரும் உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாக எடுத்துக் கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஆண்டாள் பி.சொக்கலிங்கம்
April 28, 2014
Great and Noble thought to share. Thank you.
February 19, 2015
AMMAVUMKAMACHIUM