திருக்காவளம்பாடி:
திருக்காவளம்பாடி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் உள்ளது. திருநாங்கூரிலிருந்து 1 1/2 மைல் தொலைவில் அமைந்துள்ளது. திருநகரியிலிருந்து நடைப்பயணமாகவும் வரலாம். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் இத்தலமும் ஒன்றாகும்.
கண்ணன் சத்தியபாமாவுடன் சேர்ந்து நரகாசுரனையழித்தான். இந்திரன்,வருணன் ஆகியோரிடமிருந்து நரகாசுரன் அபகரித்த பொருட்களை அவர்கட்கே மீட்டுக்கொடுத்தான். வெகுநாளைக்குப் பின்பு, இந்திரனின் தோட்டத்தில் உள்ள பாரிஜாத மலரை சத்தியபாமா கேட்க கண்ணன் இந்திரனிடம் அம்மலரைக் கேட்டான். இந்திரன் கொடுக்க மறுக்க, சினங் கொண்ட கண்ணன் அவனோடு போரிட்டு அவனது காவளத்தை (பூம்பொழிலை) அழித்தான்.
11 எம்பெருமான்களில் ஒருவனாக துவாரகாவிலிருந்து வந்த கண்ணபிரான் தான் இருக்க காவளம் போன்ற ஒரு பொழிலைத் தேடி, இந்தக் காவளம்பாடியில் கோயில் கொண்டான் என தல வரலாறு கூறுகிறது. இறைவிக்குத் தனிக் கோயில் இல்லை. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களில் பாடல் பெற்றது.
திருமங்கையாழ்வாரின் பிறந்த இடமான குறையலூர் மற்றும் அவர் வைணவ அடியார்க்கு அன்னதானம் நடத்திய மங்கை மடம் இந்த தலத்திற்கு மிகவும் அருகாமையிலேயே அமைந்துள்ளது.
Share this: