மலையாள தேவி துர்காபகவதி அம்மன் திருக்கோவில்!
மலையாள தேவி துர்கா பகவதி அம்மன் ஆலயம் கோயம்பத்தூர் மாவட்டம் நவகரை என்னும் ஊரில் உள்ளது.
மூலவர் : மலையாள தேவி துர்காபகவதி அம்மன்
தல விருட்சம் : விருச்சிக மரம்
பழமை : 500 வருடங்களுக்குள்
ஊர் : நவகரை
மாவட்டம் : கோயம்புத்தூர்
தல வரலாறு :
ஒரு காலத்தில் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுப்பதில் அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் இடையே போட்டி நடந்தது. அந்த போட்டியில் தேவர்கள் அமுதத்தை அருந்த வேண்டி மலையாள தேசத்தில் உள்ள நவகரை என்னும் ஊரில் உலகை ஆளும் மலையாள தேவி துர்கா பகவதி அம்மனை வேண்டி யாகம் செய்தனர்.
தேவர்கள் செய்த யாகத்தில் மகிழ்ந்து யாகத்தில் இருந்து பகவதி அம்மன் தோன்றி தேவர்களையும் மனிதர்களையும் காக்கும்படி சிவனுக்கும், மகா விஷ்ணுவிற்கும் கட்டளையிட்டாள்.
பகவதி அம்மனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக சிவனும், விஷ்ணுவும் கிளம்பினர். அப்போது அங்கு வந்த சிவனின் வாகனமான
நந்தி, அவர்களிடம் பெருமானே!
அன்னை பகவதியின் தரிசனம் உங்களுக்கு மட்டும் கிடைத்துள்ளது.
சிவ வாகனமான எனக்கு கிடைக்கவில்லையே என வருந்தியது.
உடனே மகா விஷ்ணு, நந்தியே! நாங்கள் கண்ட காட்சியை நீயும் கண்டு மகிழ்வாய் என்று கூறினார். அதைக்கேட்ட நந்தி மகிழ்ச்சியுடன் பூமியின் வெளிப்பகுதியில் கொம்பு தெரியும் அளவிற்கு மாபெரும் வடிவம் எடுத்தது.
நந்தியின் மாபெரும் வடிவத்தைக் கண்ட மகா விஷ்ணு குறுக்கிட்டு நந்தீஸ்வரா நீ சாந்தமாகி மண்டியிட்டு பூமியை நோக்கி உற்றுப்பார் என்றார்.
நந்தியும் அந்த இடத்தில் இருந்துகொண்டு மகா விஷ்ணு கூறியபடியே பூமியை நோக்கி உற்று பார்த்தது. அப்போது சிவனுக்கும் மகா விஷ்ணுவிற்கும் பகவதி அம்மன் காட்சி கொடுத்தாள். அந்த காட்சி நந்தீஸ்வரருக்கும் தெரிந்தது.
நந்தி, பகவதி அம்மனின் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்த சனிபகவான் மகிழ்ந்து தன்னை மறந்து தனது வலது காலை தூக்கி காகத்தின் மீது வைத்து நின்றார்.
தல பெருமை :
ஒருமுறை ஆதி சங்கரர், இமயமலையிலிருந்து கன்னியாகுமரி வரை பாதயாத்திரை வரும் வழியில் திருப்பத்தூரில் விருச்சிக மரத்தை பிரதிஷ்டை செய்தார்.
அந்த விருச்சிக மரம் இத்தலத்திலும் உள்ளது. இந்த மரத்தை வழிபட்டால் சிவனை நேரில் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்தக்கோவிலை உருவாக்கிய ராமானந்த மூர்த்தி சுவாமிகள் இங்கேயே தங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.