July 01 2018 0Comment

தேவாதிராஜன் கோயில்:

தேவாதிராஜன் கோயில்:

 

மூலவர் – தேவாதிராஜன், ஆமருவியப்பன்

உற்சவர் – ஆமருவியப்பன்

தாயார் – செங்கமலவல்லி

தீர்த்தம் – தர்சன புஷ்கரிணி, காவிரி

பழமை – 1000-2000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர் – திருவழுந்தூர்

ஊர் – தேரழுந்தூர்

மாவட்டம் – நாகப்பட்டினம்

மாநிலம் – தமிழ்நாடு

ஒரு முறை #பெருமாளும் #சிவனும் சொக்கட்டான் விளையாடிக்கொண்டிருந்தார்கள். பார்வதி ஆட்டத்தின் நடுவராக இருந்தாள்.

காய் உருட்டும் போது குழப்பம் வந்தது. நடுவராக இருந்த #பார்வதி பெருமாளுக்கு சாதகமாக கூற, சிவனுக்கு கோபம் வந்து #பசுவாக மாறும் படி சாபமிட்டார். 

பார்வதி பசுவாக மாறியவுடன், துணைக்கு சரஸ்வதியும், லட்சுமியும் பசுவாக மாறி, பூமிக்கு வந்தார்கள். இவர்களை மேய்ப்பவராக, பெருமாள் “ஆ“மருவியப்பன் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் ஆட்சிசெய்கிறார்.

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. இங்கு மட்டுமே திருமங்கையாழ்வார் தாயாரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்துள்ளார். 

கிழக்கு பார்த்து அமைந்த இந்த கோயிலுக்கு நேர் எதிரில் மேற்கு பார்த்த சிவன் கோயில் உள்ளது. அங்கு தான் இவர்கள் சொக்கட்டான் ஆடிய மண்டபம் உள்ளது. கவிச்சக்கரவர்த்தி கம்பன் இத்தலத்தில் தான் பிறந்தார்.

உபரிசரவசு என்ற மன்னன், வானில் அவன் தேர் வரும் போது, அதன் நிழல் எதன் மீது பட்டாலும் அது கருகிவிடும்படி வரம் பெற்றிருந்தான். 

இவன் மேலே சென்றபோது, அதன் நிழல் கண்ணனின் மீதும் அவர் மேய்த்துக் கொண்டிருந்த பசுக்களின் மீதும் பட்டது. பசுக்கள் துன்பம் அடைந்தன. இவனது செருக்கை அடக்க நினைத்தார் கண்ணன்.

அவனது தேர் நிழல் மீது தன் திருவடியை வைத்து அழுத்தினார். மன்னனின் தேர் கீழே அழுந்தியது. அத்துடன் அவனது ஆணவமும் அழுந்தியது. இதனால் தான் இத்தலம் “#தேரெழுந்தூர்” ஆனது.

ஒரு முறை தேவேந்திரன் கருடாழ்வாரிடம் ஒரு விமானத்தையும் வைரமுடியையும் கொடுத்து, “108 திருப்பதிகளுள் எந்த பெருமாளுக்கு எது உகந்ததோ, அதைக் கொடுத்து விடு” என்றான். 

அதன் படி மைசூர் அருகே திருநாராயணபுரத்தில் உள்ள பெருமாளுக்கு வைர முடியை கொடுத்துவிட்டு, தேரெழுந்தூர் ஆமருவியப்பனுக்கு விமானத்தைக் கொடுத்தார் கருடன். 

இதனால் இங்குள்ள விமானம் கருட விமானம் ஆனது. அத்துடன் கருடன் பெருமாளின் அருகில் இருக்கும் பாக்கியமும் கிடைத்தது. பெரும்பாலான கோயில்களில் கருடன் சன்னதி பெருமாளுக்கு எதிரில் இருக்கும்.

மூலவர் தேவராஜன் 13 அடி உயரத்தில் #சாளக்கிராமத்தினால் ஆனவர். மூலஸ்தானத்தில் பார்வதி பசு ரூபத்தில் உள்ளார். 

மார்க்கண்டேய முனிவர் பிறவா வரம் பெற, ஆமருவியப்பனை வணங்கினார். இதனால் இவரை ஆமருவியப்பன் தன் அருகிலேயே வைத்துக்கொண்டார். பக்த பிரகலாதனும் மூலஸ்தானத்தில் உள்ளார். மூலஸ்தானத்தில் உற்சவர், தாயார் ஆகியோர் கிழக்கு பார்த்து நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர்.

தர்மதேவதை, உபரிசரவசு, காவிரி, கருடன், அகத்தியர் ஆகியோர் இத்தலப் பெருமாளை தரிசனம் செய்துள்ளனர்.

திருவிழா:

வைகாசி திருவோணத்தில் பிரம்மோற்சவம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, கோகுலாஷ்டமி ஆகியன முக்கிய திருவிழாக்கள்.

இருப்பிடம் :

மயிலாடுதுறையிலிருந்து (10 கி.மீ) கும்பகோணம் செல்லும் வழியில் தேரெழுந்தூர் உள்ளது.

Share this:

Write a Reply or Comment

three + nineteen =