கூத்தாண்டவர் சுவாமி கோவில்
திருநங்கைகளுக்கென்று புகழ் பெற்ற பல புண்ணிய ஸ்தலங்கள் இருப்பினும் விழுப்புரம் கூவாகம் கிராமத்திலுள்ள கூத்தாண்டவர் கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது.
இக்கோவில் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் #மடப்புரம் சந்திப்பிலிருந்து 30.கி.மீ தொலைவில் உள்ள கூவாகம் கிராமத்தில் திருநங்கைகளுக்கான தனி தெய்வமாக அமைந்துள்ளது.
கூத்தாண்டவர் : (நாகக்கன்னியின் மகன் அரவான்) அரவான் என்பவன் மிகப்பெரிய மகாபாரத போர் வீரரான அர்ஜுனன் மற்றும் அவர் மனைவியான நாகக்கன்னிக்கு பிறந்த புதல்வனாவான். அரவான் என்பது கூத்தாண்டவர்
வழிப்பாட்டின் மைய கடவுளாவார். இவரும் தந்தையைப் போல கடுமையான போர் வீரராக திகழ்ந்தார்.
கூத்தாண்டவர் திருவிழா :
மகாபாரதத்தில் குருஷேத்திர யுத்தத்தில் பாண்டவர்களுக்கு வெற்றிக் கிடைக்க ‘எந்த குற்றமும் இல்லாத சகல லட்சணமும் பொருந்திய ஒரு மனிதப்பலி தங்கள் தரப்பில் முதல் பலியாக வேண்டும்” என ஆருடம் கூறுகிறது.
பாண்டவர்களில் சாமுத்திரிகா லட்சணம் பொருந்தியவர்கள் #அர்ஜுனன், அவன் மகன் அரவான், ஸ்ரீகிருஷ்ணர். இந்த போருக்கு முக்கியமானவர்கள் அர்ஜீனனும், கிருஷ்ணரும் தான் எனவே அரவானை பலிக்கொடுக்க முடிவு செய்தனர்.
ஆனால் அரவான் இறுதி ஆசையாக ஒரு பெண்ணுடன் ஒரு நாள் இல்லற வாழ்வை முடித்த பின்பே தான் பலிக்களம் புகுவேன் என சொல்கிறான். ஆனால் அதற்கு எந்தப் பெண்ணும் முன்வரவில்லை.
விடிந்தால் பலியாகப் போகும் ஒருவனை மணக்க எந்தப் பெண்தான் சம்மதிப்பாள்? எனவே இறுதியாக ஸ்ரீகிருஷ்ணரே மோகினி அவதாரமெடுத்து அவனை மணக்கிறார். ஒரு நாள் முடிவிற்கு பிறகு பலிக்களம் செல்கிறான்.
விதவை கோலம் போடுகிறாள் மோகினி. இதன் அடிப்படையில் தான் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா நடைபெறுகிறது.
இந்த திருவிழா ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று கொண்டாடப்படுகிறது.
கூத்தாண்டவராகிய அரவானைக் கணவனாக நினைத்துக் கொண்டு சித்ரா பௌர்ணமியன்று திருநங்கைகள் கோவில் குருக்கள் கையால் மங்கல்யத்தை கட்டிக் கொண்டு, இரவு முழுவதும் கணவனை வாழ்த்தி பாடி பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டம் என மிக சந்தோஷமாக கொண்டாடுகிறார்.
மறுநாள் காலையில் அரவானின் இரவு களியாட்டம் முடிவடைந்த பிறகு அலங்கரிக்கப்பட்ட தேரில் மரத்தால் ஆன அரவான் சிற்பம் வைக்கப்பட்டு, கூத்தாண்டவர் கோவிலிலிருந்து 4கி.மீ தொலைவிலுள்ள கொலைக் களமான அமுதகளம் கொண்டு செல்லப்படுகிறான்.
அங்கே உயிர் விடப்போகும் அரவானைப் பார்த்து திருநங்கைகள் ஒப்பாரி வைக்கின்றனர். அமுதகளத்தில் அரவான் தலை இறக்கப்பட்டவுடன் திருநங்கைகள் அனைவரும் முதல்நாள் தாங்கள் கட்டிக்கொண்ட தாலிகயிறை அறுத்து,வளையல் உடைத்து பின் வெள்ளைப் புடவை உடுத்தி விதவை கோலம் சோகமயமாக தங்கள் சொந்த ஊருக்கு புறப்படுவார்கள்.
Share this: