சாத்தாயி அம்மன் கோவில்:

 

 

 

                                     

 

சாத்தாயி அம்மன் கோவில்:

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்தில் உள்ளது நங்கவரம். திருச்சியில் இருந்து

22 கிலோ மீட்டர் தொலைவில் அமைதியான சூழலில் உள்ள கிராமம் இது.

இங்கு சாத்தாயி அம்மன் ஆலயம் ஊரின் நடுவே அமைந்துள்ளது. ஊரின் செல்ல

மகளாய் ஊரைக் காத்து வரும் காவல் தெய்வமாய் இருந்து வருகிறாள் அன்னை
சாத்தாயி அம்மன்.

தல வரலாறு :

களத்து மேடு ஊரின் மேல் திசையில் எட்டிய தொலைவு வரை நெல் விளையும் பூமிதான்.

இந்த வயல் வெளிகளுக்கு இடையே ஒரு ஆலமரம். அந்த இடம் வயல் வெளிகளை விட
சற்றே உயரமாகக் காட்சி தரும். திடல் போல் அமைந்திருக்கும் அந்த இடம்தான் ஊரின்

களத்து மேடு. வயலில் விளையும் நெற்கதிர்களை அறுவடை செய்து கட்டு கட்டாகக் கட்டி

இந்தக் களத்துக்கு கொண்டு வருவார்கள்.பின் அதனை சிறு கட்டுகளாக கட்டி

தரையில் அடித்து நெல் மணிகளை உதிரச் செய்வார்கள்.

அறுவடையான நெல்லை வீட்டிற்கு ஏற்றிச் சென்ற பின் சில பெண்கள் களத்து

மேட்டில் நான்கு திசையிலும் சிதறிக் கிடக்கும் தானியத்தை கூட்டி ஒன்று சேர்த்து

எடுத்துச் செல்வார்கள்.அன்றும் அப்படித்தான் ஒரு பெண்மணி சிதறிக் கிடந்த நெல்லை

கூட்டிக் கொண்டிருந்தாள். களத்தின் நடுவே ஒரு சிறு பள்ளம். அதில் நிறைய நெல்

மணிகள். அந்தப் பெண் குனிந்து அந்த நெல்லை கைகளால் அள்ள முற்பட்டாள்.

திடீரென ஒரு அசரீரி ஒலித்தது. அந்தப் பெண் திடுக்கிட்டாள். பயந்து போய் அங்கிருந்து

எழுந்து செல்ல முயன்றாள். அசரீரி.. பயப்படாதே!. நான் தான் சாத்தாயி பேசுகிறேன்.

ஆடி வெள்ளத்தில் கேரளாவில் இருந்து அடித்து வரப்பட்டு இந்த களத்து மேட்டில்

ஒதுங்கியிருக்கிறேன்.

என்னுடன் மலையாள கருப்புசாமியும் இருக்கிறார். எங்களுடன் என்னையும் சேர்த்து

ஏழு பெண்கள் வந்தோம் என்று அந்தக் குரல் கூறியது.

எங்களுக்காக ஒரு கோவில் கட்டச்சொல். உலக்கை சப்தம் காதில் விழாத தொலைவில்

ஊருக்கு வெளியே அந்தக் கோவில் இருக்க வேண்டும். நான் ஊரையும் ஊர் மக்களையும்

காப்பாற்றுவேன் என்று கூறியதுடன் அந்த குரல் ஓய்ந்தது.

பயத்துடன் ஊருக்குள் ஓடிச் சென்று ஊர் மக்களிடம் நடந்ததைக் கூறினாள்.
ஊர் கூடி மறுநாள் மேளதாளம், தாரை, தப்பட்டை முழங்க ஊர் மக்கள் அந்த களத்து

மேட்டுக்குச் சென்றனர். சாத்தாயி அம்மன் சுட்டிக்காட்டிய இடத்தை கவனமாகத்

தோண்டினர்.அங்கே அழகான அம்மன் சிலை ஒன்று இருந்தது. கூடவே கருப்புசாமி

சிலையும் கிடைத்தது. ஊர் மக்கள் சிறு ஆலயம் கட்டி அங்கு அம்மனை பிரதிஷ்டை

செய்தனர். கூடவே ஆறு அம்மன் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கருப்புசாமி என்ற மலையாள கருப்புசாமியை தனியாக பிரதிஷ்டை செய்தார்கள்.

அன்னையின் சிறப்பு :

நங்கவரம்,குறிச்சி, கவுண்டம்பட்டி, அனஞ்சனூர், கோவிந்தனூர், நச்சலூர், ஆண்டிப்பட்டி,

கல்லை,சவாரிமேடு போன்றவை சுற்றிலும் உள்ள கிராமங்கள். இதனை எட்டுப்பட்டி

 

என்றே அழைக்கின்றனர்.இந்த எட்டுப்பட்டிகளுக்கும் சாத்தாயி அம்மனே காவல் தெய்வமாக

 

இருந்து அருள்புரிந்து வருகிறாள்.

இந்த ஊரில் அறுவடை நடக்கும்போது முதல் மரக்கால் #நெல்லை சாத்தாயி அம்மனுக்காகத்

தந்துவிடுவார்கள்.அறுவடை முடிந்ததும் புது நெல்லை அரைத்து அரிசியாக்கி அன்னையின்

ஆலயத்துக்கு வந்து பொங்கல் வைத்து சாத்தாயி அம்மனை வழிபடுவது இந்த ஊர்மக்களின்

வழக்கமாக உள்ளது.

சுமார் 1000 ஆண்டுகளுக்கும் பழமையான இந்த ஆலயத்தில் தினசரி இரண்டு கால பூஜை

நடைபெறுகிறது.

தன்னை சார்ந்துள்ள ஊர் மக்களை அரவணைத்து காத்துவரும் அன்னை சாத்தாயி அம்மன்

தன்னை நாடி வரும் பக்தர்களையும் தவறாது காத்து அருள்வாள்.

#சாத்தாயி_அம்மன் #நெல்லை

Share this:

Write a Reply or Comment

13 + 2 =