இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில்

 

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில்:

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில் தேவாரப் பாடல்கள் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது.

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தல வரலாறு :

இராமாயணப் போரில் இராவணனைக் கொன்றபிறகு சீதையை சிறைமீட்டு இராமபிரான் அழைத்து வருகிறார்.

இராமேஸ்வரம் தலம் வந்தபிறகு இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் விலக
சிவபெருமானை வழிபடத் தீர்மானித்து அனுமனை சிவலிங்கம் கொண்டுவருமாறு காசிக்கு அனுப்புகிறார்.

சிவலிங்கப் பிரதிஷ்டைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்திற்குள் அனுமன் திரும்பி வராததால்
சீதை கடற்கரையில் உள்ள மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கித் தந்தாள்.

இராமபிரான் அந்த சிவலிங்கத்தை குறித்த நேரத்தில் பிரதிஷ்டை செய்து தனது பூஜையை முடித்தார்.

காலங்கடந்து வந்த அனுமன் தான் வருவதற்குள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதைக்
கண்டு கோபமுற்று தனது வாலினால் இராமபிரான் பிரதிஷ்டை செய்த லிங்கத்தைப் பெயர்த்து எடுக்க முயன்று தோல்வியுற்று நின்றார்.

இராமர் அனுமனை சமாதானப்படுத்தி அனுமன் கொண்டுவந்த லிங்கத்தை முதலில் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு அருகில் பிரதிஷ்டை செய்தார். மேலும் அனுமன் கொண்டுவந்த லிங்கத்திற்கே முதற் பூஜை நடைபெற வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம் இராமலிங்கத்திறகு வடபுறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அனுமன் கொண்டுவந்த லிங்கம் காசிவிசுவநாதர் எனப்படும்.

இன்றும் இந்த காசி விசுவநாதருக்கே முதல் பூஜை நடைபெறுகிறது. பின்பே  இராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இராமலிங்கத்திற்கு பூஜை நடைபெறுகிறது.

கோவில் அமைப்பு :

இராமேஸ்வரம் திருக்கோவில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும். 865 அடி நீளமும் 657 அடி அகலமும் உடைய இராமேஸ்வரம் கோவிலின் கிழக்கு கோபுரமே மிகவும் உயரமானது. இதன் உயரம் சுமார் 126 அடி. மேற்கில் உள்ள கோபுரம் சுமார் 78 அடி உயரம் உடையது.

இக்கோவிலின் நான்கு பக்கமும் வாயில்கள் அமைந்திருந்தாலும் வடக்கு தெற்கு வாயில்கள் உபயோகத்தில் இல்லை.

ஆலயத்தினுள் இராமலிங்கம்,காசி விஸ்வநாதர்,விசாலாட்சி,நடராஜர் ஆகிய இவருக்கும் தனித்தனியே விமானங்கள் அமைந்திருக்கின்றன.

சுவாமியின் சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இச்சன்னிதியில் சீதாதேவியால் உருவாக்கப்பட்டு இராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இராமலிங்கர் சிவலிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கிறார்.

கோவில் தீர்த்தம் :

இராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனத்தை விட தீர்த்தமாடுவது தான் மிக சிறப்பாக கருதப்படுகிறது.

ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்களும் வெளியே 22 தீர்த்தங்களும் உள்ளன. ஆலயத்தின் உள்ளே உள்ள தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாகவே அமைந்துள்ளன.

அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் இராமேஸ்வரம் சமுத்திரக் கரையில் முதலில் தீர்த்தமாடுதலைத் தொடங்கி பின்பு ஆலயத்தினுள் மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும்.

முற்காலத்தில் தனுஷ்கோடியில் நீராடி அதன் பின்பு ராமேஸ்வரம் வந்து தீர்த்தமாடும் வழக்கம் இருந்தது.

தனுஷ்கோடி பல வருடங்களுக்கு முன்பு புயலில் அழிந்த பிறகு கோவில் முன்புள்ள அக்னி தீர்த்தக்கடலில் நீராடும் வழக்கம் ஏற்பட்டது.

அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் சமுத்திரக் கரையில் தான் முன்னோர்களுக்கு தர்ப்பணங்கள் பிதிர்கடன்கள் நிறைவேற்றப்படுகின்றன.

 

Share this:

Write a Reply or Comment

seventeen − 12 =