திருநறையூர் நம்பி கோவில் :
பெரும்பாலான வைணவ தலங்களில் கருடபகவானுக்கு வைக்கப்படும் சிலை சுதை சிற்பமாகவோ அல்லது மரத்தால் செய்யப்பட்டதாகவோ இருக்கும்.
கற்சிற்பமாக இருந்தால் சிறிய அளவிற்கு இருக்கும் ஆனால் இக்கோவிலில் உள்ள கருடன் எந்த கோவிலிலும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவிலான கற்சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
தாயாருக்கு முன்னுரிமை தரும் இந்தத் தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் வியக்க வைக்கும் ஆலய அதிசயமாக இருப்பது… கல்கருடனின் எடை அதிகரிப்பது தான்…!
பெருமாள் கோவில்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற கோவிலாக இருக்கும் அருள்மிகு திருநறையூர் நம்பி கோவிலில் கருடசேவை மிகவும் பிரசித்தி பெற்றது.
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இக்கோவில் 14ஆவது திவ்ய தேசம். கோச்செங்கட் சோழன் கட்டிய 72 மாடக் கோவில்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தலம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநறையூர் என்னும் ஊரில் உள்ளது.
இக்கோவிலில் ஆழ்வார்களால் பெருமாளும் நாச்சியாரும் கல்யாணகோலத்தில் கிழக்கு நோக்கி திருநரையூர்நம்பி-வஞ்சுளவள்ளி என்னும் திருநாமத்தில் அருள்பாலிக்கின்றனர். உற்சவர் ‘இடர்காத்தவரதன்” என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
கருவறைக்கு சற்று முன்னால் வலப்புறம் தனி சன்னதியில் எழுந்தருளி சேவை சாதிக்கும் கருடாழ்வார் மிக அழகானவர்.
உற்சவ காலத்தில் பெருமாளுக்கு வாகனமாக செல்லும் கல் கருடன் இவர். இந்தப் புதுமை வேறெங்கும் இல்லை.
இந்த கருடனை தூக்கிச்செல்ல முதலில் நான்கு பேர் தொடங்கி ஆலய வாசலை கடக்கும் போது எட்டு பதினாறு என்று கூடிச்சென்று 128 பேர் தூக்கி செல்ல நேரிடுமாம்.
திரும்பும் சமயம் அதே போல் குறைந்து கொண்டு வந்து நான்கு பேர் மட்டும் சென்று கருடனை அதன் சன்னதியில் அமர்த்துவார்களாம். காரணம்… கருட வாகனத்தின் பாரம் படிப்படியாக அதிகரிக்குமாம்!
Share this: