காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் …!!
ஒவ்வொரு கோவிலுக்கும் பொதுவாக ஒரு அதிசயம் இருக்கும். அவை கடவுளின் சக்தியால் நடக்கிறது என்பது நமது நம்பிக்கை.
500 ஆண்டுகள் மிக பழமை வாய்ந்த இந்த ஸ்ரீவரசித்தி விநாயகர் கோவில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கத்தில் எழில்மிகு அழகோடு உள்ளது. இங்கு,இந்த அதிசய ஸ்ரீவரசித்தி விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வரசித்தி விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் உள்ளது.
இக்கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர்தான் இன்றைக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
விநாயகரின் மகிமை!
ஆந்திராவின் சித்தூருக்கு அருகில் உள்ள காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் பிரசாதம் –
ஒரு ஸ்பூன் தண்ணீர்!
அதுவும் கிணற்று நீர்!
அந்த ஒரு உத்தரணி தண்ணீரைப் பெற்றுக்கொள்ளத்தான் அங்கே கூட்டம் அலை மோதுகிறது. அதனைப் பருகினால் ஊனம் தீரும் என்றும் நோய்கள் எல்லாம் நீங்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் தோன்றியதே அந்தக் கிணற்றில்தான்!இன்றும் அதே கிணற்றின் மேல்தான் அவர் காட்சி தருகிறார். அது மட்டுமல்ல,
இந்தக் காணிப்பாக்கம் விநாயகரைச் சுற்றி கிணற்று நீர் எப்போதும் ஊறிக்கொண்டேயிருக்கிறது.
நம் ஊர் பிள்ளையார்கள்போல் இவருக்குப் பெரிய அலங்காரம் எதுவும் கிடையாது.
நீளத் தும்பிக்கை, பெரிய காது, சிறிய கண்கள் என்றெல்லாமும் கிடையாது. கிணற்றில் எப்படித் தானாக, சுயம்புவாகத் தோன்றினாரோ, அதேபோல, எந்த மாறுதலும் இல்லாமல் `மொழுக்’கென்று இருக்கிறார் பிள்ளையார். ஆனால் அவரது சக்திதான் `கொழுக், மொழுக்’கென்று தேசம் பூராவும் புஷ்டியாகப் பரவி நிற்கிறது!
பக்தர்கள் இவரை பயபக்தியுடன் வணங்குகிறார்கள். காரணம், காணிப்பாக்கம் விநாயகர், `நல்லவருக்கு நல்லவர், கெட்டவருக்குக் கெட்டவர்’ என்று தெலுங்குப் படம் போல் பஞ்ச் டயலாக்கெல்லாம் சொல்கிறார்கள்.
அது உண்மைதான்.
யாராவது, ஏதாவது விஷயத்தில் பொய் சொன்னால், அவரைத் தரதரவென இங்கே இழுத்து வந்து விடுகிறார்கள். விநாயகர் முன் சத்தியம் செய்யச் சொல்கிறார்கள்.
`காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் சாட்சியாக நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை’ என்று கூறினால், அதனை சத்தியப் பிரமாணமாக இன்றும் ஆந்திர கிராமப் பஞ்சாயத்துகளில் ஏற்றுக்கொள்கிறார்கள்.
காரணம், இந்த விநாயகர் முன் யாராவது பொய் சொன்னால் 90 நாட்களுக்குள்ளேயே பொய் சொன்னவர் கடுமையாக தண்டிக்கப்படுவார் என்பதால்தான்!
உண்மை மட்டுமல்ல, ஊனமுற்றவர்களையும் இந்த விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். அவர்களின் குறைகளையெல்லாம் தீர்த்து வைப்பதில் இவருக்கு தீராத இஷ்டம்.
காரணம், இந்த விநாயகர் முதலில் காட்சி தந்ததே ஊனமுற்ற மூன்று சகோதரர்களுக்குத்தான். ஊர்ப் பெயர் தோன்றியதும் அதனால்தான்!இதோ, அந்தக் கதை:
3 சகோதரர்கள்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஊரின் பெயர், விஹார புரி.
இங்கே ஏழை விவசாயிகளான மூன்று சகோதரர்கள் இருந்தனர். அவர்களிடம் `காணி’ நிலமே இருந்தது. அது மட்டுமல்ல, மூவருமே ஊனமுற்றவர்கள்.
ஒருவருக்கு வாய் பேச இயலாது. அடுத்தவருக்குக் காது கேட்காது. மூன்றாமவருக்குக் கண் தெரியாது!
தங்கள் ஊனத்தைப் பொருட்படுத்தாமல், மூவரும் ஒற்றுமையுடன் விவசாயம் செய்து பிழைத்து வந்தார்கள்.
கோடைக் காலத்தில் அவர்கள் நிலத்தில் இருந்த கிணற்றில் நீர் வற்றியதால், அதனை ஆழப்படுத்த முனைந்தார்கள்.
மண்வெட்டியுடன் கிணற்றில் இறங்கினான், வாய் பேச முடியாதவன்.
பூமியைத் தோண்டும்போது ஒரு பாறையின்மீது மண்வெட்டிபட்டு, `டங்’கென்று ஓசை எழுந்தது. அது மட்டுமல்ல, வெட்டுப்பட்ட இடத்திலிருந்து குபுகுபுவென ரத்தம் பீரிட்டது.
அதைக் கண்டதும், இதுவரை வாய் பேசாதிருந்தவன், `ஐயோ ரத்தம்’ என்று அலறினான்!அவன் அலறியது, மேலே நின்றிருந்த, காது கேட்காதவனுக்குக் கேட்டது!
எட்டிப் பார்த்த கண் தெரியாதவன், `என்ன ஒரே சிவப்பாக இருக்கிறதே’ என்று வியந்து பார்த்தான்!
அப்புறம் என்ன? மூவரின் குறைகளும் திடீரென தீர்ந்ததைக் கண்ட கிராம மக்கள் அதிசயித்தனர்.
கிணற்றுக்குள் இறங்கிப் பார்த்தனர். பாறை உருவில் அங்கே வரசித்தி விநாயகர் காட்சியளிப்பது கண்டு பரவசப்பட்டனர். பயபக்தியுடன் வணங்கினர். (இன்றைக்கும் மண்வெட்டித் தழும்பு விநாயகர் சிரசில் இருக்கிறது.)
காணி நிலத்தில் தோன்றியதால், காணிப்பாக்கம் விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. பக்தர்கள், தேங்காய் உடைத்தபோது பரவிய இளநீர், ஒரு காணிப் பரப்பளவு பரவியதால் `காணிப்பாக்கம்’ என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள். (பாரகம் என்றால் நீர் பரவுதல் என்று தெலுங்கில் அர்த்தம். பாரகம் என்பதே பாக்கம் என்றானது!)
மிகவும் சிறியதாக இருந்த கோயிலை 11-ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன், பெரிதாகக் கட்டித் திருப்பணி செய்தான். 1336-ல் விஜயநகர மன்னர்களும் இங்கே சிறப்பு வழிபாடு செய்ததாக வரலாறு கூறுகிறது.
பாகுதா கோயிலின் அருகில் பாகுதா நதி காணப்படுகிறது.அந்தக் காலத்தில், அரசனுக்குச் சொந்தமான மாந்தோட்டம் ஒன்று இங்கே இருந்தது. அதிலிருந்த கனிகளை விகிதா என்ற ஒருவன் பறித்துச் சாப்பிட்டான்.
வெகுண்ட அரசன், விகிதாவின் இரு கைகளையும் வெட்டிவிட்டான்.
அறியாமல் செய்த பிழைக்கு, இவ்வளவு பெரிய தண்டனையா? என்று துடித்த விகிதா, அந்த நதியில் நீராடி, காணிப்பாக்கம் விநாயகரை நோக்கி “பாகு தா (கை தா)” என்று வேண்டினான்.
அவனுக்குக் கையும் கிடைத்தது, நதிக்கு `பாகுதா’ என்ற பெயரும் ஏற்பட்டது.
அலங்காரமில்லாத வெண்மை நிற ராஜகோபுரத்தை அடுத்து உள்ளே சென்றால், அலங்காரமில்லாமல், சுயம்புவாகக் காட்சி தரும் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகரைக் காணலாம். அவரைச் சுற்றி ஈரம் கசிந்து கொண்டிருப்பதை எட்டிப் பார்க்கலாம். அது தண்ணீர் மட்டுமல்ல, அவரது அளவிட முடியாத கருணையும்தான் என்று புரிந்ததால், நம் கண்களில் இருந்தும் கண்ணீர் கசிகிறது.
அருகில் வேறு இரண்டு கோயில்களும் உள்ளன. ஒன்று, மணிகண்டேஸ்வரர் ஆலயம். இங்கிருந்து ஒரு பாம்பு, தினமும் காணிப்பாக்கம் விநாயகரை வணங்கிச் செல்வதாக ஒரு நம்பிக்கை.
மற்றது வரதராஜ சுவாமி ஆலயம்.
ஜனமே ஜய அரசன் கனவில் வந்து, பெருமாளே கட்டச் சொன்ன கோயில் இது.
இன்றும் விநாயகரைசுற்றி ஈரம் கசிந்து கொண்டிருப்பதை சற்று கவனித்து பார்த்தால் தெரியும். இன்னும் நம்மை அதிசயக்க வைக்கும் நிகழ்வாக காணிப்பாக்கம் விநாயகர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகிறாராம்.
கொல்லபல்லி கிராமத்தை சேர்ந்த பெஜவாடா சித்தைய்யா என்பவர் ஒரு வெள்ளி கவசம் சுவாமிக்கு வழங்கினார். ஆனால் தொடர்ந்து விநாயகர் சிலை வளர்ந்து கொண்டு வருவதால் வெள்ளி கவசம் விநாயகர் பொருந்தவில்லையாம்.