February 17 2018 0Comment

திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோவில்:

திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோவில்:
தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவராத்திரிக்குச் சிறப்புடைய தலம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 48வது சிவத்தலமாகும். மாசி மாதத்து அமாவாசையை ஒட்டி வரும் மகாசிவராத்திரி விழா மூன்று நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தலச் சிறப்பு :
சோழர் காலப் பாணியில் இக்கோவில் கட்டப்பட்டிருக்கிறது.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மகாசிவராத்திரி என்ற சிறப்பு வாய்ந்த சிவதல விழாவுக்கு காரணமான தலம். இத்தலத்தில் வேறு எங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
நந்திகேசுவரர் எதிர்புறமாக திரும்பி இருக்கிறது. நவகிரகங்கள் இத்தலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அர்த்தமண்டபத்தில் வாயிற்படியின் இருபுறங்களிலும் விஷ்ணுவும், பிரம்மனும் எங்குமே காணப்படாத நிலையில் துவாரபாலகர்களாக நிற்கிறார்கள்.
தல பெருமை :
முன்னாலிருக்கும் நந்தி வித்தியாசமாக இருக்கிறது. மற்ற சிவாலயங்களில் பெரும்பாலும் நந்தி கோயிலின் கருவறையை நோக்கியபடி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கோ நுழைவாயிலை நோக்கிக் கொண்டு படுத்திருக்கிறது.
முன்பு தவநிதி என்ற முனிவர் திருவைகாவூர் ஆலயத்தில் தங்கி வழிபாடுகளை நடத்திக் கொண்டிருந்தார். ஆலயத்தை சுற்றி பெரும் காடாக இருந்தது. அந்த காட்டில் ஒரு வேடன் குடும்பம், வசித்து வந்தார்கள்.
அவன் உணவுக்காக வேட்டைக்கு சென்றபோது இருட்டும் நேரத்தில் ஒரு மானைக் கண்டான். அதைத் துரத்தினான். மான் பயந்து ஓடி ஆலயத்திற்குள் அமர்ந்திருந்த தவநிதி முனிவரை தஞ்சமடைந்தது. முனிவர் மானுக்கு அபயமளித்தார்.
அதனால் கோபம் கொண்ட வேடன் முனிவரைத் தாக்க முயன்றான். முனிவர் இறைவனை வேண்ட இறைவன் புலி உருக்கொண்டு வேடனைத் துரத்த பயம் கொண்ட வேடன் ஆலய பிரகாரத்தில் இருந்த வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான்.
புலியும் வேடன் இறங்கட்டும் என்று மரத்தடியிலேயே காத்திருந்தது. புலி போகட்டும் என்று காத்திருந்த வேடனுக்கு பசியும், பயமும் வாட்ட, புலிக்கு அஞ்சிய வேடன் தான் ஏறி இருந்த வில்வமரத்தின் இலைகளை ஒவ்வொன்றாக பிய்த்து கீழே போட அது புலி உருவில் இருந்த சிவபெருமான் மீது விழுந்து கொண்டிருந்தது.
விதிப்படி அன்று இரவு வேடனின் ஆயுள் முடியவேண்டும். எனவே எமன் வேடனின் உயிரைப் பறிக்க ஆலயத்தினுள் நுழைந்தார். அன்றைய தினம் மகாசிவராத்திரி நாள். உண்ணாமல், உறங்காமல் இரவு நான்கு காலமும் இருந்த வேடன் அறியாமல் அவன் கிள்ளிப்போட்ட வில்வ இலைகளால் அவனுக்கு மகா சிவபூஜை செய்த பலன் கிடைத்தது.
எமனை விரட்டிய நந்தி :
அதனால் வேடனை சிவபெருமான் தன் அடியாராக ஏற்றுக்கொண்டார். எனவே எமனை தட்சிணாமூர்த்தி வடிவில் கையில் கோலுடன் தோன்றி வெளியே விரட்டினார். அதன்பின் விழித்துக்கொண்ட நந்தி தேவர் வாசற்படி நோக்கி ஓடி வந்த எமனை தன் சுவாசத்தால் கட்டி நிறுத்திவிட்டார்.
சிவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக எமன் சிவனிடம் மன்னிப்பு வேண்டினார். இறைவனும் எமனை மன்னித்தருளினார். அதன்பின் எமன் தன் பெயரில் குளம் அமைத்து அதில் மூழ்கி இறைவனை வழிபட்டு சென்றார்.
மீண்டும் எமன் கோயிலுக்குள் நுழையாமல் பாதுகாப்பாக நந்தி இன்னமும் திரும்பிப் படுத்துக் கொண்டிருக்கிறது.
எமன் விழுந்த குளம் எம குளம் என்ற பெயரில் இன்றளவும் வழங்கி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
கோயிலின் கோபுர வாசலில் சிறிய சிற்பமாகவும், பழைய பாணி ஓவியமாகவும் இந்தக் காட்சி சித்திரிக்கப்பட்டுள்ளது.
அமைவிடம் :
அருகில் உள்ள தொடருந்து நிலையம் கும்பகோணம். கும்பகோணத்திலிருந்து எண் 30, 12, 57, 69 குறிப்பிட்ட பேருந்துகளில் செல்லலாம். 18 கிமீ தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை சென்று அங்கிருந்தும் செல்லலாம் (8 கிமீ).அல்லது கும்பகோணம்-தஞ்சாவூர் சாலை வழியே திருவலஞ்சுழி என்ற இடத்தில் இறங்கி, அங்கிருந்து சுவாமிமலை வழியாகவும் செல்லலாம்
Share this:

Write a Reply or Comment

2 × four =