February 02 2018 0Comment

கருவளா்ச்சேரியில் அகத்தியர்:

கருவளா்ச்சேரியில் அகத்தியர்:
கும்பகோணம் மருதாநல்லூா் அருகிலுள்ள,கருவளா்ச்சேரி திருக்கோயில்.
#வரலாறு :
 
லோக மாதாவாம் அம்பிகை ‘கரு’ காக்கும் நாயகியாக, சுயம்பு மூர்த்தமாக, அகிலாண்டேஸ்வரி எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கும் அற்புதத் திருத்தலம் இது. குழந்தை வரம் தருவதுடன், கர்ப்பப்பையில் வளரும் கருவையும் பாதுகாப்பவள் ஆதலால் அம்பிகைக்கு, ‘கருவளர்நாயகி’ என்றும் ஒரு பெயர் உண்டு. 
 
புற்று மண்ணால் ஆன சுயம்புத் திருமேனி ஆதலால் அம்பிகைக்கு அபிஷேக- ஆராதனைகள் கிடையாது; புனுகுச் சட்டம், சாம்பிராணி மற்றும் தைலக்காப்பு மட்டுமே செய்யப்படுகிறது. ஆவணி மாதம் புனர்பூச நட்சத்திரம், நவராத்திரி நாட்கள், மாசி மாதம் மகா சிவராத்திரி ஆகிய நாட்களில் மட்டுமே அன்னையின் முழு உருவத்தை தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் திருமுக தரிசனம் மட்டுமே. மாதந்தோறும் பௌர்ணமி அன்று அகிலாண்டேஸ்வரிக்கு சிறப்பு தைலக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. 
 
அம்மனின் பாதத்தின் அருகே, காஞ்சி மகா பெரியவர் வழங்கிய சக்ரமும், சக்ரமேருவும் உள்ளன.
 
தேவியின் கருவறை வாசற்படியில், பித்தளைக் காப்பு போடப்பட்டுள்ளது. அம்பாளை உளமார வேண்டிக் கொண்டு இந்தப் படியை சுத்தம் செய்து பசு நெய்யால் மெழுகி கோலமிட்டு வழிபட்டால், பிரார்த்தனைகள் பலிக்கும் என்கின்றனர். இந்த அம்பிகையின் அருளால் கருவுற்றவர்கள், வளைகாப்பு விழாவின்போது, அகிலாண்டேஸ்வரிக்கு ஏழு வளையல்களை காணிக்கை யாகச் செலுத்தி செல்கின்றனர். தொட்டில் காணிக்கை செலுத்தும் வழக்கமும் உண்டு. 
 
ஏராளமான பேருக்கு குல தெய்வமாகவும் திகழும் இந்த அன்னையை, தொலைவில் உள்ள ஊர்களில் வசிக்கும் மகப்பேறு மருத்துவர்களும் வந்து வணங்கிச் செல்கின்றனர். தவிர, தங்களிடம் சிகிச்சைக்காக வரும் மகளிரையும் அன்னையின் தரிசனம் பெற வேண்டி இங்கு அனுப்பி வைக்கிறார்கள்.
 
அகத்திய முனிவரும் அவர் மனைவி லோபமுத்திரையும் பூஜித்ததால் இங்கு அருள்பாலிக்கும் இறைவனுக்கு, அகஸ்தீஸ்வரர் என்று திருநாமம். இங்கு, அகத்தியருக்கு திருமணக் கோலத்தில் சிவபெருமான் காட்சி அளித்ததாகக் கூறுவர். லோபமுத்திரை சமேத அகத்திய முனிவருக்கும் இங்கு மூலவர் மற்றும் உற்சவர் விக்கிரகங்கள் உண்டு என்பது குறிப்பிடத் தக்கது. பௌர்ணமி மற்றும் ஆயில்ய நட்சத்திர தினங்களில் இவர்களுக்கும் விசேஷ வழிபாடுகள் உண்டு. 
 
அம்பிகையும் ஈசனும் ஒரே வரிசையில் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கின்றனர். இந்தக் கோயிலுக்கு அருகிலேயே லட்சுமிநாராயண பெருமாள் கோயிலும் அமைந்துள்ளது. அரியையும், சிவனையும் வழிபட விரும்பிய அகத்தியருக்காக இருவரும் இப்படி அருகருகே கோயில் கொண்டதாக ஐதீகம்.
 
என்று இத்தலத்தை பற்றி கூறப்பட்டுள்ளது.
Share this:

Write a Reply or Comment

two × three =