இந்த நெடுஞ்சாலையில் பயணம் செய்தவர்கள் சென்னையிலிருந்து சுமார் 95 கி.மீ. தொலைவில் மேல்மருவத்தூரை அடுத்து அச்சிறுபாக்கத்திலுள்ள சிறு மலைத்தொடரையும், உச்சியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டடத்தையும், அதற்கடுத்து மலை உச்சியிலும் அடிவாரத்திலும் பளபளவென மின்னும் சர்ச்சையும் நிச்சயம் பார்த்திருப்பார்கள்.
மலை உச்சியில் பார்த்தால் பாழடைந்த கட்டடம்போல் தோன்றுவது, உண்மையில் ஓர் சிவாலயம். அதுவும் 1,500 வருட பழமையான சிவாலயம்.
அச்சிறுபாக்கத்திற்கு அழகூட்டுவதோடு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினசரி பயணிக்கும் லட்சக்கணக்கான பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் அந்த அழகிய மலைத்தொடரின் பெயர் வஜ்ரகிரி மலை. இந்த வஜ்ரகிரி மலை உச்சியில் சுமார் 1,500 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பசுபதீஸ்வரர் உடனுறை மரகதாம்பிகை ஆலயம்தான், இப்போது பாழடைந்த கட்டடம்போல் காட்சி தருகிறது.
தரையிலிருந்து சுமார் 700 அடி உயரத்தில் மலை உச்சியில் இருக்கும் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு நேராக, அச்சிறுபாக்கம் ஊருக்குள் மிக அழகிய உயர்ந்த கோபுரத்தோடு அமைக்கப்பட்டிருக்கிறது
ஆட்சீஸ்வரர் கோயிலுக்கு உட்பட்டதுதான் பசுபதீஸ்வரர் கோயிலும் என்கிறார்கள் அவ்வூரைச் சேர்ந்த பெரியவர்கள். பசுபதீஸ்வரர் கோயிலை அடைய இரண்டு வழிகளை பல நூறு வருடங்களுக்கு முன்பே முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
ஒன்று செங்குத்தான படிக்கட்டுகள் மூலம் மலை உச்சியை அடைவது. மற்றொன்று மலைக்குப் பின்புறம் வாகனங்களில் வருவதற்கான பாதை.
ஆனாலும் சில இளைஞர்கள் ஒன்றுகூடி பசுபதீஸ்வரர் ஆலயத்தையும், அந்த ஆலயத்திற்குச் செல்லும் பாதையையும் செப்பனிடத் தீர்மானித்தனர்.
1967-ல் இம்மலையில் தங்கியிருந்த திருநெல்வேலியைச் சேர்ந்த மௌனசித்த ராஜா என்பவர் மலை உச்சிக்கு மின் இணைப்பு பெற்றிருந்தார்.
ஆனாலும் மலை உச்சிக்குச் செல்லும் பாதை, விளக்குகள் இல்லாமல் இருளில் மூழ்கியிருந்தது. இளைஞர்கள் கோயிலை செப்பனிட்டதோடு சில நன்கொடையாளர்கள் உதவியுடன் மலைப்பாதையில் மின்விளக்குகளை அமைத்தனர். `சிவசிவ’ என்ற எழுத்துக்கள் மின்னும் மின்சார போர்டையும் மலை உச்சியில் அமைத்தனர்.
சில படிக்கட்டுகளைப் புதிதாகக் கட்டினர்.
அச்சிறுபாக்கம் மலை உச்சியில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலின் வரலாறும், ஊருக்குள் இருக்கும் ஆட்சீஸ்வரர் கோயிலின் வரலாறும் சமகாலத் தவையாகும்.
அச்சிறுபாக்கம் கிராமத்து சூழல் மிகவும் அமைதியான கிராமிய மண்ணின் மனத்தோடு, வாழ்க்கையை உணர்த்துவதாக உள்ளது.
கிராமத்தினுள் நுழையும்போது ஒரு விநாயகர் கோயிலும், அருகில் பெரிய குளக்கரையும் அதனையடுத்து பஜார் என்று சொல்லப்படும் கடைத்தெருவும் நம்மை வரவேற்கிறது.
அதனை அடுத்து ஊருக்குள் நுழைந்தால் ஊரின் மையப்பகுதியில் அற்புதமான வரலாற்றுச் சிறப்புமிக்க பிரம்மாண்டமான சிவன் கோயில் அமைந்துள்ளது.
அதுதான், இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோயி
அச்சிறுபாக்கம் என்பது பழங்காலத்தில் அச்சு இருபக்கம் என்றே வழங்கப்பட்டு வந்துள்ளது. அதாவது நமது சமய வழக்கப்படி எந்த காரியமானாலும் திருமணம் போன்ற சுப காரியங்களானாலும், தெய்வ காரியங்களானாலும் முழுமுதற் கடவுளான விநாயகரின் திருஉருவத்தை மஞ்சளில் பிடித்து பூஜை செய்த பிறகே ஆரம்பிப்பார்கள். அதனை உணர்த்தும் பாடல்களும் உண்டு, நெடுங்காலத்துக்கு முன்பு கிராமத்து மக்கள் ஆட்சீஸ்வரர் திருக்கோயில் தேர்த் திருவிழாவின் போது விநாயகப் பெருமானை வழிபடாமல் தேர் இழுக்க முற்பட்டபோது தேரின் அச்சுமுறிந்து இருபக்கமும், தேரின் சக்கரங்கள் வீழ்ந்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
அதனாலேயே அந்த ஊரின் பெயர் அச்சு இருபக்கம் என்று வழங்கலாயிற்று. `அச்சு இருபக்கம்’ என்பதே காலப்போக்கில் அச்சிறுபாக்கம் என்று மாறிற்று என்று கூறப்படுகிறது.
அச்சிறுபாக்கம் மலையில் பாறைகளால் அமைக்கப்பட்ட படிகளில் ஏறிச் சென்றால், முதலில் விநாயகரைத் தரிசித்து விட்டு மேலே சென்று பசுபதீஸ்வரரைத் தரிசிக்கலாம். மலை உச்சியில் உள்ள கோயிலில் உள்ள சிவாலயம் மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வர வஜ்ரகிரி வடிவேலர் ஆலயம் என்ற திருநாமத்துடன் வழிபடப்படுகின்றது.
சோழர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட திருத்தலங்களில் இதுவும் ஒன்று. முதன்முதலில் கோயில் ஸ்தாபிக்கப்பட்டபோது இருந்த சிவலிங்கம், விஷமிகளின் செயலால் மலைச்சரிவில் புதையுண்டு கிடப்பதை நாம் காணலாம்.
மலைகள் சூழ்ந்த அடிவாரத்தில் ஒரு குளத்தை நிர்மாணித்து அதில் இரட்டை சுனைகளை சீரமைத்து கிணறுகள் அமைத்துள்ளார். பல மூலிகைச் செடிகொடிகளை கொண்ட வனாந்திரமான மலையின் பின் அடிவாரத்தில் சப்த கன்னிகளுக்கு கோயில் உள்ளது.
பௌர்ணமி மற்றும் விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.