March 03 2014 0Comment

சோதிடமும் அறிவியலும்

எம். ஜே. அக்பர் எழுதிய நேருவின் வாழ்க்கை வரலாற்றில் ஓர் ஆச்சரியமான சம்பவம் குறிப்பிடப்படுகிறது. குல்சாரிலால் நந்தாவின் வற்புறுத்தலின்பேரில், ஜோஷி என்ற சோதிடரைச் சந்தித்தார் நேரு.1950-களின் இறுதியில் இந்தச் சந்திப்பு நடந்திருக்கலாம். நடக்கப்போகின்ற பலவற்றைப் பற்றி நேருவிடம் ஜோஷி சொன்னார். அவர் சொன்னவற்றில் முக்கியமானது நேருவின் மரண நாள். சோதிடர் சொன்ன நாள் 27 மே 1964.

இந்தச் சம்பவத்துக்கு நேர்மாறாக இன்னொரு சம்பவத்தை நேருவின் அந்தரங்கச் செயலாளராக இருந்த மத்தாய் தனது நினைவுகளில் குறிப்பிடுகிறார். நேரு, அவரிடம் “நான் 74 வயதுக்கு மேல் இருக்க மாட்டேன்” என்று சொல்லியிருக்கிறார். சோதிடர்கள் சொல்லியிருப்பார்கள் என்ற மத்தாய்க்கு நேரு அளித்த பதில்: “இல்லை. குடும்பத்தில் இருந்த ஆண்களின் வயதுகளின் சராசரியைக் கணக்கிட்டேன். சரியாக 74 வருடங்கள், 6 மாதங்கள், 13 நாட்கள் வருகின்றன.”

நேருவின் பிறந்தநாள் 14 நவம்பர் 1889.

மக்கள் நம்புகிறார்கள்

இந்தச் சம்பவங்கள் வாழ்க்கையின் புதிர்களை அவிழ்க்க மனிதன் செய்யும் முயற்சியின் பல பரிமாணங்களில் இரண்டைக் கோடிட்டுக் காட்டுகின்றன. நம்மில் பலருக்கு சோதிடம் துல்லியமாகப் பலித்த அனுபவங்கள் இருக்கலாம். என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர்கூட அவரது மனைவி மரணம் எய்தும் நாளை, மரணம் அடைவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சோதிடர் துல்லியமாகக் கணித்ததைப் பற்றி மிகுந்த வியப்போடு குறிப்பிட்டார். இதற்கு நேர்மாறாக இன்னொரு சம்பவத்தை என்னால் சொல்ல முடியும். என்னுடைய தாய்வழித் தாத்தா ஒரு சிறந்த சோதிடர் என்று குடும்பத்தில் சொல்லிக்கொள்வார்கள். எனது பெரியம்மாவை நன்றாக ஜாதகம் கணித்துக் கல்யாணம் செய்துவைத்தார். 20 வயதில் பெரியம்மா தன் கணவனை இழந்தார்.

இன்று இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், சோதிடத்தை நம்பாதவர்களைவிட, நம்புகிறவர்கள்தான் மிக அதிகமாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். குருப்பெயர்ச்சிப் புத்தகங்கள் இட்லி, வடையைவிட அதிகம் விற்பனையாகின்றன. செவ்வாய்தோஷம் என்று அவர்கள் ஜாதகம் சொல்வதால், பல அழகிய பெண்களும் வசீகரமான ஆண்களும் திருமணம் செய்துகொள்ள முடியாமல் காலம்தள்ளுகிறார்கள். சோதிடர்கள் பரிகாரம் உண்டு என்று உறுதியளித்தாலும் மரணத்துக்குப் பரிகாரம் உண்டு என்பதை மறுதரப்பினர் நம்பத் தயாராக இல்லை.

ஐந்து கேள்விகள்

சோதிடத்தை நம்புங்கள் அல்லது நம்பாதீர்கள். அது மனம் சார்ந்தது. ஆனால், சோதிடம் அறிவியலின் ஓர் அங்கமா? பல சோதிடர்கள் ஆம் என்கிறார்கள். அதற்கு அவர்களில் பலர் ஐந்து காரணங்களைத் தருகிறார்கள் என்று புகழ்பெற்ற விஞ்ஞானி நர்லிகர் சொல்கிறார்.

1. வானவியலைப் போலவே சோதிடமும் கோள்களை ஆதாரமாகக் கொண்டது. வானவியல், அறிவியலின் அங்கமாக இருக்கும்போது சோதிடம் ஏன் இருக்கக் கூடாது?

2. சில சோதிடர்களின் கணிப்பு துல்லியமாக இருக்கிறது என்பது உலகறிந்த ஒன்று. எனவே, அவர்களது சோதிடத்தையாவது அறிவியல் என்று ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது?

3. வானிலை மற்றும் மருத்துவத் துறையை எடுத்துக்கொள்வோம். வானிலை அறிவிப்புகள் பொய்த்துப்போகின்றன. மருத்துவரின் சிகிச்சை பலனளிக்காமல் போகிறது. இவற்றை அறிவியலின் அங்கமாக எடுத்துக்கொள்ளும்போது, சோதிடத்தை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது?

4.சோதிடத்தைச் சரியாகப் படிக்காதவர்கள் சொல்வதுதான் பொய்த்துப்போகிறது. நன்றாகப் படித்தவர்கள் சொல்வது பொய்க்காது. அவர்கள் சொல்வதையாவது அறிவியல் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். போலிகளை வைத்துக்கொண்டு, இந்தத் துறையையே குறைசொல்ல முடியாது.

5. அறிவியலுக்குக் கொடிபிடிப்பவர்கள் சோதிடத்தைப் படிக்காமலும் சோதனைக்குள்ளாக்காமலும் அகந்தை யோடு அதைப் புறந்தள்ளுகிறார்கள்.

அறிவியல் என்றால் என்ன?

அறிவியலைப் பொறுத்தவரையில், அதன் எந்த ஒரு முடிவும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஒருவர் சோதனைசெய்து அடைந்த அதே முடிவை, அதே சோதனையைச் செய்த அனைவரும் அடைய வேண்டும். “எனக்குத்தான் சரியாக வரும்; உங்களுக்கு வராது” என்று எந்த விஞ்ஞானியும் சொல்ல முடியாது. ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோல் பிசுபிசுத்துப்போனதன் முக்கியக் காரணம் இதுதான். அறிவியல் சோதனைகளும் கண்டதறிதல்களும் புள்ளியியல் முறைப்படி விளக்கக்கூடியதாக வடிவமைக்கப்பட வேண்டும். இவ்வளவு பாதுகாப்புகள் இருந்தும் அறிவியல் நாள்தோறும் நுண்ணிய மாறுதல்களை அடைந்துகொண்டே இருக்கிறது. நியூட்டனின் விதிகள் ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவத்தால் மாறுதல்களை அடைந்தன என்பது நாம் அறிந்ததே.

ஐந்து பதில்கள்

இனி பதில்களுக்கு வருவோம்.

1.அறிவியல் கடும் சோதனைகளுக்குத் தன்னை உட்படுத்திக்கொண்டிருக்கிறது. அதனால், மாறுதல்களையும் அடைந்திருக்கிறது. உதாரணமாக, புளூட்டோ என்ற ‘முன்னாள்’ கோள், இன்று கோளாக அடையாளம் காணப்படுவது இல்லை. சோதிடம் இதே போன்று சோதனைகளுக்குத் தன்னை ஆட்படுத்திக்கொள்ள முடியுமா? அதற்கென்று தனிப்பட்ட விதிகள் ஏதாவது இருக்கின்றனவா? கணிப்புகள் பொய்யானால் தத்துவம் பொய்யானது என்று ஏற்றுக்கொள்ளப்படுமா? இவற்றுக்கெல்லாம் பதில், ‘இல்லை’ என்றுதான் வரும்.

2.கார்ல் பாப்பர் என்ற அறிஞர் கூறியதுபோல் எந்த அறிவியல் கொள்கையும் ஒரே ஒரு தடவை உண்மையற்றது என்று நிரூபிக்கப்பட்டால், அந்தக் கொள்கையே உண்மையற்றதாக ஆகிவிடும். உதாரணமாக, நியூட்டனின் விதிகளின்படிதான் திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், நெல்லையிலிருந்து சென்னை எழும்பூருக்குக் குறித்த நேரத்தில் வந்தடைகிறது. ஒரே ஒரு நாள் அது எழும்பூருக்குப் பதிலாக திருவனந்தபுரம் சென்றால் விதிகள் பொய்த்துவிடும். மாறாக, சோதிடத்தில் பலிப்பதைவிட பொய்ப்பதுதான் அதிகம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்கிறார்கள். யார் சொல்வதை உண்மை என்று எடுத்துக்கொள்வது? சோதிடத்துக்கான பாடப் புத்தகங்களை எப்படித் தயாரிப்பது?

3.வானிலை அறிவிப்புகளிலும் மருத்துவத்திலும் பிழைகள் இல்லாமல் இல்லை. ஆனால், அவை அறிவியல் முறையை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. அவற்றின் முடிவுகள் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. எனவே, இன்று ஏறத்தாழ, அல்லது துல்லியமாக வானிலையைக் கணிக்க முடிகிறது; நோயின் தன்மையை அறிய முடிகிறது. சிகிச்சை முறைகள் சீர்படுத்தப்படுகின்றன. இதுபோன்று சோதிடத்தில் நடக்கிறதா?

4. உங்களில் யாருக்காவது சொன்னவை ‘அனைத்தும்’ பொய்க்காத சோதிடரைத் தெரியுமா? அல்லது சொன்னவை ஏன் பொய்த்தன என்பதை அறிவியல் முறைப்படி விளக்க முடியுமா?

5.சோதிடத்தை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகளின் நூல்கள் பல உள்ளன. இவற்றில் ஒன்றுகூட சோதிடத்துக்குச் சாதகமான தீர்ப்பைத் தரவில்லை.

பார்னம் விளைவு

உளவியலில் பார்னம் விளைவு என்ற அம்சம் ஒன்று உண்டு. பார்னம் சர்க்கஸின் வெற்றிக்குக் காரணம், அதன் விதவிதமான ஆட்டங்கள் பலதரப்பட்ட மக்களுக்குப் பிடித்திருப்பதுதான். எல்லோருக்கும் எல்லாமும் பிடித்திருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. ஆனாலும், ஒன்றிரண்டு ஆட்டங்கள் பிடித்திருப்பதால் சர்க்கஸ் முழுவதும் பிடித்திருக்கிறது. இதே போன்று பல கணிப்புகள் சொல்லப்பட்டாலும், பலித்திருக்கும் கணிப்பை மட்டும் மனம் நினைவில்கொள்கிறது.

நம்பிக்கை சார்ந்த எதையும் மக்களுக்குத் தர்க்கரீதியாகப் புரியவைப்பது கடினம். சோதிடம் நம்பிக்கையைச் சார்ந்தது.

Share this:

Write a Reply or Comment

fourteen + eleven =