அருள்மிகு தாமோதரப்பெருமாள் திருக்கோயில் வரலாறு
மூலவர் : தாமோதரப்பெருமாள்
உற்சவர் : தாமோதரப்பெருமாள்
தாயார் : திருமாலழகி
தல விருட்சம் : வில்வம், புன்னை
தீர்த்தம் : விபுல சரஸ், சர்ப்ப தீர்த்தம்
ஊர் : தாமல்
மாவட்டம் : காஞ்சிபுரம்
ஸ்தல வரலாறு:
மாலவனின் திருநாமங்கள் ஆயிரம். அந்த ஆயிரம் திருநாமங்களில் பன்னிரு திருநாமங்களான கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திருவிக்ரமன், வாமணன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் முதலானவை மிகவும் புகழ் பெற்றவை. இங்கே நாம் பார்க்க இருப்பது, தாமோதரன் என்ற திருநாமத்துடன் பெருமாள் வீற்றிருக்கும் ஒரு ஆலயத்தைத்தான்.
வெண்ணெய் திருடும் குழந்தை கண்ணன் மீது, அக்கம் பக்கத்தவர்கள் யசோதையிடம் குறை சொல்லிக் கொண்டே இருந்தார்களாம். யசோதாதேவி கண்ணனின் விஷமத்தைக் பொறுக்க முடியாமல், ஒரு கயிற்றைக் கொண்டு உரலுடன் சேர்த்துக் கட்டிவிட்டாள். அன்பிற்குக் கட்டுப்பட்டு கண்டுண்ட கண்ணன், உரலுடன் இரண்டு மரங்களுக்கு இடையில் புகுந்து இரு தேவர்களுக்கு சாப விமோசனம் அளித்தருளினான். இதைக்கண்டு அனைவரும் வியந்து போனார்கள். கண்ணனின் வயிற்றில் கயிறு பதிந்து, அது வடுவாக மாறியது.
வயிற்றில் பதிந்த வடுவின் காரணமாக அவருக்கு ‘தாமோதரன்’ என்ற திருப்பெயர் உண்டானது. கண்ணனின் இந்த லீலைகளில் மனதைப் பறிகொடுத்த மகரிஷிகள் சிலர், பெருமாளிடம் “இதே திருப்பெயருடன் இத்தலத்தில் எழுந்தருளி மக்களைக் காத்தருள வேண்டும்” என்று பிரார்த்தித்துக் கொண்டனர். அதை ஏற்றுக்கொண்ட பெருமாள், மகாலட்சுமித் தாயாருடன் தாமல் திருத்தலத்தில் தாமோதரன் என்ற திருநாமம் கொண்டு எழுந்தருளினார். இத்தலத்துப் பெருமாள் கேட்டதைக் கொடுக்கும் தாமோதரனாகவும், கேட்டதைக் கொடுக்கும் திருமாலழகியாக தாயாரும் எழுந்தருளி பக்தர்களின் பிரார்த்தனை களைப் பூர்த்தி செய்து வருகிறார்கள்.
கோயில் சிறப்புகள்:
- தாய் யசோதையால் கயிற்றினால் கட்டப்பட்ட காரணத்தினால் வயிற்றில் தழும்பினை ஏற்றுக்கொண்டவர், தாமோதரன். சமஸ்கிருதத்தில் `தாமா’ என்றால் `கயிறு’, `உதாரம்’ என்றால் `வயிறு’ என்று பொருள்படும். இதனாலேயே பெருமாள் `தாமோதரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
- இத்திருத்தலத்தில் நாபிக்கமலத்திற்குக் கீழே நீண்ட தழும்புடன் பெருமாள் காட்சி தருவது எங்கும் காணப்படாத அபூர்வ காட்சியாகும்.
- சுமார் ஆயிரம் ஆண்டு களுக்கு முன் இத்திருக்கோவில், மத்வ சமூகத்தைச் சேர்ந்தவர் களால் ஆராதனை செய்யப்பட்டு வந்தது. காலப்போக்கில் வைணவர்களுக்கு தானமாக இந்த கோவில் வழங்கப்பட்டதால் ‘தானமல்லபுரம்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. பின்னர் மருவி இவ்வூர் ‘தாமல்’ என்றானதாக தெரிகிறது.
- மூலவர் தாமோதரப் பெருமாள் கருவறையில் உபய நாச்சியார்களோடு அழகு மிளிரக் காட்சி தந்து அருள்வதைக் காணக் கண்கோடி வேண்டும். இத்திருத் தலத்தில் தாமோதரன் நான்கு திருக்கரங்களோடு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார். நான்கு திருக்கரங்களும் முறையே சங்கு, சக்கரம் ஏந்தியும், வரத, ஊரு ஹஸ்த முத்திரைகளுடனும் காணப்படுகின்றன.
- தனிக் கோயில் நாச்சியார்களிடமும் ஒரு தனிச்சிறப்பு. பெயரே தூய தமிழில் ‘‘ஸ்ரீ திருமாலழகி’’ என்ற திருநாமத்துடன் அழகுடன் திவ்ய தரிசனம் காட்சி தருகிறாள்.
- திருமாலழகி என்ற அழகிய திருநாமத்தோடு, தனிச் சன்னிதியில் அமர்ந்த கோலத்தில் தாயார் காட்சியளிக்கிறார். இந்த தாயாருக்கு நான்கு கரங்கள் உள்ளன. இவரது உற்சவத் திருமேனியின் திருநாமமும் திருமாலழகி என் பதுதான். மற்றொரு தனிச் சன்னிதியில் ஆண்டாள் காட்சி தருகிறார். இச்சன்னிதியில் ஆண்டாளின் உற்சவர் திருமேனியும் இருக்கிறது.
- முன் மண்டபத்தில் விஷ்வக்சேனர், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார், குமுதவல்லி, திருமங்கையாழ்வார், திருக்கச்சி நம்பி, ராமானுஜர், வேதாந்த தேசிகர் முதலான ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியார்களின் சிலை வடிவங்கள் காணப்படுகின்றன. ஆஞ்சநேயர் ஒரு சிறிய சன்னிதியில் எழுந்தருளியுள்ளார்.
- பொதுவாக பெருமாள் நெற்றியில் திருமண், ஸ்ரீசூர்ணத்துடன் காட்சியளிப்பது வழக்கம். ஆனால் இத்தலத்தில் மூலவர் தாமோதரப் பெருமாள், ரோகிணி நட்சத்திரம் அன்று நெற்றியில் கஸ்தூரி திலகத்துடன் ராஜ அலங்காரத்தில் அருள்கிறார். மத்வர்களுக்கு மதிப்பு தரும் வகையில் இத்தல உற்சவர் தினமும் கஸ்தூரித் திலகத்துடன் காட்சி தருகிறார்.
- இத்தலத்து மூலவரின் கால்களில் வெள்ளிக் கொலுசுகள் மின்னுகின்றன. குழந்தைச் செல்வம் வேண்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து தாமோதரப் பெருமாளை வணங்கி, குழந்தைச் செல்வம் தந்தருளுமாறு வேண்டிக்கொள்கிறார்கள். தாமோதரப் பெருமாளின் திருவருளால் மழலைச் செல்வம் வாய்க்கப் பெற்ற பின்னர், இத்தலத்திற்கு வந்து பெருமாளுக்கு வெள்ளிக்கொலுசை சமர்ப்பித்து வணங்கி மகிழ்கிறார்கள்.
- ஒரே நாளில், தாமல் தாமோதரப் பெருமாள், திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள், திருப்பாற்கடல் ரங்கநாதன் ஆகிய மூன்று திருத்தலப் பெருமாள்களையும் தரிசிப்பது மிகவும் சிறப்பானதாகக் கூறப்படுகின்றது. இம்மூன்று திருத்தலங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன
திருவிழா:
இவ்வாலயத்தில் சித்திரையில் மகாசாந்தி ஹோமம் மற்றும் கோடை உற்சவம், வைகாசி மாதத்தில் வஸந்த உற்சவம், ஆனி மாதத்தில் தாமோதரப் பெருமாள் லட்சார்ச்சனை, கருட சேவை, அன்னக்கூட திருப்பாவாடை உற்சவம், ஆடியில் தாயாருக்கு திருவிளக்கு பூஜை, ஆவணியில் பவித்ரோத்சவம், புரட்டாசி மாதம் முழுவதும் திருப்பதி ஸ்ரீனிவாச திருக்கோலத்தில் பெருமாள் சேவை சாதித்தல், கார்த்திகையில் ஆஞ்சநேயர் லட்சார்ச்சனை, மார்கழியில் ஆண்டாள் போகி உற்சவம், மாசியில் மாசி மகம், பங்குனியில் பங்குனி உத்திரத் திருக்கல்யாண உற்சவம் முதலான விழாக்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
திறக்கும் நேரம்:
காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை
முகவரி:
அருள்மிகு தாமோதரப்பெருமாள் கோயில்,
தாமல், 631551
காஞ்சிபுரம்
போன்:
+91 96294 06140, 99448 12697
அமைவிடம்:
சென்னையில் இருந்து வேலூா் செல்லும் நெடுஞ்சாலையிலும், காஞ்சிபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் தாமல் கிராமம் உள்ளது. திருப்புட்குழி என்ற இடத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயத்தை அடையலாம்.