அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : சற்குணலிங்கேஸ்வரர், கருக்குடிநாதர், பிரம்மபுரீசுவரர்
அம்மன் : அத்வைதநாயகி, கல்யாணி அம்பிகை, சர்வாலங்காரநாயகி
தீர்த்தம் : எம தீர்த்தம்
புராண பெயர் : மருதாநல்லூர், மருதாந்த நல்லூர்
ஊர் : கருக்குடி
மாவட்டம் : தஞ்சாவூர்
ஸ்தல வரலாறு:
இராமேசுவர வரலாறு இத்தலத்திற்கும் சொல்லப்படுகிறது. ராமாயண காலத்தில் ராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன் இத்தலத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இராமேஸ்வரத்தில் நடந்தது போல குறித்த நேரத்தில் வழிபாடு செய்ய அனுமன் சிவலிங்கம் கொண்டு வர தாமதமானதால், ராமன் தன் அருகிலிருந்த மணலிலேயே இரண்டு கைகளாலும் லிங்கம் பிடித்து இத்தலத்தில் வழிபட்டார் என்றும் அதுவே தற்போதைய பிருதிவி லிங்கமாகும் என்றும் கூறப்படுகிறது. இன்றும் லிங்கத் திருமேனியில் கரங்களின் அடையாளம் உள்ளது. இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் போது கவசம் அணிவித்த பின்னரே அபிஷேகம் நடைபெறுகிறது. அனுமன் கொண்டு வந்த லிங்கம் கோயிலின் ஈசான்ய பாகத்தில் அனுமந்த லிங்கம் என்ற பெயரில் தனி சந்நிதியில் உள்ளது
கோயில் சிறப்புகள்:
- இத்தல இறைவன் மணலால் ஆன சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
- சிறிய பழைமையான கோயில். கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. சுவாமி, அம்பாள் ஆகிய இரு சந்நிதிகளும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இவ்வாலயத்தின் சிறப்பாகும். கருவறை விமானங்கள் மிகவும் உயர்ந்தவை. வாயிலில் விநாயகர், கார்த்திகேயர் சந்நிதிகள் உள்ளன. பக்கத்தில் உள்ளது அநுமத்லிங்கம்
- கருவறையில் உள்ள சிவலிங்கம் மிகவும் சிறியது. இத்தல இறைவன் மணலால் ஆன சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மண்ணினை கையால் பிடித்து செய்த சுவடுகள் தெரிகிறது. அரையடி உயர சிறிய ஆவுடையார். பீடம் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது.
- கோஷ்டங்களில் நர்த்தனவிநாயகர், இருபுறம் பூதகணங்கள், தட்சிணாமூர்த்தி (மேலே வீணாதர தட்சிணாமூர்த்தி), லிங்கோத்பவர் ஆகியோரின் மூர்த்தங்கள் உள்ளன. பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், , லிங்கோத்பவர், முருகன் உள்ளனர்.
- இத்தல விநாயகர் வலம்புரி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். பிரம்மா, சற்குணன் என்ற அரசன் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபபட்டுள்ளனர். இதனால் இறைவன் சற்குணலிங்கேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
- சுவாமிக்கு வலது புறத்தில் கிழக்கு நோக்கி கல்யாண கோலத்தில் அம்பிகை அமர்ந்துள்ள தலங்களில் இத்தலமும் ஒன்றாகும்.
- வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “செப்பமுடன் ஓங்கும் திருத்தொண்டர் உள் குளிர, நல் அருளால் தாங்கும் கருக்குடி வாழ் சங்கரனே” என்று போற்றி உள்ளார்.
- திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
- இத்தலம் தற்போது ‘மருதாந்தநல்லூர் ‘ என்று மக்களால் வழங்கப்படுகிறது
- சற்குணன் என்ற மன்னன் பூஜித்துப் பேறு பெற்றதால், இத்தல இறைவர் இப்பெயர் பெற்றார்.
- இராமேசுவர வரலாறு இங்கும் சொல்லப்பட்டு, அநுமத்லிங்கம் என்ற பெயரால் வழிபடப் பெறுகிறது
திருவிழா:
மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 10 மணி வரை,
மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில்
மருதாநல்லூர் – 612402
தஞ்சாவூர் மாவட்டம்
போன்:
+91- 99435 23852
அமைவிடம்:
கும்பகோணம் – நீடாமங்கலம் சாலையில் சாக்கோட்டைக்கு தென்கிழக்கில் 1.5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 6 கி.மீ.தொலைவிலுள்ள இத்தலத்திற்கு நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.