அருள்மிகு சற்குணேஸ்வரர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : சற்குணேஸ்வரர்
அம்மன் : சர்வாங்க நாயகி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : எம தீர்த்தம்
புராண பெயர் : கருவிலிக்கொட்டிட்டை, திருக்கருவிலி
ஊர் : கருவேலி
மாவட்டம் : திருவாரூர்
ஸ்தல வரலாறு:
சிவபெருமானின் மாமனாரான தட்சன் யாகம் ஒன்றை நடத்தினான். மருமகனுக்கு அழைப்பு இல்லாமல் யாகம் நடத்தப்பட்டது. யாகத்திற்கு செல்ல விரும்பிய தாட்சாயணியை சிவன் தடுத்தார். அவரது சொல்லைக் கேளாமல் தாட்சாயணி யாகத்திற்கு சென்றாள். அழைப்பில்லாமல் வந்த மகளை அனைவரது முன்னிலையிலும் தட்சன் அவமானப்படுத்தினான். அவமானம் தாங்காத பார்வதி ஹோம அக்னியில் விழுந்து எரிந்தாள். தாட்சாயணியின் பிரிவைத் தாங்கமுடியாத சிவபெருமான், யாக குண்டத்திற்கு வந்து அன்னையின் உடலைத் தோளில் சுமந்துகொண்டு பித்துபிடித்தவர் போல் ஆடினார்.
சிவனின் ருத்ர தாண்டவத்தால், ஈரேழு லோகங்களும் அதிர்ந்தன. தேவர்கள் நடுங்கினர். அவர்கள் நாராயணனை அணுகி, சிவபெருமானைச் சமாதானம் செய்ய வேண்டினர். நாராயணன் சக்ராயுதத்தை ஏவி, தாட்சாயணியின் உடலைச் சிறிது சிறிதாக துண்டித்தார். உடலின் பாகங்கள் 51 இடங்களில் விழுந்தன. அவை மகாசக்தி பீடங்கள் என அழைக்கப்பட்டன.
தாட்சாயிணியை இழந்த ஈசன் பித்துப்பிடித்த மாதிரி ஈசன்(பித்தன்) ஊர் ஊராக சுற்றித்திரிந்து இறுதியில் அமர்ந்த இடம் கருவிலி என தல புராணம் கூறுகிறது.அப்போது ஈசனுடன் சேர்வதற்காக அன்னை பார்வதி சர்வ லட்சணத்துடன அழகே உருவாக மீண்டும் தோன்றிய இடம் கருவிலி ஆலயத்தில் இருந்து அரை கீ மீ தொலைவில் இருக்கும் அம்பாச்சிபுரம் என்று சொல்கிறது புராணம். இறைவனுடன் சேர அம்மை தங்கி ஈசனை அர்சித்து வழிபட்ட இடமே அம்பாச்சிபுரம் ஆகியிருக்கிறது.முப்புரமும் எரித்த ஈசன் ஆனந்தக் களிப்பில் கொடுகொட்டி என்ற ஆட்டத்தை இத்தலத்தில் நிகழ்த்தினாராம்.எனவே இக்கோவில் கொட்டிடை என்று அழைக்கப்படுகிறது
கோயில் சிறப்புகள்:
- சற்குணன் என்னும் அரசன் வழிபட்டு பிறவிப் பிணியை போக்கிய தலமாதலால் இனி கரு இல்லை அதாவது பிறப்பு இல்லை என்னும் கருத்தில் கருவிலி என்னும் பெயர் பெற்றது. கோயில் பெயர் கொட்டிட்டை. கொடுகொட்டி என்பது சிவ நடனம். அது மருவி ‘கொட்டிட்டை’ என்று ஆனது.
- மூலவர் சற்குண நாதேஸ்வரர் என்னும் திருநாமத்துடன், பெரிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பாளும் சர்வாங்க நாயகி என்னும் திருநாமத்துடன், பெரிய வடிவத்தில் அழகாக காட்சித் தருகின்றாள்.
- தேவாரம் பாடப்பெற்ற காலத்தில் இத்தலம் கருவிலி என்று அழைக்கப்பட்டது. கோவிலின் பெயர் கொட்டிட்டை. அரசலாற்றங்கரையில் (காவிரியின் கிளை நதி) இத்தலம் அமைந்துள்ளது.
- கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜ கோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் இறைவன் கருவறை ஒரு முன் மண்டபத்துடன் அமைந்துள்ளது. வெளிப் பிராகாரத்தில் கணபதி பாலசுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன.
- கருவறை வெளிப்பிரகாரச் சுவர் மாடங்களில் கோஷ்ட மூர்த்தங்களாக அமைந்துள்ள நர்த்தன விநாயகர், அர்த்த நாரீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, பைரவர் உருவங்கள் பழைமையும் கலைச்சிறப்பும் வாய்ந்தவை.
- கருவறை முன் மண்டபத்தில் நடராஜர், ஆஞ்சனேயர் ஆகியோரை தரிசிக்கலாம். கருவறையில் இறைவன் சற்குண நாதேஸ்வரர் என்ற பெயருடன் லிங்க வடிவில் அருட்காட்சி தருகிறார்.
- அம்பாள் கோயில் தனிக்கோயிலாக வெளிப் ரகாரத்தில் வலதுபுறம் அமைந்துள்ளது. அம்பாள் சர்வாங்க சுந்தரி பெயருக்கு ஏற்றாற்போல் மிகுந்த அழகுடன் கிழக்கு நோக்கி 4 திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். அண்ணலின் கவனத்தைத் தன் பக்கம் இழுப்பதற்கு அன்னை உலகத்து அழகை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு வந்தாளாம் இங்கே, பக்கத்தில் ஓர் ஊரில் சில காலம் இருந்த அம்பிகை பின் இங்கு வந்து சர்வாங்க சுந்தரியாக இறைவனின் முன் நின்றாளாம். இவளைத் தரிசித்த இளம்பெண்களின் கல்யாணம் உடனே ஆகிவிடுகிறது என்றும், குழந்தை இல்லாதவர்க்குக் குழந்தை பிறக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
- இக்கோவிலில் நவக்கிரத்திற்குத் தனிச் சந்நிதி இல்லை.
- இவ்வாலயத்தின் தீர்த்தம் எமதீர்த்தம். இது கோவிலுக்கு வெளியே உள்ளது. கங்கையைச் சடையில் கொண்ட ஈசனின் சிற்பம் குளத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. சற்குணன் என்னும் அரசன் பூசித்துப் பிறவிக்கடலைக் கடந்த தலமாதலால் சற்குணேஸ்வரபுரம் என்றும் இத்தலதிற்குப் பெயர் உண்டு.
- கருவிலி என்ற பெயரே இனி ஒரு தாயின் கருவிலே உதிக்க வேண்டாம் என்னும் மோட்சத்தைக் கொடுக்கும்படியான நிலையைக் குறிக்கும். இந்தக் கோவில் சற்குணேஸ்வரரையும், சர்வாங்க சுந்தரியையும் தரிசித்தால் அந்தப் பேறு கிடைக்கும் என்பதையே உணர்த்துகிறது.
- இந்திரனும் தேவர்களும் இத்தல இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர்.
- சோழர்களின் திருப்பணி பெற்றத் தலம்.
- திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார்.
திருவிழா:
மகாசிவரத்திரி, மார்கழி திருவாதிரை
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 1 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சற்குணேஸ்வரர் திருக்கோயில்,
கருவேலி, (சற்குணேஸ்வரபுரம்) – 605 501 .
திருவாரூர் மாவட்டம்.
போன்:
+91-4366-273 900, 94429 32942.
அமைவிடம்:
மயிலாடுதுறை திருவாரூர் சாலை வழியிலுள்ள பூந்தோட்டம் என்ற ஊரை அடைந்து, அங்கிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் கருவிலிகொட்டிட்டை தலம் உள்ளது. இன்றையநாளில் இவ்வூர் சற்குணேஸ்வரபுரம் என்று அழைக்கப்படுகிறது. கும்பகோணம் – நாச்சியார்கோவில் – எரவாஞ்சேரி – பூந்தோட்டம் சாலை வழியில் கூந்தலூர் அடைந்து அங்கிருந்து வடக்கே அரிசிலாற்றுப் புதுப் பாலம் கடந்து சுமார் 1 கி.மீ. சென்றால் அரசலாற்றின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தை அடையலாம். திருவீழிமிழிலை என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து கிழக்கில் 6 கி.மீ. தொலைவிலும், வடக்கே சுமார் 4 கி.மீ. தொலைவில் திருநல்லம் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமும் உள்ளது.