April 17 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் செருகுடி

  1. அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     சூட்சுமபுரீஸ்வரர், மங்களநாதர்

அம்மன்         :     மங்களநாயகி

தல விருட்சம்   :     வில்வம்

தீர்த்தம்         :     மங்களதீர்த்தம்

புராண பெயர்    :     திருச்சிறுகுடி

ஊர்            :     செருகுடி

மாவட்டம்       :     திருவாரூர்

 

ஸ்தல வரலாறு:

ஒருமுறை கைலாயத்தில் பரமசிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினார்கள். அதில பார்வதி வெற்றி பெற்றாள். அதனால் வெட்கமடைந்த சிவபெருமான் எங்கோ மறைந்து விட்டார். கலக்கமடைந்த பார்வதி சிறுகுடி தலத்திற்கு வந்து மங்கள தீர்த்தத்தை உண்டாக்கி, தன் கையால் பிடி மணலை எடுத்து அதைச் சிவலிங்கமாகப் பிடித்து வைத்து வழிபட்டாள். சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுத்து அவளை மீண்டும் ஏற்றுக் கொண்டதாக தலபுராணம் கூறுகிறது. சிறுபிடி என்பது மருவி சிறுகுடி என்றாயிற்று. திருக்கயிலையில் இருக்கும் இறைவன் சூட்சுமமாய் மறைந்து இங்கு மீண்டும் தோன்றியதால் இத்த தலத்திற்கு சூட்சுமபுரி என்றும் இறைவனுக்கு சூட்சுமபுரீஸ்வரர் என்றும் பெயர்கள் உண்டாயின. இறைவன் சிறுகுடியீசர் என்றும அழைக்கப்படுகிறார்.

 

திருஞானசம்பந்தர் தமது 12-வது வயதில் பல்லக்கில் வந்து, இங்குள்ள சுவாமியை தரிசனம்செய்திருக்கிறார். அவர் வருகையை அறிந்த திருநாவுக்கரசர், ‘வயதில் சிறியவராக இருந்தாலும் அவருக்கு இறைவன் அருள் புரிந்திருக்கிறான். அவரை நாமும் தரிசிக்கவேண்டும்’ என்று நினைத்தவர், திருஞானசம்பந்தரை தரிசித்ததுடன், அவருடைய பல்லக்கையும் சுமந்துவந்தார். அதை அறியாத திருஞானசம்பந்தர், ‘சிவனடியார் திருநாவுக்கரசரை சந்திக்க திருவிழிமழலைக்குச் செல்லுங்கள்’ என்று கட்டளையிடுகிறார். ‘அடியேன் இங்குதான் இருக்கிறேன்’ என்று திருநாவுக்கரசர் சொல்ல, அதிர்ந்துபோன திருஞானசம்பந்தர், கீழே இறங்கி ‘என்னை நீங்கள் சுமப்பதா?’ என்று கூறி காலில் விழுந்து வணங்கியிருக்கிறார்.  இந்த அரிய நிகழ்வு நடந்த தலம் இது என்பதால், கூடுதல் சிறப்பு

 

கோயில் சிறப்புகள்:

  • கைப்பிடி மணலை எடுத்து சிவலிங்கம் உண்டாக்கியதால், இந்த ஊருக்கு சிறுபிடி என்று பெயர். அது மருவி தற்போது, சிறுகுடி என்று அழைக்கப்படுகிறது.

 

  • மங்கள தீர்த்தம் உண்டாக்கியதால், மங்களாம்பிகை என்று அம்பிகை அழைக்கப்படுகிறாள்.

 

  • ஆலயத்தில் சிவ பெருமான், அம்பாளை ஆசையுடன் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டிருக்க, அம்பாள் நாணத்துடன் அருகில் நின்றிருக்கும் கோலத்தை காண முடியும். இது போன்ற கோலத்தை வேறு எங்கும் காண முடியாது.

 

  • மூலவர் கைபிடி அளவிலான மணலால் ஆனதால் இங்கு மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. மூலவரின் லிங்க திருமேனி எப்போதும் கவசம் அணிவித்த படியே இருக்கும். இங்கு அம்பாளுக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் கொடி மரமும் கிடையாது.

 

  • அன்னை பார்வதி தேவி அணைத்துக் கொண்டதால் இத்தலத்தில் உள்ள லிங்கத்தின் நெற்றியில் பள்ளமும், இருபுறமும் கையால் பிடித்த தடமும் காணப்படுகிறது. இறைவனை அம்பிகை ஆலிங்கனம் செய்துகொண்டதால் இத்தழும்புகள் உண்டானது.

 

  • உற்சவ மூர்த்திகளில் ஒருவரான சந்தோஷ ஆலிங்கன மூர்த்தி, அம்பாளின் தோளில் கை போட்டபடி காட்சி தருகிறார். இவர் வருடத்தில் பங்குனி உத்திர நாளில் மட்டுமே காட்சி தருவார். இந்நாளில் சந்தோஷ ஆலிங்கன மூர்த்திக்கும் மங்களாம்பிகைக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

 

  • குழந்தை உருவில் கையில் பால் கிண்ணத்துடன், இடுப்பில் அரைஞாண்கயிற்றுடன் காட்சிதரும் திருஞானசம்பந்தர், இங்கு வீற்றிருக்கிறார்.

 

  • சங்க இலக்கியத்தில் புகழப்படும் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளனாம் ‘பண்ணன்’ என்னும் கொடை வள்ளல் வாழ்ந்த தலம்.

 

  • “தேனமலர் பொழிலணி சிறுகுடி” – என்னும் சம்பந்தரின் வாக்குக்கேற்ப – சுவாமிக்கு முன்னால், முன் மண்டபதில் வலப்புறத்தில் சுவர் ஓரத்தில் தேனடை உள்ளது. சாளரம் அமைத்து அதன்வழியே வெளியிலிருந்து தேனீக்கள் வந்து போகுமாறு செய்து, மண்டபத்தின் உட்புறத்தில் இரும்புவலை போட்டுப் பாதுகாத்துள்ளனர்.

 

  • மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கியவாறு உள்ளது. வாயிலின் உள்ளே சென்றால் பலிபீடம் நந்தி ஆகியன உள்ளன. இவ்வாலயத்தில் கொடிமரம் இல்லை. வெளிப் பிரகாரத்தில் மங்களவிநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சந்நிதிகள் ஆகியவை உள்ளன.

 

  • கருவறை தெற்கு கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மேற்கு கோஷ்டத்தில் மகாவிஷ்ணு, வடக்கு கோஷ்டத்தில் பிரம்மாவையும், வழக்கமாக துர்க்கை இருக்குமிடத்தில் அர்த்தநாரீஸ்வரரையும் காணலாம். சண்டிகேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. கருவறைச் சுற்றில் மங்கள விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர் சந்நிதி ஆகியவையும் உள்ளன.

 

  • திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. முதல் பாடலில் சிறுகுடி இறைவனை வழிபடுவர்கள் இவ்வுலகிற்கு அப்பாலுள்ள சிவலோகத்தை அடைவார்கள் என்று குறிப்பிடுகிறார்.

 

  • வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “ஆம் புவனம் துன்னும் பெருங்குடிகள் சூழ்ந்து வலம் செய்து உவகை மன்னும் சிறுகுடி ஆன்மார்த்தமே” என்று போற்றி உள்ளார்.

 

திருவிழா: 

மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:

அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில்

சிறுகுடி – 609503

திருவாரூர் மாவட்டம்

 

போன்:    

+91- 9381044986

 

அமைவிடம்:

கும்பகோணம் – நாச்சியார்கோவில் – கூந்தலூர் – பூந்தோட்டம் சாலையில் கூந்தலூர் கடந்து கடகம்பாடியை அடைந்து அங்கிருந்து வடக்கே அரசலாற்றுப் பாலம் தாண்டி சுமார் 3 கி.மீ. தொலைவில் சிறுகுடி தலம் இருக்கிறது. திருபாம்புரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற தலத்திலிருந்து மேற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரளத்தில் இருந்தும் திருபாம்புரம் வழியாக இத்தலத்திறகு வர சாலை வசதி உள்ளது.

Share this:

Write a Reply or Comment

17 + nine =