அருள்மிகு முண்டககண்ணியம்மன் திருக்கோயில் வரலாறு
மூலவர் : முண்டககண்ணியம்மன்
தல விருட்சம் : ஆலமரம்
புராண பெயர் : மயிலாபுரி
ஊர் : மயிலாப்பூர்
மாவட்டம் : சென்னை
ஸ்தல வரலாறு:
சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் இருக்கும் இடத்தில் ஒரு குளம் இருந்துள்ளது. அந்த குளக்கரையில் பல நூறு ஆண்டு வயதுடைய மிகப் பெரிய ஆலமரம் இருந்தது. ஒரு நாள் அந்த ஆலமரத்தடியில் அப்பகுதி மக்கள் அமர்ந்து இருந்தபோது, அம்மன் தன்னை சுயம்புவாக வெளிப்படுத்தி காட்சி தந்தாள் என்கிறது இத்தலத்தின் வரலாறு. மேலும் தாமரை மொட்டு வடிவத்திலேயே, தன்னை அம்மன் சுயம்புவாக வெளிப்படுத்திக் கொண்டதாக இக்கோவில் புராணம் கூறுகிறது. முண்டகம் என்றால் தாமரை என்றும் பொருள் உண்டு. அம்மன் விரிந்த பெரிய விழிகளைக் கொண்டவள் என்ற பொருளில் ‘முண்டகக் கண்ணியம்மன்’ என்கின்றனர். அம்பிகை, தாமரை போன்ற கண்ணுடையாள் என்றும் கொண்டாடுகின்றனர்.
கோயில் சிறப்புகள்:
- மயிலாப்பூர். மயிலை என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது கபாலீஸ்வரர் கோயில்தான். அதனால்தான், மயிலையே கயிலை… கயிலையே மயிலை என்கிறார்கள் பக்தர்கள். இந்த மயிலையின் காவல் தெய்வங்களாகத் திகழ்பவர்கள், கோலவிழி அம்மன் மற்றும் முண்டகக்கண்ணி அம்மன்.
- மயிலாப்பூரில் முண்டகக்கண்ணியம்மன் கோவில் தெருவின் நடுப்பகுதியில், கிழக்கு முகமாக இந்தத் திருக்கோவில் அமைந்துள்ளது. எளிய மூன்று நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி கம்பீரமாக நிற்கிறது. அதன் வலது புறம் சிறிய நுழைவாயிலும் உள்ளது. கருவறைக்கு முன்பாக, இருபுறமும் துவாரபாலகிகள் வீற்றிருக்கின்றனர்.
- முண்டகக்கண்ணி அம்மன். வேறு எந்த தலத்திலும் இல்லாதபடி,எளிமைக்கு இலக்கணமாக ஓலைக் குடிசையில் எழுந்தருளியிருக்கிறாள். இக்கோவிலுக்கு ராஜகோபுரம் இருந்தாலும், அன்னை வீற்றிருக்கும் கருவறையை அலங்கரிப்பதோ எளிமையான தென்னங்கீற்றால் வேயப்பட்ட கொட்டகைதான்.
- ரேணுகாதேவியின் அவதாரங்களுள் ஒன்றாகவும், சப்த கன்னிகைகளுள் ஒருவராகவும் கருதப்படும் முண்டகக்கண்ணி அம்மன், இந்தத் தலத்தில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
- இத்தலத்தில், அன்னையின் கருவறை ஓர் எளிய தென்னங்கீற்றுக் கொட்டகைதான். இங்கு, கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் அம்மனை , ‘விரிந்த பெரிய விழிகளைக் கொண்டவள்’ என்ற பொருளில் ‘முண்டகக் கண்ணியம்மன்’ என்கின்றனர்.
- அம்மனின் திருப்பெயரான முண்டகக் கண்ணியம்மன் என்பதில் முண்டகம் என்றால் தாமரை என்று பொருள். தாமரை மலர் போன்ற கண்களை உடையவள் என்பதாலும், தாமரை மொட்டு’ போன்று தன்னை வெளிப்படுத்திக்கொண்டாள் என்பதாலும் அம்மனுக்கு முண்டகக் கண்ணி என்று பெயர் ஏற்பட்டதாகத் தலபுராணம் கூறுகிறது.
- இங்கு, மூலவராக வீற்றிருக்கும் அம்மனுக்கு உருவம் இல்லை. தாமரை மொட்டு போன்று காட்சியளிக்கும் சுயம்பின் உச்சிப் பகுதியில், சந்தனத்தைக் குழைத்து உருவம் செய்து வழிபடுகிறார்கள். சந்தன உருவத்தில் குங்குமம் வைத்து, தலைக்குப் பின்புறத்தில் நாக கிரீடம் சூட்டிப் பார்க்கும்போது அம்மன் அமர்ந்த நிலையில் காட்சியளிப்பதைப் போன்றே இருக்கும்.
- மூலவர் சந்நிதிக்கு இடப்புறத்தில் உற்சவர் சந்நிதி இருக்கிறது. உற்சவர் சன்னிதியின் இடதுபுறம் மகேஸ்வரி, வைஷ்ணவி, பிராமி, கவுமாரி, இந்திராணி, சாமுண்டி, வராகி என சப்த கன்னியர் சிறு கல் வடிவில் வீற்றிருக்கின்றனர். இவர்களுக்கு இருபுறத்திலும் ஜமத்கினி முனிவர் மற்றும் பரசுராமர் சுதை வடிவில் உள்ளனர்.
- பொதுவாக ஐப்பசி பவுர்ணமியில் சிவனுக்கு தான் அன்னாபிஷேகம் நடக்கும். ஆனால் இத்தலத்தில் அம்மனுக்கு அன்னாபிஷேகம் நடப்பது சிறப்பு.
- முண்டககண்ணியம்மன் சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்தி அம்சத்துடன் காட்சி தருவதாக ஐதீகம். அம்பாள் சன்னதிக்கு பின்புறத்தில் ஆலமரம் இருக்கிறது. இம்மரத்திற்குள் நாக புற்றும், அருகில் நாகதேவதை சன்னதியும் இருக்கிறது.
- நாயன்மார்களில் வாயிலார், ஆழ்வார்களில் பேயாழ்வார் அவதரித்த தலம் இது. இக்கோயிலை சுற்றி கபாலீஸ்வரர், பார்த்தசாரதி, மாதவப்பெருமாள் ஆகிய பிரசித்தி பெற்ற பிற தலங்கள் அமைந்திருக்கிறது.
- ஆடி கடைசி வெள்ளியில் 1008 மலர்க்கூடை அபிஷேகம், தை கடைசி வெள்ளியில் 108 விளக்கு பூஜை, சித்ரா பவுர்ணமியில் 1008 பால்குட அபிஷேகம் நடப்பது விசேஷம். நவராத்திரி ஒன்பதாம் நாளில் அம்பிகை, மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் வீதியுலா செல்கிறாள். இவளிடம் வேண்டுபவர்கள் வேப்பிலையை ஆடையாக அணிந்து சன்னதியை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கமும் இருக்கிறது. தினமும் மாலையில் அம்பிகை தங்கத்தேரில் உலா செல்கிறாள்.
திருவிழா:
ஆடி, தை மாதம் முழுதும் திருவிழா, சித்ராபவுர்ணமி, நவராத்திரி, ஆடிப்பூரம்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்
முகவரி:
அருள்மிகு முண்டக கண்ணியம்மன் கோயில்,
மயிலாப்பூர்,
சென்னை- 600 004.
போன்:
+91- 44 – 2498 1893, 2498 6583.
அமைவிடம்:
மயிலாப்பூர் பகுதியின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது. கபாலீஸ்வரர் கோயில் ஸ்டாப் அல்லது திருவள்ளுவர் சிலை ஸ்டாப்பில் இறங்கி நடந்தே சென்றுவிடலாம். நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மயிலாப்பூருக்கு பஸ் வசதி உண்டு.