அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : கோதண்டராமர்
தாயார் : சீதா
தீர்த்தம் : ராமதீர்த்தம்
ஊர் : முடிகொண்டான்
மாவட்டம் : திருவாரூர்
ஸ்தல வரலாறு:
முடிகொண்டான் ராமர் கோயிலானது திருவாரூர் மாவட்டம் முடி கொண்டான் என்னும் ஊரில் உள்ளது. ராமர் ராவணனை வதம் செய்வதற்காக இலங்கைக்கு செல்லும் முன் இந்தத் தலத்தில் உள்ள பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்திற்கு வருகை புரிந்தார்.அப்போது முனிவர் ராமனுக்கு விருந்து வைக்க விருப்பம் தெரிவிக்கிறார், ராமனோ இலங்கை சென்று ராவண வதம் செய்து விட்டு வந்து விருந்தில் கலந்துக் கொள்வேன் என்று வாக்குக் கொடுக்கிறார் , அதன் படி மீண்டும் இந்தத் தலத்துக்கு ராமர் விருந்து ஏற்க வந்தார் அப்போது தாம் விருந்து சாப்பிடும் முன் ஸ்ரீரங்க நாதரை பூஜை செய்த பின்பே சாப்பிடுவது வழக்கம் என்று தெரிவிக்க பரத்வாஜ முனிவர் ஸ்ரீரங்கநாதரை பிரதிஷ்டை செய்கிறார். ராமரும் அவரை வழிபட்டுவிட்டு முனிவர் தந்த விருந்தை உண்டார். விருந்து உண்ட ராமர் பரத்வாஜ முனிவருக்கு பட்டாபிஷேகத்திற்கு முன்பே முடி(மகுடம்)யுடன் இத்தலத்தில் காட்சி தந்தார். எனவே இங்குள்ள கோதண்ட ராமர் முடிகொண்டான் ராமர் என்றழைக்கப்படுகிறார்
16 வருடம் முடியப்போவதால் தமக்காக காத்திருக்கும் தம்பி பரதன் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வான் என்று கருதி அனுமனை அயோத்திக்கு அவசரமாக அனுப்பி தாம் கிளம்பி வந்து கொண்டே இருக்கும் தகவலைத் தெரிவித்துவிட்டு வரும்படி ஸ்ரீராமர் உத்தரவிட்டார். அனுமனும் அயோத்தி சென்று பரதனிடம் ராமர் கூறியவற்றை தெரிவித்துவிட்டு இங்கு திரும்பினார். அப்போது ராமர் தான் வருவதற்கு முன்பே விருந்து சாப்பிட்ட செய்தி அறிந்ததும் ஆசிரமத்திற்குள் வராமல் கோபித்துக் கொண்டு வெளியிலேயே உட்கார்ந்து கொண்டாராம். ராமரும் தனக்கு அளிக்கப்பட்ட விருந்தில் பாதியை அனுமனுக்கு அளித்து சாந்தப்படுத்தினார். அதனால் தான் வேறு எங்குமே காண முடியாத வகையில் அனுமன் இல்லாத ராமர் எழுந்தருளியிருக்கும் மூலஸ்தானம் இங்கு காணலாம். கோபித்துக் கொண்ட அனுமனுக்கு கோயிலுக்கு நேர் எதிரில் தனியாக சன்னதி இருப்பதையும் காணலாம்.
கோயில் சிறப்புகள்:
- எந்தக் கோயிலிலும் காண முடியாத படி அனுமன் இல்லாத ராமர் எழுந்தருளியிருப்பது இத்திருத்தலம் என்பது குறிப்படத் தக்கதாகும். ராமரின் வருகையை பரதரிடம் தெரிவிப்பதற்காக ஆஞ்சநேயர் சென்றுவிட்டதால் இங்கு மூலவராக ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.
- மகா விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ஶ்ரீராமரின் பெருமைகளை எடுத்துரைக்கும் விதத்தில் அமைக்கப் பட்டிருக்கும் ஐந்து ராமர் கோயில்களையே பஞ்ச ராமர் தலங்கள் எனக் குறிப்பிடுகின்றனர். ராமபிரான் அருள்பாலித்துக் காட்சித் தரும் இந்தக் கோயில்கள் அனைத்தும் திருவாரூர் மாவட்டத்திலே அமைந்திருப்பது மற்றொரு சிறப்பாகும்.
- முடிகொண்டான் ராமர் கோயில், அதம்பார் கோதண்ட ராமர் கோயில், பருத்தியூர் ராமர் கோயில், தில்லைவிளாகம் வீர கோதண்டராமர் கோயில், வடுவூர் கோதண்டராமர் கோயில் ஆகிய ஐந்து கோயில்களே பஞ்ச ராமர் தலங்களாகும்.
- வால்மீகி ராமயணத்தில் குறிப்பிடப்பட்ட தலம். பரத்வாஜ முனிவரின் ஆசிரமம் அமைந்த தலம். ஸ்ரீராமருக்காக ரங்கநாதரை எழுந்தருளச் செய்த தலம்.
- பொதுவாக ராமர் கோயில் தெற்கு நோக்கி அமைந்திருக்கும். இதற்கு காரணம் ராவண வதத்திற்கு பின் விபீஷணன் ஆட்சி பீடம் அமர்ந்து எப்பொழுதும் ராமரை தரிசித்து கொண்டிருக்க வேண்டும் என்பதால் அவன் வேண்டுகோளின்படியே ராமர் தெற்கு நோக்கி அமைந்திருப்பதாக புராணம் கூறுகிறது. ஆனால் இங்கு கோயில் மூலவரான கோதண்டராமர் பரத்வாஜ முனிவருக்கு முடி சூடி காட்சி கொடுத்ததால் சீதா மற்றும் லட்சுமணனுடன் கிழக்கு முகமாகவும், பரத்வாஜ முனிவர் பிரதிஷ்டை செய்த ரங்கநாதர் தனி சன்னதியில் தெற்கு முகமாகவும் அருள்பாலிக்கிறன்றனர்.
- கோபித்துக்கொண்ட அனுமனுக்கு கோயிலுக்கு எதிரில் தனி சன்னதியும் அதன் பின்னால் கோயில் தீர்த்தக்குளமும் இருக்கிறது. ஆழ்வார்கள் காலத்திற்கு முன்பே உருவான கோயில் இது.
- கழுத்து இடுப்பு ஆகியன வளைந்து கையில் கோதண்டம் ,வில் ஆகியவற்றை வைத்து மிக அற்புதமான வடிவத்தில் உற்சவ மூர்த்தி எழுந்தருளியள்ள தலம்.
- முடிகொண்டான் ஆலயத்தில் உற்சவ மூர்த்தியாக நாம் காணும் கோதண்டராமர் சிலை, மிகவும் கலைநயம் பொருந்தியதாகும். குளத்தருகில் உள்ள பக்த ஆஞ்சநேயர், சக்தி வாய்ந்தவர். அவரையும் தரிசித்து, அப்படியே மேற்கே ஊருக்குள் நுழைந்து அங்குள்ள சிறிய சிவாலயத்தில் சர்வேசுவரனையும் தரிசியுங்கள்.
திருவிழா:
புரட்டாசி – 3 வது சனிக்கிழமை உற்சவர் புறப்பாடு – 13 நாட்கள் திருவிழா, ஸ்ரீராம நவமி உற்சவம் – 10 நாட்கள் திருவிழா – கடைசி நாள் சீதா கல்யாணம்
ஒவ்வொரு மாதமும் ராமரின் ஜென்ம நட்சத்திரமான புனர் பூச நட்சத்திரத்தன்று சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில்,
முடிகொண்டான்-609 502
திருவாரூர் மாவட்டம்.
போன்:
+91 99659 23703
அமைவிடம்:
திருவாரூர் மாவட்டம் , நன்னிலம் வட்டத்தில் , திருக்கண்ணபுரம் மற்றும் சிறுபுலியூர் திவ்விய தேசத்திற்கு இடையில் முடிகொண்டான் உள்ளது. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : மயிலாடுதுறை – 20 கி.மீ. திருவாரூர் – 15 கி.மீ.