March 26 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பையனூர்

  1. அருள்மிகு எட்டீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     எட்டீஸ்வரர்

அம்மன்    :     எழிலார்குழலி

தீர்த்தம்    :     பைரவர் குளம்

ஊர்       :     பையனூர்

மாவட்டம்  :     காஞ்சிபுரம்

 

ஸ்தல வரலாறு:

பல்லவர்கள் காலத்தில் மகாபலிபுரம் வியாபாரத் தலைநகராக இருந்தது. ஆலயம் கட்டப்பட்ட காலத்தில் (கி.பி. 773) மகாபலிபுரத்தில் வசித்து வந்தவன் நாகன் எனும் எட்டீஸ்வரரின் பக்தன். இந்த ஆலயத்துக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயப் பணி புரிந்து வந்தான். நாகனைப் போல் ஊர்மக்கள் பலரும் ஆலயத்துக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயப் பணி செய்து. ஆலயத்துக்குச் சேர வேண்டியதை அங்கு சேர்த்து விட்டு, தங்களுக்கு உரிய கூலியை ஊர் சபையினரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். பையனூரில் உள்ள பெரிய ஏரியை நாகனே தூர் வாரி சுத்தம் செய்ததாகவும் ஒரு செய்தி உண்டு. விளைச்சலைப் பெற்றுக் கொள்ளும் ஊர் சபையின் உறுப்பினர்கள் சிலர், நாகனுக்கான கூலியைக் கொடுக்கும்போது மட்டும், அவனை வெறுங்கையோடு அனுப்பினர். அதாவது, உனக்கெல்லாம் கூலி எதுவும் இல்லை என்பது போல் அவனிடம் அலட்சியமாகப் பேசி விரட்டி விடுவார்களாம். கூலி இருந்தால்தானே வீட்டில் அடுப்பு எரியும்? அன்றாடப் பொழுது நல்லபடியாகப் போகும்? வேலையும் செய்து விட்டு, அதற்குரிய பலன் இல்லா விட்டால் என்ன பயன்? பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நாகன், அந்த எட்டீஸ்வரரிடமே தன் குறையைக் கொட்டினான். அவரது சன்னதிக்கு முன்னால் நின்று கண்ணீர் மல்கத் தன் குறையைச் சொன்னான். பிறகு வீடு திரும்பினான். அடுத்த நாள் எட்டீஸ்வரர் ஆலயத்தின் முன்னால் எல்லோருக்கும் கூலி கொடுக்கப்பட்டு வந்தது. வழக்கம்போல் நாகனின் முறை வரும்போது அவனிடம், உனக்கெல்லாம் கூலி கிடையாது. போ போ என்றனர் ஊர் சபை உறுப்பினர்கள் சிலர். நாகன் மிகவும் நொந்து போனான். பிறகு கோபம் வந்தவனாக, எனக்குரிய கூலியைத் தர மறுப்பது தர்மத்தை மீறும் செயலாகும். இதற்குரிய தண்டனையை என்றேனும் ஒரு நாள் நீங்கள் அனைவரும் அனுபவிக்கத்தான் போகிறீர்கள்என்றான்.நாகன் சொல்வதை ஊர் சபையினர் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள வில்லை, சரிதான் போப்பா என்று அலட்சியமாகச் சொல்லி விட்டு, அடுத்த ஆளுக்குக்கூலியை அளிக்க முற்பட்டனர். அப்போது நாகன் சிவாலயத்தின் முன் வந்து நின்று ஈசனிடம் இந்த முறைகேடு பற்றி மீண்டும் முறையிட்டான். அதற்குள் ஊர் சபை கலைய ஆரம்பித்தது. அப்போது அனைவரும் கேட்கும்படியாக, அனைவரும் நில்லுங்கள் அப்படியே என்றொரு குரல் அதிகாரமாகக் கேட்டது. வீட்டுக்குச் செல்ல முற்பட்டவர்கள் துணுக்குற்றுக் குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தார்கள். எவரும் இல்லை. யார்… எவனர் நம்மை அதிகாரத்தோடு அழைத்தது? என்று ஒருவருக்கொருவர் பயம் கலந்த முகந்துடன் விசாரித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் ஒலித்தது அந்த அசரீரி.

நாகனுக்கு உரிய கூலியைக் கொடுங்கள். அப்படி மறுத்தால், இது சம்பந்தப்பட்ட அனைவரையும் தீவினைகள் துரத்தும். குடும்பத்தில் நிம்மதியை இழப்பீர்கள். நோயினால் அவஸ்தைப்படுவீர்கள் என்றெல்லாம் அந்த அசரீரி சொன்னது. பிறகு குரல் வந்த திசையில் பிரகாசமான ஒரு ஜோதி தோன்றி,அது மெள்ள மெள்ள நகர்ந்து ஸ்ரீஎட்டீஸ்வரரின் கருவறைக்குள் போய் மறைந்தது. இதன் பின்னால்தான் இது எட்டீஸ்வரரின் எச்சரிக்கை என்பதை ஊர் சபையினர் உணர்ந்தார்கள். அதன் பின், இறைவனின் சந்நிதிக்குப் போய் மன்னிப்புக் கேட்டதோடு, நாகனிடமும் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர். அவனுக்குச் சேர வேண்டிய கூலியை மொத்தமாகக் கொடுத்தனர். இனிமேலும் இது போல் எதுவும் நிகழாது. எங்களுக்கு எந்த தண்டனையும் கொடுக்க வேண்டாம் என்று இறைவனிடம் சொல் என்று நாகனிடம் கெஞ்சலாக வேண்டிக் கொண்டனர். நாகனும் அவர்களை மன்னித்து, இறைவனுக்கு நன்றி சொல்லிப் புறப்பட்டான்.

 

கோயில் சிறப்புகள்:

  • கி.பி. 768-ஆம் ஆண்டு நந்தி விக்கிரம வர்மனின் கல்வெட்டு, இவ்வாலயத்தின் தொன்மையை எடுத்துக் கூறுகிறது.

 

  • இறைவன் பெயர் “எட்டீஸ்வரர்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவ்வூரில் ஊர் சபை உருவானது, நீர் நிலைகளைப் பராமரித்தது, நிலங்களை முறையாகக் கையாண்டது, பொதுச் சொத்துக்களைப் பராமரிப்பதில் பாவ- புண்ணியங்களின் மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தது போன்ற பல அரிய தகவல்களைக் கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.

 

  • கிழக்கு நோக்கிய வாயிலைக் கொண்ட கற்றளியாக பையனூர் சிவாலயம் அமைந்துள்ளது.

 

  • ஆலய விமான அமைப்பு, “கஜபிரஷ்டம்’ எனப்படும் தூங்காளை மாட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

 

  • கிடைக்காத (எட்டாத)தையும் கிடைக்க வைக்கும் சக்தி வாய்ந்தவர் என்பதால், இத்தல இறைவன் எட்டீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிப்பது சிறப்பு.

 

  • சோழ மண்டலத்தில் இன்று காணும் திசை எல்லாம் திருக்கோயில்கள் தரிசனம் தருகின்றன என்றால், அதற்குக் காரணம் அந்தப் பகுதியை ஆண்ட சோழப் பேரரசர்களின் அபரிமிதமான இறை பக்தியே காரணம் எனலாம். தங்களது ஆட்சிக்கு உட்பட்ட ஒவ்வொரு கிராமத்திலும் சைவம் – வைணவம் என்கிற பேதம் இல்லாமல் திருக்கோயில்களைக் கட்டி வழிபாட்டைப் பெருக்கினர் சோழர்கள். அதுபோல் காஞ்சி மாநகரைத் தலைநகராகக் கொண்டு பல்லவ தேசத்தை ஆண்ட பல்லவ மன்னர்களும் தங்கள் காலத்தில் சென்னை, காஞ்சி ஆகிய பகுதிகளைச் சுற்றி ஏராளமான திருக்கோயில்களைக் கட்டினர். குடிமக்களிடையே பக்தி பெருகவும், நாடு வளம் பெறவும் ஆலய வழிபாடுகளைத் தடை இல்லாமல் நடத்தி வந்தார்கள். தங்கள் காலத்துக்குப் பிறகும் பூஜைகள் நிரந்தரமாக நடப்பதற்கு எண்ணற்ற நிலங்களையும் ஏற்படுத்தி விட்டுப் போனார்கள் பல்லவர்கள்.

 

  • சைவம் – வைணவம் இரண்டும் ஒற்றுமையாக இருந்து வந்துள்ள கிராமம் பையனூர். இதை நிரூபிக்கும் வகையில் எட்டீஸ்வரர் சிவாலயமும், அருளாளப் பெருமாள் வைணவ ஆலயமும் ஊரில் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இரண்டு ஆலயங்களுக்கும் நடுவே ஒரு திருக்குளம் காணப்படுகிறது. பைரவர் குளம் என்பது பெயர். விஜய நந்தி விக்கிரமப் பல்லவனால் கி.பி. 773 – ஆம் ஆண்டில் இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்கலாம் என்பது ஒரு கல்வெட்டுத் தகவல். முழுக்க முழுக்கக் கருங்கல்லைக் கொண்டே கட்டப்பட்ட அருமையான கற்றளி கோயிலாக அந்தக் காலத்தில் இருந்து வந்துள்ளது. மிகவும் விஸ்தாரமான நிலப்பரப்பில் ஆலயம் சகல வசதிகளோடும் இருந்திருக்கிறது.

 

  • நந்திதேவர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை, காலபைரவர், சரபேஸ்வரர், சைவ நால்வர், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர், எழிலார் குழலிஅம்மன், சித்தர் இடைக்காடர் போன்ற பல சன்னதிகள் உள்ளன.

 

  • காணும் கற்களை எல்லாம் கற்சிலைகளாக்கிய பல்லவ மன்னர்களின் கலைநயத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்வது மாமல்லபுரம் கடற்கோயிலாகும். இதன் பெருமையைக் கண்டு வியந்த ஐக்கிய நாடுகள் சபை, இதனை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது.

 

திருவிழா: 

பிரதோஷம், சிவராத்திரி

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை,

மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு எழிலார்குழலி உடனுறை எட்டீஸ்வரர் திருக்கோயில்,

பையனூர்,  603 104.

காஞ்சிபுரம் மாவட்டம்.

 

போன்:    

+91 99415 34893

 

அமைவிடம்:

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டத்தில், பழைய மாமல்லபுரம் சாலையில் பையனூர் அமைந்துள்ளது. திருப்போரூரில் இருந்து தெற்கே 8.கி.மீ., மாமல்லபுரத்திற்கு வடக்கே 5 கி.மீ., சென்னையிலிருந்து தெற்கே 53 கி.மீ., செங்கல்பட்டிற்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் இத்தலத்தை தரிசிக்கலாம்.

Share this:

Write a Reply or Comment

eight − six =