அருள்மிகு லட்சுமி நாராயணன் திருக்கோயில் வரலாறு
மூலவர் : நாராயணன்
உற்சவர் : வரதராஜ பெருமாள்
தாயார் : லட்சுமி
ஊர் : இடையாற்றுமங்கலம்
மாவட்டம் : திருச்சி
ஸ்தல வரலாறு:
கொள்ளிடம் ஆற்றுக்கும் அய்யன் வாய்க்கால் என அழைக்கப்படும் நதிக்கும் இடையே இந்தத் தலம் அமைந்துள்ளதால் இடையாற்றுமங்கலம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்த ஆலயம்.மகாலட்சுமியை தன் மார்பில் சுமந்திருக்கும் திருமால் அவளைத் தமது மடியில் இருத்தியபடி காட்சிதரும் திருத்தலங்களில் இதுவும் ஒன்று. தன்னை வணங்கும் பக்தர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும், திருமணமான தம்பதிகள் மணம் ஒன்றி வாழவும் திருவுள்ளம் கொண்ட பெருமாள் இங்கு எழுந்தருளி அருள்பாலிப்பதாக தலவரலாறு கூறுகிறது.
கிழக்கு நோக்கி அமைந்துள்ள ஆலயத்தின் முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் அழகான சிறப்பு மண்டபம். அதையடுத்து மகாமண்டபம். மகாமண்டபத்தின் நடுவே கருடாழ்வார் பெருமாளைப் பார்த்தபடி நின்ற கோலத்தில் தனி மண்டபத்தில் அருள்பாலிக்கிறார். மண்டபத்தின் வலதுபுறம் ஆஞ்சநேயரின் சன்னதி உள்ளது. அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலை துவாரபாலகர்களின் சுதைவடிவத் திருமேனி அலங்கரிக்க, அர்த்த மண்டபத்தில் பெருமாளின் உற்சவத் திருமேனி உள்ளது. வரதராஜப் பெருமாள் என்று திருநாமத்துடன் ஸ்ரீதேவி பூதேவியுடன் சேவை சாதிக்கிறார், உற்சவர். அலங்காரப் பிரியரான பெருமாளுக்கு இங்கு நடக்கும் அலங்கார ஆராதனைகள் அற்புதமானவை. அடுத்துள்ள கருவறையில் பெருமாள், லட்சுமி நாராயணன் என்ற திருநாமத்துடன் கீழ்திசை நோக்கி சேவை சாதிக்கிறார்.
கோயில் சிறப்புகள்:
- திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் நாராயண பெருமாள், தனது துணைவியார் லட்சுமி தேவியை தனது மடியில் அமர்த்தி ஒரு கரத்தால் தாயாரின் இடையை அணைத்தபடி சேவை இந்தத் திருத்தலத்தில்தான் உள்ளது லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில்.
- உற்சவர் இங்கு ஸ்ரீ வரத ராஜப் பெருமாள் என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி பூதேவியுடன் சேவை சாதிக்கிறார். அடுத்துள்ள கருவறையில் பெருமாள் ஸ்ரீ லட்சுமி நாராயணன் என்ற திருநாமத்துடன் கீழ்திசை நோக்கி அருள்பாலித்து வருகிறார்.
- இங்கு உற்சவர் வரதராஜப் பெருமாளின் அருகே, சுமார் 20 செ.மீ. உயரத்தில் சந்தான கோபால கிருஷ்ணனின் உலோகச் சிலை ஒன்று உள்ளது.
- குழந்தை செல்வம் இல்லையே என ஏக்கத்துடன் இந்த ஆலயம் வரும் தம்பதியர் தங்களுடன் ஒரு சிறிய மரத்தொட்டிலை கொண்டு வருகின்றனர். அந்தத் தொட்டிலை இந்த ஆலயத்தில் கயிற்றிலோ அல்லது சேலையிலோ கட்டுகின்றனர். பின்னர் இந்த சந்தான கோபால கிருஷ்ணனை அந்தத் தொட்டியில் இட்டு தொட்டிலை மெல்ல ஆட்டுகின்றனர். சிலர் ரம்மியமாய் பாடுவதும் உண்டு.
- தன்னை வணங்கும் பக்தர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும், திருமணமான தம்பதிகள் மணம் ஒன்றி வாழவும் திருவுள்ளம் கொண்ட பெருமாள் இங்கு எழுந்தருளி அருள்பாலிப்பதாக தலவரலாறு கூறுகிறது
- உற்சவர் வரதராஜப் பெருமாள் அனைத்து வரங்களையும் தரக்கூடியவர். வைகுண்ட ஏகாதசி, கோகுலாஷ்டமி, புரட்டாசி சனிக்கிழமைகள் ஆகிய நாட்களில் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாளும் தாயாரும் வீதியுலா வருவதுண்டு.
திருவிழா:
வைகுண்ட ஏகாதசி, கோகுலாஷ்டமி, புரட்டாசி சனிக்கிழமை.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு லட்சுமி நாராயணன் திருக்கோயில்
இடையாற்றுமங்கலம், லால்குடி,
திருச்சி மாவட்டம்.
அமைவிடம்:
திருச்சி – அன்பில் பேருந்து சாலையில், லால்குடியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது இடையாற்றுமங்கலம் என்ற இத்தலம்.