March 18 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   திருஆக்கூர்

  1. அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     தான்தோன்றியப்பர் ( சுயம்புநாதர்)

உற்சவர்        :     ஆயிரத்தில் ஒருவர்

அம்மன்         :     வாள்நெடுங்கன்னி, கடக நேத்ரி

தல விருட்சம்   :     கொன்றை,பாக்கு, வில்வம்

தீர்த்தம்         :     குமுத தீர்த்தம்

புராண பெயர்    :     யாருக்கு ஊர்

ஊர்             :     திருஆக்கூர்

மாவட்டம்       :     மயிலாடுதுறை

 

ஸ்தல வரலாறு:

ஒரு முறை கோச்செங்கண்ணனுக்கு வயிற்றில் குன்ம (அல்சர்) நோய் ஏற்படுகிறது. இதனால் மன்னன் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறான். இந்த நோயை தீர்க்க வேண்டுமானால், மூன்று தல விருட்சங்கள் எங்கு இருக்கிறதோ அங்கு கோயில் கட்டினால் நோய் தீரும் என்று அசரீரி கூறுகிறது. மன்னனும் பல கோயில்கள் கட்டி வரும் போது ஆக்கூர் என்ற இத்தலத்திற்கு வருகிறான். அப்போது அசரீரி வாக்கின் படி கொன்றை, பாக்கு, வில்வம் என்று மூன்று தலவிருட்சங்களை ஒரே இடத்தில் பார்க்கிறான்.

உடனே இந்த இடத்தில் ஒரு சிவாலயம் கட்டுகிறான். அப்படி கோயில் கட்டும்போது ஒருநாள் கட்டிய சுவர் மறுநாள் கீழே விழுந்து விடும். இது எதனால் கீழே விழுகிறது என சிவனிடம் மன்றாடி கேட்கிறான். அதற்கு இறைவன் ஆயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்தால் குறைபாடு நீங்கி கோயிலை சிறப்பாக கட்டலாம் என்று கூறுகிறார். அதன்படி 48 நாள் அன்னதானம் நடக்கிறது. இதில் ஒவ்வொருநாளும் ஆயிரம் இலை போட்டால் 999 பேர் தான் சாப்பிடுவார்கள் ஒரு இலை மீதம் இருந்து கொண்டே இருக்கும். மன்னன் மிகுந்த வருத்தத்துடன் இறைவனிடம் சென்று,  ஏன் இந்த சோதனை, 48 நாட்களும் ஆயிரம் பேர் அன்னதானம் சாப்பிட்டால் தானே கோயில் கட்டுவது சிறப்பாக அமையும். ஆனால் தினமும் ஒரு ஆள் குறைகிறார்களே. இதற்கு தாங்கள் தான் ஒரு வழி சொல்ல வேண்டும் என்று கெஞ்சுகிறான்.

மன்னனின் குரலுக்கு செவி சாய்த்து விட்டார் இறைவன். 48வது நாள் ஆயிரம் இலை போடப்பட்டது. ஆயிரம் இலையிலும் ஆட்கள் அமர்ந்து விட்டார்கள். ஆயிரமாவது இலையில் “ஆயிரத்தில் ஒருவராக’ அமர்ந்திருந்த வயதான அந்தணரிடம் சென்ற மன்னன், “”ஐயா, தாங்களுக்கு எந்த ஊர்” என்று கேட்டான். அதற்கு வயதான அந்தணர் “”யாருக்கு ஊர்” என்று மறுகேள்வி கேட்கிறார். (இதனாலேயே இந்த ஊருக்கு யாருக்கு ஊர் என்பது மருவி ஆக்கூர் ஆனது) மன்னனை எதிர் கேள்வி கேட்ட அந்த வயதானவரை அடிப்பதற்காக சிப்பாய்கள் விரட்டுகின்றனர்.

ஓடி சென்ற வயதானவர் நெடுங்காலமாக அங்கிருந்த புற்றுக்குள் விழுந்து விட்டார். புற்றை கடப்பாறையால் விலக்கி பார்த்த போது உள்ளேயிருந்து சுயம்பு மூர்த்தியாக “தான்தோன்றீசுவரர்’ தோன்றுகிறார். கடப்பாறையால் புற்றை குத்தியபோது கடப்பாறை லிங்கத்தின் மீது பட்டு விடுகிறது. கடப்பாறை பட்டதில் அடையாளமாக இன்றும் கூட லிங்கத்தின் தலைப்பகுதியில் பிளவு இருப்பதைக்காணலாம்.

 

 

அருள்மிகு ஆயிரத்துள் ஒருவர் கையில் தண்டு ஊன்றிய நிலையில் நின்ற வண்ணமாக காட்சியளிக்கும் உற்சவ மூர்த்தியாவார்.

 

கோயில் சிறப்புகள்:

  • கோச்செங்கட் சோழன் தனது முன்பிறவியில் யானையினால் ஏற்பட்ட இடர் காரனமாக, யானை ஏற முடியாத மாடக் கோவில்கள் 70 கட்டினான் என்று வரலாறு கூறுகிறது. ஆக்கூர் தான்தோன்றியப்பர் கோவிலும் அவ்வகையில் ஒரு மாடக்கோவிலாகும்

 

  • மாடம் என்னும் பெயர் கொண்ட திருக்கோயில்கள் இரண்டு தேவாரத்தில் காணப்படுகின்றன. ஒன்று நடுநாட்டுத் தலமான பெண்ணாகடத்தில் உள்ள தூங்கானை மாடம். மற்றொன்று காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான ஆக்கூர் தான்தோன்றி மாடமாகும். யானை ஏறமுடியாத படிக்கட்டுகளை உடைய உயரமான தளத்தில் இறைவன் கருவறை அமையப்பெற்ற கோவில்கள் மாடக்கோயில் என்று பெயர் பெற்றன. ஊரின் பெயர் ஆக்கூர் ஆயினும் அங்குள்ள கோயிலுக்குத் தான்தோன்றிமாடம் என்று பெயர். அதாவது தான்தோன்றியப்பர் (சுயம்புமூர்த்தியாகிய இறைவர்) எழுந்தருளியிருக்கும் மாடக் கோயில் என்று பொருள்படும்.

 

  • கிழக்கில் 3 நிலை இராஜகோபுரமும் தெற்கில் ஒரு நுழைவாயிலும் உள்ளன. கோபுர வாயிலில் விநாயகர் காட்சி தருகிறார்.

 

  • இங்கு குடிகொண்டுள்ள தான்தோன்றியப்பர் ஒரு சுயம்பு லிங்கம் ஆவார்.

 

  • உமையவள் வாள் நெடுங்கண்ணி என்று தமிழிலும், கட்கநேத்ரி என்று வடமொழியிலும் குறிக்கப்பெறுகின்றாள்.

 

  • அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய தலங்களில் இத்தலமும் ஒன்றானதால் இறைவி வாள்நெடுங்கண்ணியின் சந்நிதி மூலவர் சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்திருக்கிறது.

 

  • உள் சுற்றில் விநாயகர், முருகர், விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் திருஉருவச் சிலைகள் தனி சந்நிதியிலும், சுந்தரர் அவரது இரு மனைவியர் சங்கிலி நாச்சியார் மற்றும் பரவை நாச்சியார் திருஉருவச் சிலைகள் தனி சந்நிதியிலும் காணப்படுகின்றன.

 

  • 63 நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் அவதரித்த தலம் ஆக்கூர். கருவறை அர்த்த மண்டபத்தில் இடதுபுறம் சிறப்புலி நாயனார் சந்நிதியும் அவருக்கு நேர் எதிரே வலதுபுறம் ஆயிரத்தில் ஒருவர் சந்நிதியும் அமைந்துள்ளன. இத்தலத்திறகுரிய சிறப்பு மூர்த்தி இந்த ஆயிரத்தில் ஒருவர்.

 

  • இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நானகு திருக்கரங்களுடனும் மயில் மீது கிழக்கு நோக்கிய சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். அருகே தேவியர் இருவரும் எழுந்தருளியுள்ளனர்.

 

  • திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

 

  • வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “பொங்கும் இருள் கூறு திரு ஆக்கு ஊர் கொடுப்பன போல் சூழ்ந்து மதில் வீறு திரு ஆக்கூர் விளக்கமே” என்று போற்றி உள்ளார்.

 

  • இறைவனின் திருமேனியை காவிரி நதிக்குப் புனித நீராட்ட எடுத்துச் செல்ல சாலை அமைத்தது, குளம் தோண்டியது, புலம் பெயர்ந்த விவசாயிகளை மீண்டும் அவர்கள் ஊருக்கே அழைத்து வந்து அவர்களின் உடைமைகளாகிய நிலங்களை மீட்டுத் தந்த கோப்பெருஞ்சிங்கனின் சாதனை, போன்ற பல தகவல்களை இவ்வாலயத்துக் கல்வெட்டுகள் சுமந்து நிற்கின்றன.

 

திருவிழா: 

திருவாதிரை அன்று நடராஜர் வீதிஉலா வருவதே கோயிலின் மிகப்பெரிய திருவிழா ஆகும். மற்றபடி சிவனுக்குரிய மாதாந்திரி பிரதோஷம், சிவராத்திரி, திருக்கார்த்திகை, பவுர்ணமி, போன்ற நாட்களிலும் சிறப்பு பூஜை உண்டு.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு தான்தோன்றியப்பர் திருக்கோவில்

திருஆக்கூர்  – 609301

மயிலாடுதுறை மாவட்டம்

 

போன்:    

+91- 98658 09768, 9787709742, 75022 22850

 

அமைவிடம்:

மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 17 கி.மீ. தொலைவில் இருக்கிறது. ஆக்கூர் பேருந்து நிலையத்தின் வடபாகத்தில் இத்திருக்கோயில் அமையப்பெற்றுள்ளது. திருதலைச்சங்காடு என்ற பாடல் பெற்ற ஸ்தலம் இங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.

Share this:

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Write a Reply or Comment

twenty − seventeen =