அருள்மிகு கோதண்டபாணி ராமர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : ராமர்
தாயார் : சீதை
ஊர் : அயோத்தியாப்பட்டணம்
மாவட்டம் : சேலம்
ஸ்தல வரலாறு:
சீதையை மீட்க வானரப் படையுடன் இலங்கை சென்று ராவணனை கொன்ற ராமர் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு காலடி வைத்தார். அயோத்திக்கு திரும்ப வேண்டும் என்றால் சைல மலை குன்றுகள் வழியாக தான் திரும்ப வேண்டும்.ராமர், சீதை, லட்சுமணன், அனுமார், சுக்ரீவர், விபீஷணர் அனைவரும் சைல மலை குன்று பகுதியை வந்தடைந்த போது லேசாக இருட்ட தொடங்கியது.களைப்பாறி விட்டு செல்லலாம் என்று நனைத்த போது, சிறிய அளவிலான கோயில் ஒன்று தென்பட்டது.இங்கு பரத்வாஜ முனிவரின் ஆசிரமம் அமைந்திருந்தது. ராவண வதம் முடிந்து திரும்பிய ராமபிரான், இவ்வழியே வரும்போது, முனிவரைச் சந்தித்தார். பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளின்படியும், விபீஷ்ணனின் பிரார்த்தனையை ஏற்றும் இந்த இடத்தில், சீதாபிராட்டியுடன் சேர்ந்து பட்டாபிஷேகக் கோலத்தை காட்டியருளினாராம் ராமபிரான். ஆக, அயோத்தியில் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருவதற்கு முன்பாகவே, இங்கு முதன்முதலாக பட்டாபிஷேகக் கோலத்தில் காட்சி தந்ததால்தான் இவ்வூர் அயோத்தியா பட்டணம் என்று அழைக்கப்படுவதாகக் கூறுகின்றனர். இங்கே, ராமர் மூன்று நாட்கள் தங்கி இருந்ததாகக் கூறுகின்றனர்.
கோயில் சிறப்புகள்:
- அயோத்தியாபட்டணம் கோதண்டபாணி ராமர் கோயில். ராமர் காலடி பட்டதால் அயோத்தியாபட்டணம் என்ற பெயரை இவ்விடம் பெற்றது.
- இங்குள்ள ஒவ்வொரு கல்லும் கவி பாடுகின்றன. கலைநுட்ப வேலைப்பாடுகள் மிக்க தூண்களை தட்டினால் பல்வேறு இசை ஒலிகள் எழுந்து மனதை மயக்குகின்றன.
- தாரமங்கலம் கைலாசநாதர் பெருமாள் கோயில், திருச்செங்கோடு முருகன் கோயில், மதுரை திருமலை நாயக்கர் மஹால் ஆகியவற்றுடன் இந்த கோயிலும் ஒரே காலத்தில் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது என்று வரலாறு சொல்கிறது. இதற்கு இங்குள்ள பிரமாண்டமான சிற்பங்களே சாட்சி.
- சிற்ப கலைக்கு மட்டுமல்ல. ஓவியக் கலைக்கும் பெயர் பெற்றது இக்கோயில். இவ்வளவு ஆண்டுகளாகியும் காலத்தால் அழியாத அன்றைய அற்புத ஓவியங்கள் கோயிலின் “சிலீங்’கில் பார்ப்போரை சிலிர்ப்படைய வைக்கின்றன.
- ஐந்து நிலை ராஜகோபுரமும் உயர்ந்த விளக்குத் தூணும் கொண்ட கோயில் இது. விளக்குக் தூணின் அடியில் கருடாழ்வார். சங்கு, சக்கரம் ஆகிய உருவங்கள் காணப்படுகின்றன.
- கிழக்கு திசை நோக்கிய கோயில்,
- மூலவர் ராமர் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருகிறார்.
- கருவறை மூன்று நிலை விமானத்தோடு விளங்குகின்றது.
- வழக்கமாக வலதுபுறமாக காணப்படும் தயார் இங்கு இடதுபுறமாக எழுந்தருளியுள்ளார்.
- கருடாழ்வார் ராமரை நோக்கி வணங்கியபடி நிற்கின்றார். பிராகாரத்தில் தெற்குநோக்கி ஆஞ்சநேயர் காட்சி தருகின்றார். ஆழ்வார்கள் தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளனர்.
- மகா மண்டபம் 28 கலைநயமிக்க தூண்களைக் கொண்டது. ஒரு தூணில் தசாவதாரக் காட்சிகள் அனைத்தும் சித்திரிக்கப்பட்டுள்ளன. இசைக்கும் தூண் ஒன்றும் உள்ளது. மேற்கூரையில் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. கண்ணன் கோபியரோடு நீராடும் காட்சியும் சித்திரிக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் மீது சமீபகாலத்தில் உருவாக்கப்பட்ட, பாற்கடல் பள்ளிகொண்ட நாராயணன், பாமா-ருக்மணி சுதைச் சிற்பங்கள் அழகாகக் காணப்படுகின்றன.
- ராவணனை அழித்துவிட்டு அயோத்தி செல்லும் வழியில் ராமர் இங்கு தங்கி விபீஷணனுக்கு பட்டாபிஷேக ராமனாகக் காட்சியளித்தார். ஆகவே இந்த ராமர் பட்டாபிஷேக ராமர் என அழைக்கப்படுகிறார். ராமன் இருக்குமிடம் அயோத்தி என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.
- இங்கு இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தில் கோயில் கதவு ஓட்டை வழியாக வரும் சூரிய ஒளி இறைவன் மீது பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் தற்போது கோயிலை சுற்றி எழுப்பப்பட்டு விட்ட கட்டடங்களால் தடுக்கப்பட்டு விட்டது.
- இத்தலத்தில் மட்டுமே ராமரும் சீதையும் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கின்றனர். ராமர் மற்றும் சீதைக்கு பரதன், லட்சுமணன், சத்ருக்னன் ஆகியோர் சேவை சாற்றியபடியும், அங்கதன், சுக்ரீவன், ஆஞ்சநேயர் ஆகியோர் ராமபிரான்-சீதாதேவியை சேவித்தபடியும் உள்ளனர்.
- ராமரின் மகிமைகளை உணர்ந்த கடையெழு வள்ளல்களில் ஒருவரான- தகடூர் என்ற தருமபுரியை ஆண்ட அதியமான்தான் இத்திருத்தலத்தின் மூலஸ்தானத்தைக் கட்டியதாகச் சொல்கிறார்கள்.
- இத்திருத்தலத்தில், வடதிசையில் தனியாக சிறு சந்நிதி அமைத்துக்கொண்டு குடிகொண்டுள்ள ஆண்டாளுக்குப் பூரம் நட்சத்திரத் தன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறது. அப்போது ‘திருப்பாவை’ பாடப்படுகிறது.
- புரட்டாசி மாதத்தின் ஐந்து சனிக் கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். மூன்றாவது சனிக் கிழமை ராமர்-சீதை கல்யாண உற்சவம் நடைபெறும்.
- சித்திரை மாதத்தில் வரும் ராம நவமி அன்று இத்திருத்தலத்தில் மிகப்பெரிய அளவில் சிறப்பான வழிபாடு நடைபெறும். அன்று வழங்கப்படும் நீர்மோர் தானம் புகழ்பெற்றது.
திருவிழா:
ஸ்ரீ ராம நவமி
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கோதண்டபாணி ராமர் திருக்கோயில்,
அயோத்தியாப்பட்டணம்-636 103
சேலம் மாவட்டம்.
அமைவிடம்:
சேலத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது, கோதாண்டராம சுவாமி திருக்கோயில். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆத்தூர் அல்லது அரூர் செல்லும் பேருந்தில் சென்று, அயோத்தியாபட்டணம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ள வேண்டும். அங்கிருந்து அரூர் சாலையில், நடந்து செல்லும் தொலைவிலேயே கோயில் அமைந்துள்ளது. சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கோம்பூர் செல்லும் நகரப் பேருந்தில் சென்றால், கோயில் முன்பாகவே இறங்கிக்கொள்ளலாம்.