அருள்மிகு உச்சிரவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : உச்சிரவனேஸ்வரர் துறைகாட்டும் வள்ளலார்
அம்மன் : வேயுறுதோளியம்மை
தல விருட்சம் : விழல் என்ற புல்செடி
தீர்த்தம் : காவிரி, மெய்ஞான, பொய்கை தீர்த்தம்
புராண பெயர் : விழர்நகர், திருவிளநகர்
ஊர் : திருவிளநகர்
மாவட்டம் : மயிலாடுதுறை
ஸ்தல வரலாறு:
ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பார்கள். மாயூரம் எனப்படும் மயிலாடுதுறைக்கு மட்டும் அப்படி என்ன தனிச் சிறப்பு? மயிலாடுதுறையைச் சுற்றிலும் சிவபெருமான் ஐந்து திருத்தலங்களில் வள்ளலாக எழுந்தருளியிருக்கிறார் என்பதால்தான் இந்தச் சிறப்பு. மயிலாடுதுறை மயூரநாதர் வள்ளல் பெருமானாக நடுவில் இருக்க, அவரைச் சுற்றிலும் நான்கு திருத்தலங்களில் சிவபெருமான் நான்கு வள்ளல்களாகக் கோயில் கொண்டு அருள்புரிகின்றார். அந்த நான்கு திருத்தலங்களில் ஒன்றுதான், திருவிளநகர் துறைகாட்டும் வள்ளலார் திருக்கோயில்.
முன்னொரு காலத்தில் அருள்வித்தன் என்னும் அந்தணன் இத்தல இறைவன் மீது அளவில்லாத பக்தி கொண்டிருந்தான். நாள் தோறும் இறைவனுக்கு மாலை கட்டிக் கொடுக்கும் தொண்டினைச் செய்து வந்தான். இவனது பக்தியை சோதிக்க விரும்பினார் இறைவன். ஒருநாள் இவன் பூக்கூடையுடன் ஆற்றைக்கடந்து வரும்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படி செய்தார். இதனால் கலங்கிய இவன் தன்னைப்பற்றி கவலைப்படாமல் இறைவனுக்குரிய பூக்கூடையை காப்பாற்றுவதில் மிகவும் கவனமாக இருந்தான். தலையளவு வெள்ளம் வந்துவிட்ட போதிலும் தன் கைகளால் பூக்கூடையை தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக் கொண்டு தன் உயிரைப் பற்றி கவலைப் படாமல் இறைவனுக்கு செய்யும் கொண்டில் பங்கம் வந்துவிடக் கூடாதே என்ற் கவலைப்பட்டான். அவனுடைய உறுதியையும், அன்பையும் கண்ட இறைவன் அவனுக்கு அருள் சொரிந்து ஆற்றின் துறையைக் காட்டி அவனைக் கரையேறச் செய்தார். இதனால் இறைவன் துறை காட்டும் வள்ளல் ஆனார்.
பிற்காலத்தில், ஞானசம்பந்தப் பெருமான் பல சிவாலயங்களைத் தரிசித்தபடி மயூரநாதர் கோயிலுக்குச் செல்லும்போது, காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதைக் கண்ட ஞானசம்பந்தப் பெருமான், ‘ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தைக் கடந்து கரையேற ஒரு துறையினைக் காட்டுவோர் எவரேனும் உள்ளாரோ?’ என்று மனதில் நினைத்த வேளையில், வேடன் ஒருவன் அவரைத் தாம் அழைத்துச் செல்வதாகக் கூறி ஆற்றில் இறங்க, வெள்ளம் ஞானசம்பந்தப் பெருமானின் பாதத்தின் அளவாகக் குறைந்துவிட்டது. காவிரியின் தென்கரை சேர்ந்த சம்பந்தப் பெருமான், தனக்குத் துறை காட்டிய வேடனைத் திரும்பிப் பார்க்க, அங்கே வேடனைக் காணவில்லை. அந்த விளநகர் இறைவனே வேடனாக வந்து தமக்குத் துறை காட்டி அருளியவர் என்று தெளிந்த சம்பந்தப் பெருமான், விளநகர் சிவனாரைப் பதிகம் பாடி போற்றி வணங்கினார்.
கோயில் சிறப்புகள்:
- இந்தக் கோயிலில் அருளும் இறைவனின் திருப்பெயர் துறைகாட்டும் வள்ளல். அம்பிகையின் திருநாமம் வேய்த்தோளி அம்மை என்பதாகும். இந்தக் கோயிலின் தலவிருட்சம் விழல் விருட்சமாகும். அதன் காரணமாகவே இந்தத் தலத்துக்கு விழல் நகர் என்ற பெயர் ஏற்பட்டு, அதுவே காலப்போக்கில் விளநகர் என்று அமைந்துவிட்டதாக கூறுகிறார்கள்.
- சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த 5 நிலை ராஜகோபுரம் கொண்டது துறை காட்டும் வள்ளலார் கோவில். இக்கோவில் 2 பிரகாரங்களைக் கொண்டது. இரண்டாவது பிரகாரத்தில் சிறிய நந்தி மண்டபமும், ஆஸ்தான மனடபமும் இருக்கின்றன. 2 வது கோபுர வாசலின் இருபுறமும் விநாயகர் காணப்படுகிறார்.
- மூலவர் கிழக்கு நோக்கியபடி காட்சி தருகிறார்.
- இறைவி வேயுறுதோளியம்மை தனது திருக்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி காட்சி தருகிறாள்.
- மேற்குப் பகுதியில் சோமஸ்கந்தர், ஆறுமுகன், அருணாசலேஸ்வரர் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன.
- வடக்குப் பிரகாரத்தில் நடராஜர், கிழக்கில் பைரவர் சந்நிதிகள் உள்ளன.
- சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சிறப்பும் இனிமையும் பொருந்திய இப்பதிகத்திலுள்ள இப்பாடல்களைக் தினந்தோறும் கூறி ஏத்துகின்றவர் வினைகள் நீங்கித் துன்பமும் துயரமும் அடைய மாட்டார்கள், அவர்கள் தூய நெறியைப் பெறுவார்கள் என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தின் கடைசி பாடலில் குறிப்பிடுபிறார்.
- கபித்தன் என்ற அசுரன் இந்தத் தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டு, தன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றான் என்ற செய்தியும் தலவரலாற்றில் காணப்படுகிறது.
திருவிழா:
மகா சிவராத்திரி
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு துறைகாட்டும் வள்ளலார் திருக்கோயில்,
திருவிளநகர் -609 309,
மயிலாடுதுறை மாவட்டம்.
போன்:
+91-4364 – 282 129.
அமைவிடம்:
மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறைக்குக் கிழக்கே 6-கி. மீ. தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து செம்பொனார்கோவில் செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.