February 12 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருநாராயணபுரம்

  1. அருள்மிகு வேதநாராயணப்பெருமாள் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்          :      வேதநாராயணப்பெருமாள்

உற்சவர்         :      வேதநாராயணர்

அம்மன்          :      வேதநாயகி

தல விருட்சம்   :      வில்வம்

தீர்த்தம்          :      காவிரி

புராண பெயர்    :      வேதபுரி

ஊர்              :      திருநாராயணபுரம்

மாவட்டம்       :      திருச்சி

 

ஸ்தல வரலாறு:

ஆதி காலத்தில் ஆதிமுகக்கடவுள் என்றிழைக்கப்படும் நான்முக பிரம்மாவுக்கு, நமக்குத்தான் எப்பொருளையும் படைக்கக்கூடிய தன்மை உண்டு. நம்மைத் தவிர யாராலும் படைக்க இயலாது என்ற கர்வம் ஏற்பட்டது. அந்த கர்வத்தை அகற்றுவதற்காகவும், தம்மாலும் படைக்க இயலும் என்பதை பிரம்மாவுக்கு உணர்த்துவதற்காகவும் பெருமாள் ஒரு  விகாரமான உருவத்தை உருவாக்கி, பிரம்மாவைப் பார்க்க அனுப்பி வைக்கிறார். பிரம்மா  விகாரமான அந்த உருவத்தைப் பார்த்து, பயந்து யார் இந்த உருவத்தை  உருவாக்கி இருப்பார்கள் என்ற கேள்வியுடன், பெருமாளிடம் வந்து விவரத்தைக் கூறுகிறார். பெருமாளும் எதுவும் தெரியாதது போல, படைக்கும் தன்மை உன்னுடையது ஆயிற்றே என்றுக்கூற, ஆம், என்னைத் தவிர யாராலும் படைக்க முடியாது என்று பிரம்மா கர்வத்துடன் கூறுகிறார். அப்போது யார் எந்த தொழிலைச் செய்தாலும், செய்யும் தொழிலின் மேல் உண்மையான பக்தி இருக்க வேண்டுமே தவிர, கர்வம் இருக்கக்கூடாது என்பதை பிரம்மாவுக்கு உணர்த்தி, அந்த விகாரமான உருவத்தை மறைத்துவிடுகிறார்.

 

பிரம்மாவுக்கு ஞானோதயம் ஏற்பட்டு, எனக்கு நீர் மந்தி உபதேசம் (வேத உபதேசம்) செய்ய வேண்டும் என வேண்டிக் கொள்கிறார். பெருமாள் உடனே இயலாது என்றும், தாம் பூலோகத்தில் பின்னொரு காலத்தில் காவிரியின் வடகரையில்  வேதநாராயணர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளப் போவதாகவும், அப்போது அங்கு  வந்து நாபிக் கமலத்தில் (தொப்புள் கொடியில்)  இருந்து வேத உபதேசம் பெற்றுக்கொள் எனவும் கூறுகிறார். நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மாவுக்கு பெருமாள் வலது கரத்தால் வேத உபதேசம் செய்தமையால் இத்திருக்கோயில் குருஸ்தானத்திலும், வேதத்தை சிரசில் தலையணையாகக் கொண்டிருப்பதால் பெருமாள் குருவுக்கு அதிபதியாகவும் உள்ளார். அதன்படி திருநாராயணபுரத்தில் சாந்த சொரூப மூர்த்தியாக இருந்து, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்புரிகிறார் அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் என்கிறது திருக்கோயில் தல புராணம்.

 

முன்னொரு காலத்தில் மஹாபலி சக்கரவர்த்தி வானவராயர் என்ற அரசர் ஆதிக்கத்தை விஸ்தீர்ணம் செய்வதற்காக, மைசூரு நோக்கிப் படையெடுத்துச் சென்று கொண்டிருந்தார். இரவு நேரம் ஆனதால், வழியில் மண்மேடாக இருந்த இடத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது  அவரது கனவில் தோன்றிய பெருமாள், ” நான் பூமிக்கடியில் (பூதமாய்) இருக்கிறேன். என்னை மேலே எழுந்தருளச் செய்து, எனக்கு உண்டான உத்சவங்களை எல்லாம் ஏற்படுத்திவிட்டு, மைசூரை நோக்கிச் சென்றால் அங்கு  இருக்கும் அரசர் பரமபதம் அடைந்துவிடுவார். உம்மை அங்குள்ள மக்கள் மன்னனாக ஏற்றுக் கொள்வார்கள். ஆட்சிப் பரிபாலனம் செய்யலாம்’  என்றார். அதன்படி இங்குள்ள  மண்துகள்களை அகற்றி, 108 பிராமணர்களைக் கொண்டு வேத கோஷங்கள் முழங்க, பெருமாளை ஸ்தாபிதம் செய்து, அவருக்குண்டான தேர்த் திருவிழா போன்ற நிகழ்வுகளை நடத்தி வைத்து,  திருநாராயணபுரம் கிராமத்தையும், நிலங்களையும் தானமாக அளித்துவிட்டு மைசூரை நோக்கிப் படையெடுத்துச் சென்றார் என்பது தல வரலாற்றுத் தகவலாகும்.

 

கோயில் சிறப்புகள்:

  • பிரம்மன், பிரகலாதன், சுக்ரீவன், கருடன், ஹனுமன், அரையர், சோழர் போன்ற பலர் வழிபட்ட பெருமைக்குரியது இத்திருக்கோயில். இதனால் இக்கோயில் ஆதிரங்கம் எனவும் போற்றப்படுகிறது.

 

  • சதுர்வேதிமங்கலம், வேதபுரி, ஆதிரங்கம் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், தற்போது இந்த திருநாராயணபுரம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

 

  • பிரம்மனுக்கு வேத உபதேசம் செய்த திருக்கோயிலாகவும் திகழ்கிறது.

 

  • இத்தலத்தில் இருக்கும் ஸ்ரீவேதநாராயண பெருமாள், ஸ்ரீவேதநாயகித் தாயார் உலகையே ரட்சித்து, ஞானம் வழங்கி அருளும் அற்புதத் திருத்தலம் ஆகும்.

 

  • வேதநாராயணபெருமாள் திருக்கோவில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது.

 

  • சிவனுக்கு உகந்த வில்வ மரத்தடியில் பெருமாளின் திருவடிகள் உள்ளது. அருகில் ஸ்ரீஆண்டாள் நாச்சியார் தனிச்சந்நிதியில்  அருள்பாலிக்கிறாள்.

 

  • நான்கு வேதங்களையும் தலையணையாகக் கொண்டு, ஆதிசேஷன்மீது பள்ளி கொண்டபடி, நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மதேவருக்கு வேத உபதேசம் செய்கிறார் ஸ்ரீதிருமால் என்பது ஐதீகம். பெருமாளின் திருவடியில் ஸ்ரீதேவியும் ஸ்ரீபூதேவியும்  இருக்கிறார்கள்.  கீழே பிரகலாதன் மூன்று வயதுக் குழந்தை வடிவில் அழகாக காட்சித் தருகிறார்.

 

  • ஆதிசேஷனும், அவரது மனைவியும் வேதநாராயணரை தாங்கிக் கொண்டிருக்கின்றனர். மேலே ஆதிசேஷன், கீழே அவரது மனைவி என இங்கு பத்து தலைகளுடன் நாகத்தை தரிசிக்கலாம். இதுபோன்ற அமைப்பு வெகு அபூர்வமானது.

 

  • பிள்ளைத்திருநறையூர் அரையர் என்ற பக்தர், தன் மனைவி, ஆறு குழந்தைகளுடன் சுவாமியை தரிசிக்க வந்தார். அப்போது சுவாமி சந்நதிக்கு மேலே பனை ஓலை வேயப்பட்டிருந்தது. அந்த ஓலையில் தீப்பற்றும்படி சுவாமியே மாயச்செயல் ஒன்றை நிகழ்த்தினார். அதிர்ந்துபோன பக்தர் சுவாமி மீது தீப்பிழம்புகள் விழாமல் இருக்க மனைவி, குழந்தைகளை படுக்க வைத்து, அவர்கள் மீது குறுக்காக விழுந்து தன்மீது தீப்பிழம்புகள் விழுமாறு ஏற்றுக்கொண்டார். குடும்பத்தினர் மீது அக்கறை கொண்ட அவருக்கு காட்சி தந்த பெருமாள், அனைவருக்கும் மோட்சம் கொடுத்தருளினார். பிராகாரத்திலுள்ள ஆழ்வார் சந்நதியில் பிள்ளைத்திருநறையூர் அரையரை தரிசிக்கலாம்.

 

  • ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பெருமாளைத் தரிசிப்பது போன்றே இங்கும் வேதநாராயணப் பெருமாள் சயனக் கோலத்தில் தரிசிக்கலாம். பெருமாள் சன்னதிக்கு அருகிலேயே வேதநாயகித் தாயார் சன்னதியும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பெருமாள் சன்னதியில் மூலவருக்கு முன்னால் ஸ்ரீதேவி-பூதேவியுடனும், தாயார் சன்னதியில் வேதநாயகித் தாயாரும் உற்சவ மூர்த்திகளாக எழுந்தருளியுள்ளனர்.

 

  • ராமானுஜர் இங்கு வந்த போது, வேதநாராயணப் பெருமாள் அவரிடம் காவிரியில் நீராடி வெள்ளை ஆடை உடுத்தி வா என்றாராம். ராமானுஜரும் அவ்வாறே வந்தார். சித்திரை மாதத் திருவாதிரை நட்சத்திரத்தன்று ராமானுஜர் வெள்ளை உடை அணிந்து புறப்பாடாவார்.

 

  • அசுர வேந்தனாகிய இரணியனின் மகன் பிரகலாதன். ஸ்ரீ நாராயணனின் பக்தனாக இருந்ததால், அவனை இரணியன் வெறுத்தான். நாராயணர் கடும் கோபத்துடன் நரசிம்ம வடிவில் இரணியனைக் கொன்று சீற்றத்துடன் நின்றார். சீற்றம் தணிந்த இறைவன், பிரகலாதனிடம் உனக்கு வேண்டியதைக் கேள் என்றார். அதற்கு பிரகலாதன், பெருமாளை சாந்த ரூபத்தில் காண வேண்டும் என்றார். நீ வேண்டியதை போல், உனக்கு திருநாராயணபுரத்தில் சாந்த ரூபத்தில் காட்சியளிப்பேன் என்று கூறி, அவ்வண்ணமே செய்தருளினார்.

 

திருவிழா:

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு வாய்ந்த வைகுந்த ஏகாதசி திருவிழாவைப்  போன்று, திருநாராயணபுரத்திலும் வைகுந்த ஏகாதசி 21 நாள்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. பகல்பத்து, இராப்பத்து நாள்களில் சுவாமி புறப்பாடும், தொடர்ந்து பரமபதவாசல் திறப்பும் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வர். ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெறுவது போன்று, இக்கோயிலிலும் பங்குனி உத்திரத் திருநாளன்று சேர்த்தி சேவை நடைபெறும். அப்போது வேதநாயகித் தாயாருடன் வேதநாராயணப் பெருமாள் எழுந்தருளி, சேர்த்தி சேவையில் பக்தர்களுக்குக் காட்சியளிப்பார். இதைத் தவிர புரட்டாசி மாதத்தில் நவராத்திரி உத்சவம், ஹனுமன் ஜயந்தி விழாவும் சிறப்பாக நடைபெறும்.

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் திருக்கோயில்,

திருநாராயணபுரம் – 621 203.

திருச்சி மாவட்டம்.

 

போன்:    

+91- 99766 11898.

 

அமைவிடம்:

திருச்சியில் இருந்து 52 கி.மீ., தூரத்திலுள்ள தொட்டியம் சென்று, அங்கிருந்து 5 கி.மீ., சென்றால் திருநாராயணபுரத்தை அடையலாம். தொட்டியத்தில் இருந்து பஸ் வசதி குறைவு. ஆட்டோ உண்டு.

Share this:

Write a Reply or Comment

three × 1 =