February 07 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மருங்கூர்

  1. அருள்மிகு மருங்கூர் சுப்பிரமணியர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     சுப்பிரமணியர்

தீர்த்தம்    :     முருக தீர்த்தம்

ஊர்       :     மருங்கூர்

மாவட்டம்  :     கன்னியாகுமரி

 

ஸ்தல வரலாறு:

அகலிகை மீது ஆசை கொண்ட இந்திரனின் உடல் முழுவதும் கண்ணாகும் படி அவளது கணவர் கவுதம முனிவர் சபித்து விட்டார். சாப விமோசனம் பெற இந்திரன் இங்கு வந்தான். இவ்வூர் அருகிலுள்ள சுசீந்திரத்தில் சிவன் காட்சி தந்து விமோசனம் கொடுத்தருளினார். இந்திரனைச் சுமந்ததால், தனக்கும் பாவம் ஒட்டிக்கொண்டதாகக் கருதிய அவனது வாகனமான உச்சைசிரவம் என்னும் குதிரையும் சிவனிடம் விமோசனம் கேட்டது. சிவன் இத்தலத்தைச் சுட்டிக்காட்டி முருகனை வழிபட விமோசனம் கிடைக்குமென்றார். அதன்படி இந்த உச்சைசிரவம் என்னும் வெள்ளைகுதிரை இறைவனிடம் குதிரையாகிய என்னால் அர்ச்சிக்க முடியாதே என உள்ளம் கலங்கி முறையிட்டது. அப்பொழுது சுனந்தனையும் உடன் அழைத்து செல்லுமாறு இறைவன் அறிவுறுத்தினார். பின்னர், உச்சைசிரவம் இங்கிருந்த குன்றின் மீது முருகனை வேண்டி தவமிருந்தது. முருகப்பெருமான் அதற்கு காட்சி தந்து விமோசனம் கொடுத்தருளினாராம் குதிரை வழிபட்ட தலம் என்பதால் இதற்கு வாசிபுரம்(வாசி என்றால் குதிரை)என்றும் பெயருண்டு. எல்லா முருகன் கோவில்களிலும் மயில் மீதுதான் முருகன் வலம்வருவார். ஆனால், இங்கு குதிரை வழிபட்டத் தலம் என்பதால், இத்தல முருகன் விழாக்காலங்களில் மயிலுக்குப் பதிலாக குதிரையில் பவனிவருவார். இது இந்தக் கோவிலின் விசேஷமாகும்.

 

கோயில் சிறப்புகள்:

  • மூலஸ்தானத்தில் முருகன் அசுர மயில் மீது அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இவரது சிலை திருவாசி, மயிலுடன் ஒரே கல்லில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு.

 

  • முருகனுக்கு குதிரை வாகனம் உள்ள விசேஷத்தலம் இது.

 

  • இத்தலத்தில் முருகன் சுப்பிரமணியர் என்ற திருநாமத்தோடு முமூர்த்திகளின் அம்சமாய் வீற்றிருந்து அருள்புரிகிறார்.

 

  • ஐப்பசி மாதத்தில் சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் காலையில் முருகன் சிவப்பு வஸ்திரம் அணிந்து நடராஜராகவும், மதியம் வெள்ளை வஸ்திரம் அணிந்து பிரம்மாவாகவும், மாலையில் பச்சை வஸ்திரம் அணிந்து விஷ்ணு சொரூபமாகவும் காட்சி தருவது இத்தலத்தின் சிறப்பாகும்.

 

  • குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்”ன்ற ஔவ்வையின் வாக்கிற்கேற்ப இந்த திருக்கோவிலும் மலைமேல் தான் இருக்க்கிறது

 

  • தன்னை வணங்கும் பக்தர்களுக்கு மருங்கில் (நெருங்கி) வந்து அருள்பவர் என்பதால், இவ்வூர் மருங்கூர் என பெயர் வந்தது.

 

  • ஏறக்குறைய 80 அடி உயரமும், 22 ஏக்கர் பரப்பளவும் கொண்ட இந்த மலை திருமலை, மங்கலமலை,  எழில்மலை, சித்தர்மலை, வேள்விமலை எனவும் அழைக்கபடுகிறது. தூரத்தில் இருந்து பார்க்கும் போது மேற்குப்புறம் உயர்ந்தும், அதன் தலை பகுதியில் திருக்கோவிலும்  கிழக்குப்புறம் நீண்டும் சரிந்தும் ஒரு ஆண் மயில் போலத் தோற்றம் அளிப்பதால் இந்த மலை மயூரகிரி, மயில்மலை எனவும் சொல்லபடுகிறது.

 

  • திரு.நாராயணகுரு தனிமையை நாடி இங்குள்ள மருந்துவாழ் மலையில் தங்கி இருந்த போது அடிக்கடி இந்த ஸ்தலத்திற்கு வந்து தவம் செய்வாராம். ஒருநாள் நடுராத்திரியில் முதியவர் ஒருவர் பசியோடு இருந்த நாராயண குருவுடன் தான் கொண்டு வந்த உணவை உண்ண கொடுத்து, தானும் உண்டாராம். பின்னர் மறைந்து விட்டார். அது இங்குள்ள முருகன் என சொல்லப்படுகிறது.

 

  • பிறந்த குழந்தைக்கு சோறு ஊட்டும் வைபவம் இங்கு சிறப்பு. புளியோதரை பொங்கல் சர்க்கரை பொங்கல் உப்பு புளி மிளகாய் சேர்ந்த துவையலை முருகனுக்கு படைக்கின்றனர்.  அதை பிரசாதமாகப் பெற்று குழந்தைக்கு ஊட்டுவர்

 

  • விமோசனம் கேட்டு தன்னை வழிபட்ட உச்சைசிரவஸுக்கு, சிவனே பாவ விமோசனம் கொடுத்தருளியிருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யாமல் முருகனை வழிபடும் படி அதை அனுப்பி வைத்தார். தன் அம்சமான முருகனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பதற்காக சிவன் இவ்வாறு செய்ததாகச் சொல்வர். இதனால் இத்தல முருகனை சிவனாகக் கருதி சிவமுருகன் என்று அழைக்கிறார்கள்.

 

  • பிரகாரத்தில் கன்னி விநாயகர், சண்முகர், குலசேகர விநாயகர், பீட வடிவில் காவல் தெய்வம் பூதத்தான் மற்றும் காசிலிங்கம் சன்னதிகள் உள்ளன.

 

திருவிழா: 

கந்தசஷ்டி, பங்குனி உத்திரம், கார்த்திகை, சூரசம்ஹாரம்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில்,

மருங்கூர், நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டம்.

 

போன்:    

+91 4652- 241 421.

 

அமைவிடம்:

நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்டில் இருந்து 10 கி.மீ.. பஸ் உள்ளது.

Share this:

Write a Reply or Comment

eight + 6 =