January 28 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கோனேரிராஜபுரம்

  1. அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

           

மூலவர்        :     உமாமகேஸ்வரர் (பூமிநாதர்)

அம்மன்         :     அங்கவள நாயகி (தேக சுந்தரி), தேக சவுந்தரி

தல விருட்சம்   :     அரசமரம், வில்வம், பிரம்ம தீர்த்தம்

தீர்த்தம்         :     பூமி தீர்த்தம்

புராண பெயர்    :     திருநல்லம், திருவல்லம்

ஊர்            :     கோனேரிராஜபுரம்

மாவட்டம்       :     நாகப்பட்டினம்

 

ஸ்தல வரலாறு:

ஒரு முறை புரூரவஸ் என்ற மன்னனுக்கு குஷ்ட நோய் ஏற்பட்டது. இந்த நோயால் மிகவும் வருந்திய மன்னன், நோய் தீருவதற்காக பல திருத்தலங்கள் சென்று வழிபட்டான். கடைசியில் காவிரித்தென்கரையில் உள்ள இத்தலம் வந்து வழிபாடு செய்ததும் அவனுக்கு நோய் தீர்ந்தது. மிகுந்த மகிழ்ச்சியடைந்த மன்னன் கோயிலுக்கு காணிக்கையாக, சிவசன்னதி விமானத்தை பொன் தகட்டால் வேய்ந்தான். அத்துடன் வைகாசி விசாக தினத்தில் திருவிழா நடக்கவும் ஏற்பாடு செய்தான் என்பது வரலாறு.

முன்பு செங்கல்லால் கட்டப்பட்டிருந்த இக்கோவிலை கற்றளிக் கோவில் ஆக்கிய பெருமை கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி ஆவார். கோவிலின் வெளியே சக்தி தீர்த்தம் அமைந்திருக்கிறது. கோவில் முகப்பு வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் எதிரே நீண்ட முன்மண்டபமும், மண்டபத்தின் உள்ளே கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தியெம் பெருமான் உள்ளனர். மண்டபத்தின் மேற்பாகத்தின் உட்புற முழுவதும் அறுபத்துமூவர், சிவமூர்த்தம், பன்னிரண்டு ராசிகள், மகரிஷிகள் முதலிய உருவங்கள் அனைத்தும் வண்ண ஓவியங்களாக எழுதப்பட்டுள்ளன

 

இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக் கூத்தராகிய ஸ்ரீ நடராஜப் பெருமான் உலகில் மிகப் பெரிய வடிவமாகவும், காண்போரை சுண்டி இழுக்கும் நர்த்தன சுந்தர நடராஜனாகவும் விளங்குகிறார். சோழ மன்னர் ஒருவரது கனவில் இத்தலத்து இறைவன் தோன்றி கலைநுட்பத்துடன் கூடிய பெரிய பஞ்சலோக நடராஜர் விக்கிரகம் ஒன்றை அமைக்க கட்டளையிட்டார். அதன்படி  அமைக்க கால கெடுவுடன் சிற்பி ஒருவருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அச்சில் வார்க்கும்போது ஏதேனும் ஒரு குறை தோன்றி குறிப்பிட்ட கால நிர்ணயத்தில் முடிக்க முடியாததால் சிற்பிக்கு சிறைச்சேதம் தண்டனையாக விதிக்கப்பட்டது. செய்வதறியாது இறைவனையே தியானித்து அமர்ந்திருந்தார் சிற்பி. அருகில் சிலை செய்வதற்காக பஞ்சலோகக் கூழ் கொதித்துக்கொண்டிருந்தது. மேலும் அவரை சோதிக்க விரும்பாத இறைவன் வயதான சிவனடியார் உருவில் தோன்றி சிற்பியிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்க, மிகுந்த மன உலைச்சலில் இருந்த சிற்பி குழப்பத்தில் அருகில் உள்ள ஐம்பொன் குழம்பை காண்பிக்கின்றார்.

திரவவடிவமாக உள்ள அந்த கொதிக்கும் உலோகக் கூழை அந்த சிவனடியார் அருந்துகிறார். மறுகணம் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அங்கு கூழையும் காணவில்லை, சிவனடியாரையும் காணவில்லை. எம்பெருமான் ஸ்ரீ நடராஜ மூர்த்தியாக கூத்தபிரானாக விக்ரக வடிவமாக காட்சியளித்தாராம். இந்த சம்பவம் நடந்தது ஒரு மார்கழி மாத திருவாதிரை திருநாளன்று எனவும் சொல்லப்படுகிறது. அதுதான் நாம் இப்பொழுதும் இத்தலத்தில் காணும் ஸ்ரீ நடராஜ மூர்த்தியாகும். இந்த மூர்த்தியின் தேகத்தில் மரு, முடி, மச்சம், தேமல் போன்றவைகள் காணப்படுவதும் கால்களில் ரேகை, நரம்பு இழைகள் தென்படுவதும் உலக மகா அதிசயம். அருகில் சிவகாமி அம்மையுடன் (இதுவும் சுயம்பு மூர்த்தி) கூடிய மிகப் பெரிய வடிவமான இந்நடராஜ மூர்த்தி எப்பொழுதும் மூலஸ்தானத்தில்தான் இருப்பார். வெளியே உலாவருவதில்லை.

 

கோயில் சிறப்புகள்:

  • சோழப்பேரரசின் பெரும் தேவியாக விளங்கிய செம்பியன்மாதேவியினால் கற்றளியாக திருப்பணி செய்யப்பெற்ற பெருமையும் உடைய சிவத்தலம், திருநல்லம் உமாமகேஸ்வரர் திருக்கோவில்.

 

  • இங்குள்ள இறைவன் உமாமகேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். மேலும் இத்தலப் பெருமான், உமாதேவியை திருமணம் செய்து கொண்டு திருமண கோலத்தில் விளங்குவதால் இவரை கல்யாண சுந்தரர் என்றும் அழைக்கிறார்கள். இத்தலத்து இறைவனை பூமிதேவி, பூஜித்து வழிபட்டதால் பூமிநாதர் எனவும், கல்வெட்டுகளில் திருநல்லமுடையார் எனவும் அழைக்கப்படுகிறார்.

 

  • இத்தல இறைவன் நாலரை அடி உயர சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 

  • ஒரே கொப்பில் 13 தளம் உள்ள வில்வ இலை கோயில் தல விருட்சமாக உள்ளது

 

  • இத்தலத்தில் பூமி தேவியால் ஏற்படுத்தி நீராடப்பெற்ற பூமி தீர்த்தமும், பிரம்மனால் ஏற்படுத்தப்பட்ட பிரம்ம தீர்த்தமும், விஸ்வகர்மாவினால் நிர்மாணிக்கப்பட்ட ஞான கூபம் என்னும் கிணறும் உள்ளன. இத்தீர்த்தத்தில் நீராடுவோர் குஷ்டநோயும், பிற பாவங்களும் நீங்கி நலம் பெறுவர் என தலவரலாறு கூறுகிறது. இத்தலத்தின் தல விருட்சம் அரச மரமாகும்.

 

  • உமாமகேஸ்வர பெருமானை தேவர்களும், முனிவர்களும், அரசர்களும் வழிபட்டனர். அவர்களில் பூமி தேவிக்கு அசுர பயம் போக்கி அருள் செய்ததும், சந்திரகுலமன்னன் புரூரவசுவின் குஷ்டநோய் போக்கி அருள் செய்ததும், கவுதம முனிவருக்கு ஆனந்த தாண்டவ காட்சி அளித்து அருளியதும் இத்தல பெருமானின் அற்புதங்களாகும்

 

  • திருநல்லத்தின் எட்டு திசைகளிலும் அஷ்டதிக்கு பாலகர்களால் நிறுவி பூஜித்து வழிபட்ட சிவத்தலங்கள் சூழ்ந்துள்ளன.

 

  • சிவபெருமானும், உமாதேவியும் திருவேள்விகுடியில் திருமண வேள்வியும், திருமணஞ்சேரியில் மாலை மாற்றியும், திருநல்லத்தில் திருக்கல்யாணமும் செய்து காட்சி தந்தனர் என்ற செவிவழிச் செய்தியும் வழங்கி வருகிறது.

 

  • துர்கை மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறாள். எமதர்மன் திருக்கடையூரில் ஏற்பட்ட பயத்தை போக்க இந்த துர்கையை வழிபாடு செய்துள்ளான்.

 

  • ஒரே மூலஸ்தானத்தில் 6 விநாயகர் அமர்ந்து விநாயகர் சபையாக அருள்பாலிக்கிறார்கள்.

 

  • நந்தி பகவான் இங்கு வழிபாடு செய்ததாக புராணம் கூறுகிறது.

 

  • 16 சித்தர்கள் இங்கு வழிபாடு செய்துள்ளனர்.மூன்று சண்டிகேஸ்வரர் உள்ளனர். பெருமாள் தாரை வார்த்து கொடுக்க சிவபார்வதி திருமணக்காட்சியை அகத்தியர் இங்கு தரிசனம் செய்துள்ளார்.

 

திருவிழா: 

வைகாசி விசாகத்திலும், மார்கழி திருவாதிரையிலும் பிரமோற்சவ திருவிழா இரண்டு முறை நடக்கிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில்,

கோனேரிராஜபுரம் -612 201,

நாகப்பட்டினம் மாவட்டம்.

 

போன்:    

+91- 435 – 244 9830, 244 9800

 

அமைவிடம்:

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆடுதுறை ரெயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மேலும் கும்பகோணம் காரைக்கால் பேருந்து வழித்தடத்தில் புதூரில் இருந்து தென்கிழக்கே 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது கும்பகோணத்தில் இருந்து வடமட்டம் செல்லும் நகரப் பேருந்தில் சென்றால் கோனேரிராஜபுரம் அருகில் இறங்கி திருநல்லம் திருக்கோவிலை சென்றடையலாம்.

Share this:

Write a Reply or Comment

three × one =