January 25 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்புலியூர்

  1. அருள்மிகு மாயப்பிரான் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     மாயப்பிரான்

தாயார்          :     பொற்கொடி நாச்சியார்

தீர்த்தம்         :     பிரக்ஞாசரஸ் தீர்த்தம்

புராண பெயர்    :     குட்டநாடு

ஊர்            :     திருப்புலியூர்

மாவட்டம்       :     ஆலப்புழா

மாநிலம்        :     கேரளா

 

ஸ்தல வரலாறு:

புரவலன் வழங்கும் பரிசில்கள் புலவர்களை வேண்டுமானால் ஈர்க்கலாம்; ஆனால், முற்றும் துறந்த முனிவர்களை ஈர்க்காது என்பதற்கு திருப்புலியூர் திருத்தலம் ஓர் உதாரணமாகத் திகழ்ந்தது. மன்னன் சிபியின் புதல்வன் வ்ருஷாதர்பி. மிதமிஞ்சிய செல்வ வளத்தால் தலையில் கனம் ஏற்றிக்கொண்டு அறம் பிறழ்ந்து வாழ்ந்து வந்தான். இவனுக்குப் பாடம் புகட்ட விரும்பினார் பரந்தாமன். ஒரு காலகட்டத்தில் இயற்கையின் சீற்றத்தால் கொடிய பஞ்சம் தலைவிரித்தாட, திகைத்து நின்றான் மன்னன். ஆனால், அப்போதும் தாகத்தைத் தணிக்க, பசியைப் போக்க தனக்கு நீரும், உணவும்தான் வேண்டும்; வெறும் பொன்னும் பொருளும் தாகத்தையோ, பசியையோ தீர்க்காது என்று புரிந்து கொள்ளவில்லை அவன். அச்சமயம் தன் நாட்டிற்கு சப்த ரிஷிகள் வருகை தந்திருப்பதை அறிந்த அவன், அவர்களிடம், தன் நாட்டின் வறுமையை அவர்கள் ஒழித்தார்களென்றால், அவர்களுக்குப் பெருஞ்செல்வத்தை வாரி வழங்குவதாகத் தெரிவித்தான். ஆனால், அவனை அலட்சியமாகப் பார்த்த ரிஷிகள், தாங்கள் யாரிடமும் யாசகம் பெற விரும்பியதில்லை; அதனால் யாரும் தானம் தருவதைத் தங்களால் ஏற்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதோடு தாங்கள் செல்வமிகுந்த வாழ்க்கைக்கு மிகவும் அப்பாற்பட்டவர்கள், தங்களை செல்வத்தால் அடிமைப்படுத்திவிட முடியாது என்றும் கோபித்துச் சொன்னார்கள்.

அவர்களால் தன் நாட்டில் நிலவும் பஞ்சத்தைப் போக்க முடியும் என்று உறுதியாக நம்பிய மன்னன், அவர்களை எப்படியாவது தன் வழிக்குக் கொண்டுவர குறுக்கு வழியில் சிந்தித்தான். அவர்களுக்கு சில கனிகளை அனுப்பி வைத்தான். அவற்றினூடே சில தங்கக் கட்டிகளையும் சேர்த்து, மறைத்து வைத்தான். ஆனால், அவர்களோ தானம் என்ற பெயரில் வழங்கப்படும் எந்தப் பொருளையும் ஏறெடுத்தும் பார்க்க விரும்பவில்லை. அதனால் அந்தக் கூடைப் பழங்களையும் அப்படியே திருப்பி அனுப்பிவிட்டார்கள். அதோடு, ‘‘இப்படி எங்களுக்கு தானமளித்து, எங்கள் தவ ஆற்றலால் உன்னுடைய பஞ்சத்தைப் போக்க வேண்டும் என்று விரும்புவதைவிட, நீயே நேரடியாக இறைவனிடம் இறைஞ்சினால், அவர் உன் மீது இரக்கம் கொண்டு, அருள் பொழியக்கூடுமே!’’ என்று அறிவுரையும் சொன்னார்கள். இதைக் கேட்டு வெகுண்டான், வ்ருஷாதர்பி. செல்வத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற அவனது இறுமாப்பில் விழுந்த சாட்டையடி அவன் மனதில் பெரிய வலியை ஏற்படுத்தியது. ஆனாலும், கொஞ்சமும் தன் மனதை மாற்றிக்கொள்ள அவன் விரும்பவில்லை. மேன்மேலும் கோபமும், அவமான பாதிப்பும் அதிகரிக்க, உடனே ஒரு தீய யாகத்தைச் செய்தான். அதில் தோன்றிய ஒரு துர்தேவதையை அந்த முனிவர்கள் மீது ஏவினான். அந்த மூடனின் அறியாமையால் வெகுண்ட சப்த ரிஷிகள், இறைவனை சரணடையச் சொன்னால், துர்தேவதையை உருவாக்கியதோடு அதைத் தங்கள் மீதே ஏவுகிறானே என்றெல்லாம் வேதனை அடைந்தார்கள். உடனே பரந்தாமனை நோக்கி ஆழ்ந்த தியானம் செய்தார்கள்.

இவர்களது நிலையை அறிந்த பரம்பொருள், உடனே இந்திரனிடம், அந்த ரிஷிகளை அவர்களை எதிர்நோக்கியிருக்கும் ஆபத்திலிருந்து காக்குமாறு உத்தரவிட்டார். இந்திரனும் புலியாக உருமாறி, துர்தேவதையைச் சிதைத்து வதைத்தான். வ்ருஷாதர்பி திகைத்து நின்றான். அவனிடம், ரிஷிகள், ‘‘செல்வம் எல்லாவற்றையும் கொடுத்துவிடாது என்பதைப் புரிந்துகொள். இணையற்ற செல்வமான ஸ்ரீமன் நாராயணனை நீ தியானித்திருந்தால், உன் நாட்டில் பஞ்சமே வந்திருக்காது. அப்படி வந்துவிட்ட பின்னும் இறையருளை உணராது, வீம்பு பிடிவாதத்தால் எங்களையும் விலைக்கு வாங்க நினைத்த உன் ஆணவப் போக்கை மாற்றிக்கொள்’’  என்று அறிவுறுத்தினார்கள். அதேசமயம் அவர்கள் முன் காட்சி தந்தார் ஸ்ரீமன் நாராயணன். தமக்கு தரிசனம் அளித்த அந்தப் பரம்பொருளை ‘மாயப்பிரான்’ என்றழைத்துப் போற்றினார்கள். கூடவே, அறியாது பிழை செய்த இந்த மன்னவனை மன்னித்துவிடுமாறும் கேட்டுக்கொண்டார்கள். அவன் நாட்டில் நிலவிய பஞ்சத்தைப் போக்கி சுபிட்சம் உண்டாக்குமாறும் சிபாரிசு செய்தார்கள். வ்ருஷாதர்பி தன் தவறை உணர்ந்தான். அப்படியே அவர்கள் முன் தண்டனிட்ட அவன், அந்தப் பரம்பொருள் அங்கேயே கோயில் கொண்டு தன்னையும், தன் நாட்டையும் பரிபாலிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தான். ரிஷிகளும் அதை ஆமோதிக்க, மாயப்பிரான் அவ்வாறே அங்கே அர்ச்சாவதாரம் கொண்டார்.

 

கோயில் சிறப்புகள்:

  • 108 வைணவ திவ்ய தேச கோயில்களில், கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்புலியூர் மாயப்பிரான் கோயில், 83-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.

 

  • பஞ்ச பாண்டவர்களுள் பீமனால் புதுப்பிக்கப்பட்டு, இவ்விடத்தில் இருந்து திருமாலை நோக்கி அவர் தவம் புரிந்ததால் இத்தலம் பீம ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள பெரிய கதாயுதம், பீமன் உபயோகப்படுத்தியது என்று கூறப்படுகிறது.

 

  • திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

 

  • இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருளுகிறார். இவரது சன்னதிக்கு மேல் உள்ள விமானம் புருஷஸுக்த விமானம் எனப்படுகிறது.

 

  • இத்தல பெருமாளை சப்த ரிஷிகள் வழிபாடு செய்துள்ளனர். ரிஷிகள் அனைவரும் பெருமாள் ஒருவரே பரம்பொருள். மற்ற அனைத்தும் மாயை என நினைத்து வழிபாடு செய்தனர். இதனால் பெருமாள் இவர்களுக்கு மாயப்பிரானாக காட்சிதந்தார்.

 

  • பண்டைத் தமிழகத்தில் 12 உட்பிரிவுகள் இருந்ததாகவும், அதில் ஒரு பகுதி குட்டநாடு என்ற பெயரில் இருந்ததாக தொல்காப்பியம் கூறுகிறது. நம்மாழ்வாரும் தனது பாடலில் இப்பகுதியில் பெரிய நகரம் இருந்ததாகக் கூறியுள்ளார். இப்பகுதி மக்களும் இத்தலத்தை ‘குட்டநாடு திருப்புலியூர்’ என்று அழைக்கின்றனர்.

 

  • 3200 வருடங்கள் புராதனமானது இக்கோயில் என்கிறார்கள். ஒவ்வொரு ஜனவரி மாதமும் மகரசங்கராந்தி தினத்தன்று பக்தர்கள் காவடி எடுக்கிறார்கள். பிறகு ஒரு வாரம் கழித்து கொடியேற்றி விழா கொண்டாடுகிறார்கள்.

 

 

திருவிழா: 

மார்கழி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் கொடியேற்றி, பத்தாம் நாள் ஆறாட்டு நடைபெறுகிறது. தை மாதம் முதல் தேதியில் காவடியாட்டம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 5 மணி முதல் 11 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு மாயப்பிரான் திருக்கோயில்,

திருப்புலியூர் (குட்டநாடு)- 689 510

ஆழப்புழா மாவட்டம்

கேரளா மாநிலம்.

 

போன்:    

+91- 94478 00291

 

அமைவிடம்:

செங்கணூரிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் திருப்புலியூர் உள்ளது. கேரளாவின் அனைத்து மாவட்டத்திலிருந்தும் செங்கணூருக்கு பஸ் வசதி உள்ளது.

Share this:

Write a Reply or Comment

eleven − 3 =