December 16 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மயிலாப்பூர்

  1. அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     மாதவப்பெருமாள்

உற்சவர்        :     அரவிந்த மாதவன்.

தாயார்          :     அமிர்தவல்லி

தல விருட்சம்   :     புன்னை

தீர்த்தம்         :     சந்தானபுஷ்கரிணி

புராண பெயர்    :     மாதவபுரம்

ஊர்             :     மயிலாப்பூர்

மாவட்டம்       :     சென்னை

 

ஸ்தல வரலாறு:

இக்கோயிலில் பெருமாள் மாதவப் பெருமாள் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஒரு சமயம் திருமாலின் சாந்த குணத்தை சோதிக்கச்சென்ற பிருகு மகரிஷி அவரது மார்பில் உதைக்கச் சென்றார். இதனால் கோபம் கொண்ட மகாலட்சுமி சுவாமியை விட்டுப் பிரிந்தார். தன் தவறுக்கு பிராயச்சித்தம் பெற விரும்பிய பிருகு மகரிஷி மகாலட்சுமியே தனக்கு மகளாக பிறக்க வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார். மகாலட்சுமி இங்குள்ள தீர்த்தத்தில் குழந்தையாக அவதரித்தாள். லட்சுமி அமுதம் கடைந்த பாற்கடலில் இருந்து தோன்றியவள் என்பதால் இவளுக்கு அமிர்தவல்லி என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். அவள் திருமண வயதை அடைந்தபோது, அவளை மணந்து கொள்ளும்படி திருமாலிடம் பிருகு மகரிஷி வேண்டினார். அவரும் இங்கு வந்து தாயாரை மணந்து கொண்டார். பிருகுவின் வேண்டுதலுக்காக சுவாமியும், தாயாரும் இங்கு எழுந்தருளினர்.

 

கோயில் சிறப்புகள்:

  • சென்னையில் உள்ள பெருமாள் கோயில்களில் தனி சிறப்பையும் பழமையும் கொண்டது இந்த கோயில் .

 

  • முதல் மூன்று ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் அவதரித்த தலம்

 

  • மஹாலக்ஷ்மி தாயார் அவதரித்த புண்ணிய தலம் .

 

  • இங்கு மூலவர் மாதவப்பெருமாள் கல்யாண கோலத்தில் காட்சிகொடுக்கிறார் . இதனால் இவருக்கு கல்யாண மாதவன் என்ற பெயரும் உண்டு . இவரின் வலது புறத்தில் தாயார் வேதவல்லி தனி சன்னதியில் உள்ளார் . இவர் பெருமானை திருமண செய்ய இங்குள்ள சந்தான புஷ்கரிணியில் ஒரு மாசி மாதத்தன்று குழந்தையாக அவதரித்தார் இதை ஒவ்வொரு மாசி மாதமும் விழாவாக கொண்டாடுகிறார்கள் ,அன்று மட்டும் தாயாரோடு பெருமாளும் சேர்ந்து எழுந்தருளுகிறார் .

 

  • இத்தலத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் திருமகளும் நிலமகளும் உடன் இருக்க, ஆனந்த நிலைய விமானத்தின்கீழ் உட்கார்ந்த நிலையில் காட்சி தருகிறார் மாதவப் பெருமாள். கல்யாணத் திருக்கோலத்துடன் இருப்பதால் இவரை ‘கல்யாண மாதவன்’ என்றும் ‘பிரார்த்தனை நிறைவேற்றும் பெருமாள்’ எனவும் போற்றப்படுகிறார். சங்கு – சக்கரம், அபயம், கதை ஆகியவற்றுடன் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி-பூதேவியுடன் காட்சி தருகிறார்.

 

  • முதல் மூன்று ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் இக்கோயிலுக்கு அருகில் உள்ள மணிக்கைரவம் என்ற கிணற்றில் செவ்வல்லி மலரில் அவதரித்தார் . இவருக்கு இக்கோயிலில் தனி சன்னதி உள்ளது .ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் ஒட்டி 10 நாள் உற்சவம் நடக்கிறது . பொய்கையாழ்வார் , பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார் ஆகிய மூவரையும் ஒரே இடத்தில் பெருமாள் அருளினார் . இந்த நிகழ்ச்சியும் , பேயாழ்வார் கிணற்றில் அவதரித்த நிகழ்ச்சியும் , திருமிசையாழ்வார் பேயாழ்வாரிடம் சிஷியராக இருந்து உபதேசம் பெற்ற நிகழ்ச்சியும் உற்சவத்தின் போது நடக்கிறது.

 

  • ‘கலியுகத்தில் கலிதோஷமில்லாது தவம் செய்ய சிறந்த இடம் எது?’ என வினவிய வேத வியாசருக்கு, ‘ப்ருகு முனிவர் ஆசிரமம் அமைந்த இந்த மாதவபுரமே சிறந்தது’ என ஸ்ரீமன் நாராயணனே அருளியிருக்கிறார்.

 

  • ஆண்டாள், தன் திருப்பாவை 9வது பாசுரத்தில் ‘மாயன் மாதவன் வைகுந்தன் என்றும் கடைசி பாசுரத்தில், ‘வங்கக்கடல் கடைந்த மாதவனை என்று அழைக்கிறாள்.

 

  • ஆண்டாளுக்கு இங்கு தனியான புராதன சந்நதி அமைந்துள்ளது. ஆண்டாள் மடியில் மாதவர் கொண்டிருக்கும் சயனத் திருக்கோலம் இத்திருக்கோயிலில் மிகவும் சிறப்பானது.

 

  • சந்தான புஷ்கரணியின் மேற்குப் பக்கம் கிழக்கு முகமாக திருமகளுடன் வராக மூர்த்தி காட்சி அளிக்கிறார். இவருக்கு ‘ஞானப்பிரான்’ என்ற சிறப்பு பெயர் உண்டு

 

  • இத்தலத்தில் சீதை, லட்சுமணர் அனுமாருடன் ராமர் அருள்பாலிக்கிறார். வேணுகோபாலன் உற்சவ மூர்த்தி சங்கு – சக்கரத்துடன் காட்சி அளிக்கிறார்.

 

  • செல்லப் பிள்ளை என்றழைக்கப்படும் சம்பத்குமார் உற்சவ மூர்த்தி சங்கு, சக்கரம், அபயம், கதையுடன் சேவை சாதிக்கிறார். இவருடைய திருப்பாதங்களில் மகாலட்சுமி அமர்ந்துள்ளார். உடன் ஆண்டாளும் இருக்கிறார். இவருக்கு ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் பிரார்த்தனை திருமஞ்சனம் நடைபெறுகிறது.

 

  • ஆஞ்சநேயர் பால ஆஞ்சநேயராக காட்சி காட்சி தருகிறார்.

 

  • புன்னை மரம் தல விருட்சம். இக்கோயிலின் மூலஸ்தானத்தின் பின்புறம் புன்னை விருட்சமும், நந்தவனமும் அமைந்துள்ளன.

 

 

 

திருவிழா: 

சித்திரையில் பிரம்மோற்ஸவம், ஆடிப்பூரம், நவராத்திரி, மாசியில் தெப்பத்திருவிழா, ராமநவமி, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம்.

 

திறக்கும் நேரம்:

காலை6.30 மணி முதல் 11மணி வரை,

மாலை 4.39 மணி முதல் இரவு 9மணி வரை திறந்திருக்கும்

 

முகவரி:  

அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோயில்,

மயிலாப்பூர் – 600 004.

சென்னை.

 

போன்:    

+91 -44-2498 5112, 2466 2039, 94440 18239.

 

அமைவிடம்:

சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை பஸ் ஸ்டாப்பில் இறங்கி, இக்கோயிலுக்கு நடந்தே சென்று விடலாம். மயிலாப்பூருக்கு நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பஸ் வசதி இருக்கிறது.

Share this:

Write a Reply or Comment

5 × 2 =