December 15 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்புடைமருதூர்

  1. அருள்மிகு நாறும்பூநாதர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்          :      நாறும்பூநாதர்

உற்சவர்         :      பூநாதர்

அம்மன்          :      கோமதியம்பாள்

தல விருட்சம்   :      மருதம்

தீர்த்தம்          :      தாமிரபரணி

புராண பெயர்    :      புடார்க்கினியீஸ்வரர்

ஊர்              :      திருப்புடைமருதூர்

மாவட்டம்       :      திருநெல்வேலி

 

ஸ்தல வரலாறு:

ஒரு சமயம் சிவனிடம் தேவாதி தேவர்கள் அனைவரும் காசிக்கு ஒப்பான தலத்தைக் காட்டுமாறு வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவன், பிரம்மதண்டத்தை தரையில் இடும்படிக் கூறினார். அதன்படி, அவர்கள் பிரம்மதண்டத்தை இடவே, அது தாமிரபரணி ஆற்றை அடைந்து திருப்புடைமருதூரில் தற்போது தலம் வீற்றிருக்கும் பகுதிக்கு அருகே கரையில் ஏறி நின்றது. பிரம்மதண்டம் நின்ற இடமே காசிக்கு ஒப்பான தலம் என சிவன் கூறவே, இவ்விடத்திற்கு வந்த தேவர்கள் பிரம்மதண்டத்தை பூஜை செய்து சிவனது அருளைப்பெற்றனர்

 

ஒரு சமயம் கொடிய வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக தன் படை பரிவாரங்களோட மன்னன் ஒருவன் வந்திருந்தான். நீண்ட நேரம் எங்கும் அலைந்தும் எதுவும் அகப்படாத நிலையில் மருத மரங்கள் நிறைந்திருந்த வனத்துக்குள் படை பரிவாரங்களோடு சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தான். அந்த சமயத்தில் அழகிய புள்ளிமான் ஒன்று மின்னல் போல் துள்ளி குதித்து ஓடி ஒளிந்தது. அதனைப் பிடிக்க எண்ணிய மன்னன் தனது வில்லிலிருந்து கூரான அம்பை குறி பார்த்து எய்தான். அம்பால் தாக்கப்பட்ட மான் மிகப்பெரிய மருத மரத்தின் அருகே நின்று சென்று மாயமாய் மறைந்து போனது. இதனால் தாங்க முடியாத ஆத்திரம் ஏற்பட்டது மன்னனுக்கு. அருகே கிடந்த கோடரியால் மருத மரத்தை வெட்டினான். அந்த வேலையில் தான் யாரும் எதிர்பாராத விதமாக அந்த மான் ஓடி ஒளிந்த மருத மரத்திலிருந்து குருதி வெளிப்பட ஜோதிப்பிழம்பாய் சுயம்பு மூர்த்தியாய் இறைவன் லிங்க வடிவில் வெளிப்பட்டான் . இந்த அதிசய காட்சியை கண்ட மன்னன் பொங்கிப் பெருகிய கண்ணீர் வெள்ளத்தில் இறைவனை மானசீகமாக வணங்கினான். மன்னன் இறைவன் தன்னை ஆட்கொண்டு அந்த மருதவனத்தில் வெளிப்பட காரணமான பரம்பொருளுக்கு அவ்விடத்தில் ஒரு திருக்கோயில் கட்ட மனதில் உறுதி கொண்டான்.

 

அவ்விடத்தில் ஒரு கலைக்கோயில் ஒன்று உருவானது. திருப்புடைமருதூரில் கருவறையில் காணும் நாறும்பூநாத சுவாமி பீடத்திலிருந்து சற்று ஒருக்களித்து இடப்பக்கம் தலை சாய்த்து இருக்கிறார்.  அது உண்மையிலேயே பக்தனின் குரலுக்கு செவி சாய்ப்பதற்காக சித்தர் வேண்டிய ஒன்றாகும். கருவூர் சித்தர் நாறும்பூ நாதரை தரிசிக்க தாமிரபரணியின் அக்கறையில் வந்து கொண்டிருந்தார். அவர் வந்த நேரம் ஆற்றிலே பெரும் வெள்ளம் சுழிப்போடு ஓடிக்கொண்டிருந்தது. எனவே கரையில் நின்றவாறு “நாறும் பூ நாதா! உன்னை தரிசனம் செய்ய வந்து கொண்டிருக்கிறேன். தாமிரபரணியில் வெள்ளம் புரண்டோடுகிறது. இக்கரையில் இருக்கிறேன் உன் திருமுக தரிசனத்திற்கு வழி சொல்ல மாட்டாயா” என்று உரக்க குரல் கொடுத்து நாறும் நாதரை அழைத்தார்.

பக்தனின் குரலுக்கு செவி சாய்க்கும் நாறும்பூநாதர் தன் தலையை சிறிது திருப்பி “உன் விருப்பப்படி எனது ஆலயத்திற்கு வருவதற்கு சிரமப்பட வேண்டாம். பொருநையில் இறங்கி உள்ளே நடந்து வர தானே தயங்காமல் திருமுக தரிசனம் கிடைக்கும்” என்று அசரீரியாக ஒலித்தார். அவ்வாறே அவரும் செய்தார். அன்று முதல் கருவூராருக்காக சாய்த்த தலை நிமிராமல் வரும் பக்தர்களுக்காக மக்கள் குறையை தலை சாய்த்து கேட்டு அவர்களுக்கு வேண்டியதை செய்து தரும் வள்ளலாக திகழ்கிறார்.

 

கோயில் சிறப்புகள்:

  • இங்குள்ள இறைவன் நாறும்பூநாதர் சுயம்பு மூர்த்தி ஆவார். இவர் கருவறையில் கருவூர் சித்தரின் குரலுக்கு செவி சாய்த்த கோலத்தில் இடப்புறம் சாய்ந்த திருமேனியராய் காட்சித் தருகிறார். இவரின் மேனியில் மானின் காலடி பட்ட தழும்பும், வீரர்கள் கோடரியால் வெட்டிய தழும்பும் உள்ளது.

 

  • இங்குள்ள அம்மை கோமதி, கைலாய மலையின் ஒரு பகுதியாக விளங்கும் நீலக்கல்லால் ஆன சுயம்பு திருமேனி என இத்தல புராணம் கூறுகிறது. கருவறையில் அம்மை அழகே உருவாக புன்முறுவல் பூத்த முகம் கொண்டு, ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மறுகரத்தை தொங்க விட்டபடியும் சற்றே இடை நெளித்து நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள்.

 

  • நாறும்பூநாதர் எவ்வாறு சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறாரோ அதைப்போலவே அம்பாளும் உளிபடா திருமேனியாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். ஆற்றுக்குள் இருந்து அம்பாள் திருமேனி வெளிவந்தது. இதனை ருத்ராட்ச திருமேனி என்று அழைக்கிறார்கள்.

 

  • காசியில் பாயும் கங்கையானது, தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பாய்வதைப் போல, திருப்புடைமருதூரில் பாயும் தாமிரபரணியானது, தெற்கில் இருந்து வடக்காக பாய்கிறது. எனவே இந்த தலத்தை ‘தென்னக காசி’ என்றும் அழைக்கிறார்கள்.

 

  • உள் திருச்சுற்றில் 63 நாயன்மார்கள் சன்னதி உள்ளது. கருவூர் சித்தரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக நாயன்மார்கள் வரிசையில் கருவூர் சித்தரையும் நிறுவியுள்ளனர்.

 

  • இந்த ஆலயம் உருவாகக் காரணமாக இருந்த பிரம்மதண்டம் கருவறை அருகே இடது புறத்தில் நிறுவப்பட்டு உள்ளது. கருவறையை சுற்றி ராமேஸ்வரலிங்கம் காசிலிங்கம் என்ற பெயர்களில் பல சிறிய சிவலிங்கங்கள் உள்ளது.

 

  • இத்திருக்கோயிலின் நடராஜர் புனுகு வாசனை திரவியத்தால் உருவாக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

 

  • திருக்கோவிலின் கோபுரத்தில் பல மூலிகை வர்ணம் பூசிய ஓவியங்களும் மிகுந்த கலை நுட்பம் உடைய வேலைப்பாடுகளும் கொண்ட மர சிற்பங்களும் அமையப்பட்டுள்ளது.

 

  • திருப்புடைமருதூர் திருக்கோவில் அமைந்த ஆற்றங்கரையில் உள்ள தீர்த்த கட்டத்திற்கு, ‘சுரேந்திர மோட்ச தீர்த்தம்’ என்று பெயர். இந்திரனும், அவனது மனைவி இந்திராணியும் இந்த இடத்தில் தவம் செய்து, தங்களுடைய தோஷம் நீங்க வேண்டி, இந்த தீர்த்த கட்டத்தில் நீராடியதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.

 

  • சூரியன் வழிபடும் தலமாகவும் இது அமைந்துள்ளது. மாசி மாதம் முழுவதும் சூரிய ஒளி சுவாமியின் சிரசில் பட்டு தொடர்வது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மகாசிவராத்திரி அன்று காலை 6.15 க்கு மேல் 7.00 மணிக்குள் இந்த மாபெரும் அதிசயம் இத்திருக்கோயிலில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

 

  • தீராத நோய் உள்ளவர்கள் பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்று விரும்புவார்கள் சுவாமிக்கும் அம்பாளுக்கும் படி பாயாசம் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு வழங்குகிறார்கள். தாங்களும் அந்த படிப்பாயாசத்தினை உண்டு தங்கள் பிராத்தனையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்

 

  • முன் பக்கம் இக்கோவிலை கட்டிய பாண்டிய மன்னனின் ஆளுயர சிற்பமும் உள்ளது

 

  • இங்கு யோக நிலையில் உள்ள தட்சிணாமூர்த்தி தனியாக காட்சி தருகிறார்.

 

  • இந்தியாவின் முதல் பறவைகள் காப்பகம் என்ற பெருமைமிக்க திருப்புடைமருதூர் பறவைகள் காப்பகத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் தற்போது கூடுகள் கட்டி தங்கியிருக்கின்றன. இப்பறவைகளுக்கு எவ்வித இடையூறுகளையும்ஏற்படுத்தாமல் இங்குள்ள மக்கள் காவலர்களாக விளங்குகிறார்கள்.

 

திருவிழா: 

தைப்பூசம் 10 நாட்கள், ஆனி உத்திரம், ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி கந்தசஷ்டி, பங்குனி உத்திரம்.

 

திறக்கும் நேரம்:

காலை 5 மணி முதல் 11 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு நாறும்பூநாத சுவாமி திருக்கோயில்,

திருப்புடைமருதூர் – 627 426,

திருநெல்வேலி மாவட்டம்

 

போன்:    

+91- 4634 – 287244,96262 90350

 

அமைவிடம்:

திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் பஸ்களில் சென்று, வீரவநல்லூரில் இறங்கி, 8 கி.மீ., தொலைவிலுள்ள திருப்புடைமருதூருக்கு ஆட்டோக்களில் செல்லலாம்.மினி பஸ்களும் செல்கின்றன. முக்கிய ஊர்களில் இருந்து தூரம் : திருநெல்வேலியிருந்து 38 கி.மீ., வீரவநல்லூரிலிருந்து 8 கி.மீ. வீரவநல்லூர் மற்றும் முக்கூடலிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது.

Share this:

Write a Reply or Comment

nineteen − 1 =