அருள்மிகு கூடலழகர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : கூடலழகர்
உற்சவர் : வியூகசுந்தரராஜர்
தாயார் : மதுரவல்லி, மரகதவல்லி, வகுளவல்லி, வர குணவல்லி
தல விருட்சம் : கதலி
தீர்த்தம் : ஹேமபுஷ்கரிணி.
புராண பெயர் : திருக்கூடல்
ஊர் : மதுரை
மாவட்டம் : மதுரை
ஸ்தல வரலாறு:
பிரம்ம தேவரின் புத்திரர் சனத்குமாரர். இவருக்கு திருமாலை அர்ச்சாவதார (மனித ரூபம்) வடிவில் தரிசிக்க வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது. தன் விருப்பத்தை நிறைவேற்ற, இத்தல பெருமாளை நோக்கி தவமிருந்தார். சனத்குமாரரின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் அவருக்கு காட்சி அளித்தார். சனத்குமாரர் உடனே தேவ சிற்பி விஸ்வகர்மாவை வரவழைத்து, தனக்கு பெருமாள் அளித்த அருட்காட்சியை அப்படியே வடிவமைக்கச் செய்தார். அதை அஷ்டாங்க விமானத்தின் கீழ் பிரதிஷ்டை செய்தார். அவரே கூடலழகர் என்று அழைக்கப்படுகிறார். கிருதயுகத்திலேயே அமைக்கப்பட்டுவிட்ட இத்தலம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என நான்கு யுகங்களிலும் சிறப்புற்று விளங்குகிறது. இதனால் ‘யுகம் கண்ட பெருமாள்’ என்றும் இத்தல பெருமாள் அழைக்கப்படுகிறார்.
வல்லப தேவ பல்லவர் ஆட்சிக் காலத்தில் பெரியாழ்வாரால் அரசவையில் “ஸ்ரீமன் நாராயணனே பரம்பொருள்” என மெய்பித்த சிறப்புமிக்க தலமாகும். பெரியாழ்வார் ஸ்ரீ நாராயணனே பரம்பொருள் என மெய்ப்பித்த பரத்துவ நிர்ணயத்தை பாராட்டி அரசன் பெரியாழ்வாரை பட்டத்து யானை மீதேற்றி வீதிவலம் வரும்போது; கூடலழகர் கருட வாகனத்தில் காட்சி தந்தபோது, பெருமாளை தரிசித்த பெரியாழ்வார் பெருமாள் அழகுக்கு பல்லாண்டு பாடினார். இச்சிறப்பு மிக்க வைபவம் இன்றும் இத்திருக்கோவிலில் பிரதி மார்கழி மாதம் பரத்துவ நிர்ணயம் என்ற விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கோயில் சிறப்புகள்:
- 108 வைணவ திவ்ய தேசங்களில் மதுரை கூடலழகர் பெருமாள் கோயில், 101-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.
- அனைத்து பெருமாள் கோயில்களிலும் பாடப்பெறும் பல்லாண்டு மதுரையில்தான் இயற்றப்பட்டது என்பது தனிச்சிறப்பு.
- இத்தலத்தை பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
- ஒருசமயம் மதுரையில் தொடர்ந்து மழை பெய்ததால், பெருமாள் நான்கு மேகங்களை ஏவினார். அவை, மதுரையைச் சுற்றி நான்கு மாடங்களாக ஒன்று குடி மழையில் இருந்து மக்களைக் காத்தன. அதன் காரணமாக இத்தலம் நான்மாடக் கூடல் என்றும், கூடல் மாநகர் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு கூடலழகர்என்ற பெயர் கிட்டியது. மதுரை தமிழ்ச் சங்கத்தில் துவரைக் கோமான் என்ற பெயரில் புலவராக பெருமாள் அமர்ந்திருந்ததாக பரிபாடல் உரைக்கிறது.
- முற்காலத்தில் இக்கோயிலைச் சுற்றி இருபுறத்திலும் வைகை நதி, கிருதுமால் நதி ஆகியவை ஓடிக் கொண்டிருந்தன. காலப்போக்கில் கிருதுமால் நதி சுருங்கி ஓடையாகி விட்டது. பாண்டிய மன்னன் சத்தியவிரதன், ஒருசமயம் கிருதுமால் நதியில் நீராடியபோது, பெருமாள் மீன் வடிவில் வந்து உபதேசம் செய்தார். தனக்கு அருளிய பெருமாளின் நினைவாக, பாண்டிய மன்னர் மீன் சின்னத்தை வைத்துக் கொண்டார்.
- 96 வகையான விமானங்களில் அஷ்டாங்க விமானம் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில், மதுரையிலும், திருகோஷ்டியூரில் மட்டுமே அஷ்டாங்க விமானம் அமைந்துள்ளது. இத்தலத்தில் 125 அடி உயர அஷ்டாங்க விமானம் அமைந்துள்ளது. இதில் உள்ள கலசம் 10 அடி உயரமுடையது. இதன் நிழல் தரையில் விழாது. மூன்று நிலைகளுடன் 8 பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற அஷ்டாட்சர மந்திரத்தின் வடிவமாகும்.
- பஞ்ச பூத தத்துவங்களை உணர்த்தும் வகையில் 5 கலசத்துடன் ஐந்து நிலை ராஜ கோபுரம், எட்டெழுத்து மந்திரத்தை உணர்த்தும் விதமாக எட்டு பிரகாரங்களுடன் கூடலழகர் கோயில் அமைந்துள்ளது.
- அஷ்டாங்க விமானத்தின் கீழ் தளத்தில் கூடலழகர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
- இரண்டாவது நிலையில் சூரிய நாராயணர் தேவியருடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அருகில் பிரம்மதேவர், சிவபெருமான், திருமால் ஆகிய முப்பெரும் தேவர்களும், அஷ்டதிக் பாலகர்களும் ஓவிய வடிவில் உள்ளனர். இதன் காரணமாக இந்த சந்நிதி ஓவிய மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.
- மூன்றாவது நிலையில் பாற்கடல்நாதர் பள்ளி கொண்ட கோலத்தில் தாயார்களுடன் அருள்பாலிக்கிறார். மேலும் பூவராகர், லட்சுமி நரசிம்மர், நாராயணர், லட்சுமி நாராயணர், ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் ஆகியோர் விமானத்தில் அருள்பாலிக்கின்றனர்.
- இத்தலத்தில் பக்தர்கள் விமான வலம் வருவது வழக்கம். மலைக்கோவில்களில் பவுர்ணமியன்று கிரிவலம் வருவது போல் இங்கே பக்தர்கள் விமானத்தை வலம் வருகிறார்கள்.
- உற்சவர் வியூக சுந்தர்ராஜன் என்று அழைக்கப்படுகிறார். எந்த ஒரு செயலையும் செய்யும் முன்பு, சரியாகத் திட்டமிட்டு வியூகம் அமைத்து செயல்பட்டால் வெற்றி பெறலாம் என்பதற்கு ஏற்ப அனைத்திலும் வெற்றி பெறும் அழகராக பெருமாள் இருப்பதால் அவருக்கு இப்பெயர் கிட்டியது.
- இந்த பகுதியை ஆண்ட மன்னர்கள் போருக்குச் செல்லும்போது இவரை வேண்டி வியூகம் அமைத்துக் கொண்டனர். இதனால் கூடலழகருக்கு இந்த பெயர் ஏற்பட்டது எனவும் கூறுகிறார்கள்.
- மதுரை, கோவில்கள் மற்றும் திருவிழாக்களின் நகரமாகும். இந்நகரம் கூடல் மற்றும் ஆலவாய் என அழைக்கப்படுகிறது. தமிழ் புலவர்களால் மூன்றாம் மற்றும் கடைசி சங்கம் நிறுவி தமிழாய்ந்த இடமாகும். பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகும், வைணவம் மற்றும் சைவம் தலைத்தோங்கிய நகரமாக மதுரை திகழ்கிறது.
- சோமசுந்தர பாண்டியன் ஆட்சிக் காலத்தில் சோமசுந்தர பாண்டியனுடய திருமகளாக அவதரித்த உமாபதிக்கு செளந்திரபாண்டிய அரசனாக அவதரித்த சிவபெமானுக்கு கூடலழகரே திருக்கல்யாண வைபவம் நடத்தி வைக்கப்பட்டதாக தலபுராணம் கூறுகிறது.
திருவிழா:
- சித்திரை மாதம்: தமிழ் வருட சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பெருமாள் புறப்பாடு.
- வைகாசி மாதம்: 14 நாட்கள் தேர்த் திருவிழா நடைபெறும். 9-வது திருநாளன்று அனுஷ நட்சத்திரத்தில் தேரோட்டம் நடைபெறும்.
- ஆனி மாதம்: கருட சேவை, சயனத் திருவிழா, முப்பழ விழா மற்றும் எண்ணை காப்பு விழா நடைபெறும்.
- ஆடி மாதம்: ஆடிப்பூரத் திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும்.
- ஆவணி மாதம்: திருப்பவித்திர திருவிழா மற்றும் உறியடித்திருவிழா கொண்டாடப்படும்
- புரட்டாசி மாதம்: நவராத்திரி விழா 9 நாட்களும் வெகு விமரிசையாக நடைபெறும். மேலும் பவுர்ணமி அன்று தாயாருக்கு பாலாபிஷேகம், 5 கருட சேவை, 4 மாசி வீதி புறப்பாடு மற்றும் விஜயதசமி அன்று அம்பு போடுதல் விழாக்கள் பாரம் பரிய முறைப்படி நடை பெறும்.
- ஐப்பசி மாதம்: தீபாவளி அன்று மூலவ ருக்கு தைலக் காப்பு மற்றும் மணவாள மாமுனிகள் திருநட்சத்திர திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
- கார்த்திகை மாதம்: திருக்கார்த்திகை மற்றும் திருமங்கை ஆழ்வார் திரு நட்சத்தி ரத்தில் திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
- மார்கழி மாதம்: திருப்பல்லாண்டு தொடக்கம், பகல் பத்து, வைகுண்ட ஏகாதசி, ராப்பந்து வைபவங்கள் நடைபெறும்.
- தை மாதம்: கனுப்பானரி வேட்டை (அனுப்பானடிக்கு எழுந்தருளல்) மற்றும் தை மாதம் முதல் தேதியில் தாயார் பெருமாள் மாலை மாற்றுதல் போன்ற வைபவங்கள் நடைபெறும்.
- மாசி மாதம்: 12 நாட்கள் தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
- பங்குனி மாதம்: பங்குனி உத்திரத்தன்று மதுரவல்லித் தாயார் திருக்கல்யாணம். வசந்த உற்சவம் 5 நாட்கள் நடைபெறும். சுக்ல பட்ச துவாதசி அன்று கஜேந்திர மோட்சம், கோவர்த்தனகிரி புறப்பாடு நடைபெறும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கூடலழகர் திருக்கோயில்,
மதுரை – 625 001
மதுரை மாவட்டம்
போன்:
+91- 452 2338542
அமைவிடம்:
மதுரை ரயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது. ரயில், பஸ் வசதி ஏராளமாய் உள்ளது.