November 24 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தேவர் மலை

  1. அருள்மிகு கதிர் நரசிங்க பெருமாள் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     கதிர் நரசிங்க பெருமாள்

உற்சவர்        :     கதிர் நரசிங்க பெருமாள்

தாயார்          :     கமலவல்லித் தாயார்

தல விருட்சம்   :     வில்வம்

தீர்த்தம்         :     மோட்ச தீர்த்தம்

புராண பெயர்    :     தேவர் மறி

ஊர்            :     பாளையம்

மாவட்டம்       :     கரூர்

 

ஸ்தல வரலாறு:

திருமாலின் காக்கும் தன்மை தெளிவாக வெளிப்பட்ட அவதாரம் “நரசிம்ம அவதாரம்’. மற்ற அவதாரங்களில் திருமால் ஒரு குறிக்கோளுடன் உலக நன்மைக்காக அவதரித்து, அந்த அவதார நோக்கம் முடிந்ததும் ஸ்ரீவைகுண்டம் எழுந்தருளினார். ஆனால் ஸ்ரீநரசிம்மரோ அவதரித்த தினம் முதல் இன்று வரை எங்கும் எதிலும் வீற்றிருந்து இவ்வுலகைக் காத்தருளுகிறார். இப்படி நரஸிம்ஹ ரூபத்துடன் திருமால் திருக்கோயில் கொண்டு அருள்புரியும் தலங்களில் ஒன்றுதான் தேவர்மலை. மலை எனப்படுவதால் இங்கு ஏதாவது மலை உள்ளது என்றோ அதன் மீது பெருமாள் சந்நிதி அமைந்துள்ளது என்றோ நினைக்க வேண்டாம். நரசிம்ம அவதாரத்தின் போது, இரண்ய வதம் முடிந்த பின்னும் உக்கிரம் சிறிதும் குறையாமல் இருந்த இறைவன் நிலைகொள்ளாமல் திரிந்தார். அவரது உக்கிரத்தைத் தணிப்பதற்காக தேவர்கள் ஒன்றுகூடி இறைவனை மறித்து சாந்தப்படுத்திய இடம்தான் “தேவர் மறி’. அதுதான் பிற்காலத்தில் மருவி “தேவர்மலை’ ஆனது. இங்கே எம்பெருமான் உக்கிர ரூப மூர்த்தியாய் விளங்கிய போதிலும் ஒரு திருக்கரம் அபய ஹஸ்தமாக விளங்குகிறது. மற்றொன்றில் யோக முத்திரை காட்டியருளும் நரசிம்மர், பின்னிரு கரங்களில் சங்கு சக்கரதாரியாய், இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டுக் கொண்டு அமர்ந்துள்ளார்.

 

கோயில் சிறப்புகள்:

  • பெருமாளின் உக்கிரத்தை தணிக்க தேவர்கள் இந்த இடத்தில் தீர்த்ததை உண்டாக்கி அந்த நீரால் அவருக்கு அபிஷேகம் செய்தார்கள். அதனால் சாந்தம் அடைந்த பெருமாள் தர்ம விதியின் ஏற்பட்ட தோஷம் நீங்கி, சாந்த மூர்த்தியாக, நான்கு திருக்கரங்களுடன் சங்கு, சக்கரம் பின் கைகளில் தாங்கி,  வலது திருக்கை அபய அஸ்தமாகவும், இடது திருக்கை அபயம் தரும் ஆ-ஹ்வான முத்திரையுடன்  வீராசனம் கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

 

  • சற்று உற்று நோக்கினால் திருமுகத்தில் மூன்றாவது கண் இருப்பதையும், புன்னகை பூத்த வதனத்தையும் தரிசிக்கலாம். நரசிம்ம அவதாரம் பற்றிக் குறிப்பிடுகையில் “சிங்கம் சிரித்தது’ (சிரித்தது செங்கச் சீயம்) என்பார் திருமங்கையாழ்வார். அந்த வாக்கியம் முற்றிலும் இந்தப் பெருமானுக்குப் பொருந்தும்.

 

  • இத்திருத்தலத்தில் கமலவல்லி என்னும் திருநாமத்துடன் தாயார் சந்நிதி அமைந்துள்ளது.

 

  • லட்சுமி நாராயணருக்கும், நம்மாழ்வார், ராமானுஜர் ஆகிய மகான்களுக்கும் தனித்தனியே சந்நிதிகளும், திருக்கோயிலின் வடகிழக்கு மூலையில் விசேஷமாக பைரவர் சந்நிதியும் இருக்கின்றன.

 

  • இத்திருத்தலத்தில் உள்ள “மோட்ச தீர்த்தம்’ என்னும் திருக்குளம் மிகவும் புனிதமானது. சகல தோஷங்களையும் போக்கவல்லது.

 

  • இங்குள்ள கல்வெட்டுக் குறிப்புகள் ஆலயத்தின் பழமையைப் பறைசாற்றுகின்றன.

 

  • அருள்மிகு கதிர் நரசிங்க பெருமாள் திருக்கோயிலில் வில்வமரம் தல விருட்சமாக அமைந்துள்ளது.

 

  • 4000 வருடங்கள் பழமையான இந்த கோயிலில், மஹாபாரத போருக்கு பிறகு ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்களுடன் வந்து வழிபட்டதாக தகவல்கள் உள்ளன.

 

  • நாளை என்பதே நரசிம்மனிடத்தில் இல்லை என்பார்கள். அதாவத, முறையான பிரார்த்தனைகளை நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்ற சற்றும் காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் தீர்த்து வைப்பவர் நரசிம்மர். பக்தர்களது துன்பங்களை அந்த விநாடியிலேயே களைவாராம்

 

  • ஸ்ரீநரசிம்மர் ஆலயம், ஆண்டுகள் பல ஆனாலும் சிதிலங்கள் ஆன போதும் நரசிங்க பெருமான் ஒருவித கம்பீரத்துடன்தான் திகழ்கிறார்.

 

  • தேவர்மலைச் சுற்று வட்டாரத்திலிருக்கும் எந்தக் கோயிலிலோ, வீட்டிலோ விசேஷம் என்றால், இந்த நரசிங்கர் ஆலயத்துக்கு வந்து அவரை வழிபட்டு, ‘மோட்ச தீர்த்த’த்திலிருந்து புனித நீர் எடுத்துச் செல்வது வழக்கம். பழநி, சமயபுரம் போன்ற திருத்தலங்களுக்கு இந்த வழியாக யாத்திரை செல்பவர்கள், இங்கு வந்து நரசிம்மரை வழிபட்டு, அபிஷேகத்துக்கென தீர்த்தம் எடுத்துச் செல்வார்கள்

 

  • கோயிலைச் சுற்றிலும், சுண்ணாம்புப் பாறைக் கற்கள் காணக்கிடைக்கின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள், அந்தக் கற்களை உரசி, நாமம் போட்டுக்கொள்கிறார்கள்.

 

திருவிழா: 

வைகாசி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்ச்சவம் மற்றும் வைகுணட் ஏகாதசி விழா.

 

திறக்கும் நேரம்:

காலை 8.00 முதல் -பகல் 12.00 மணி வரை,

மாலை 4.30 முதல் 6.00 மணி வரை

 

முகவரி:  

கதிர் நரசிங்க பெருமாள் திருக்கோயில்,

குருணிகுளத்துப்பட்டி, பாளையம்,

கரூர்

 

போன்:    

+91 99436 10705, 8220012717

 

அமைவிடம்:

திண்டுக்கல் – கரூர் சாலையில் கடவூர் தாலுக்காவில், பாளையம் என்ற இடத்தில் இருந்து கிழக்கே 5 கி,மீ, குருணிகுளத்துப்பட்டி பஸ் ஸ்டாப் அருகில் அமைந்துள்ள தலம். கரூர் மாவட்டத்தில் இருந்து 35 கி.மீ,

Share this:

Write a Reply or Comment

9 + 20 =