November 23 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் காஞ்சிபுரம்

  1. அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்)

அம்மன்         :     காமாட்சி (ஏழவார்குழலி)

தல விருட்சம்   :     மாமரம்

தீர்த்தம்         :     சிவகங்கை

ஊர்            :     காஞ்சிபுரம்

மாவட்டம்       :     காஞ்சிபுரம்

 

ஸ்தல வரலாறு:

பார்வதி தேவி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகத்துக்கு வெளிச்சம் தந்தார். இந்த தவற்றினால் பார்வதியை தேவியை பூமிக்கு சென்று தன்னை நோக்கி தவம் இருக்கச் சொன்னார் சிவபெருமான். பார்வதியும் காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் செய்து பூஜித்தார்.

பார்வதியின் தவத்தை உலகினுக்கு அறியச் செய்ய சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளத்தை உண்டாக்கினார். பார்வதி தேவி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்து செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக் கொண்டார். உடனே சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்றி பார்வதி அன்னைக்கு  அருள் புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்ய பணித்தார். பார்வதி தேவி வழிபட்ட மணல் லிங்கம் தான் பிரித்வி லிங்கம், அந்த மாமரம் தான் ஸ்தல விருட்சம். காமகோட்டம் தான் காமாட்சி அம்மன் கோவில்.  பார்வதி கட்டித் தழுவியதால் இங்கு உள்ள சிவபெருமானை தழுவக் குழைந்தார் என்றும் அழைப்பர்.

 

கோயில் சிறப்புகள்:

  • காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு.

 

  • பஞ்சபூத தலங்களில் முதன்மையான இத்தலம் மணல் (நிலம்) தலமாகும். கருவறையில் சுவாமி மணல் லிங்கமாகவே இருக்கிறார். இவரது மேனியில் அம்பாள் கட்டியணைத்த தடம் தற்போதும் இருக்கிறது. இவருக்கு புனுகு மற்றும் வாசனைப்பொருட்கள் பூசி வெள்ளிக்கவசம் சாத்தி வழிபடுகின்றனர். அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடக்கிறது.

 

  • சிவன் இத்தலத்தில் அம்பாளுக்கு அருள்புரிவதற்காக கங்கையையும், ஆலகால விஷத்தின் உஷ்ணத்தால் கருப்பு நிறமாக மாறிய மகாவிஷ்ணுவை குணப்படுத்த தலையை அலங்கரிக்கும் பிறைச்சந்திரனையும் பயன்படுத்தியிருக்கிறார். தன் திருமுடியில் இருக்கும் கங்கை, சந்திரன் இருவருக்கும் சிவன் இத்தலத்தில் பணி கொடுத்திருப்பது சிறப்பு.

 

  • தை மாத ரத சப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது.

 

  • ஏகாம்பரேஸ்வரர் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் மாமரம் ஒன்று உள்ளது. இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் இருக்கிறார். அம்பாள் நாணத்துடன் தலை கவிழ்ந்தபடி சிவனை நோக்கி திரும்பியிருக்கிறாள். இதனை சிவனது “திருமணகோலம்” என்கிறார்கள்.

 

  • அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இம்மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்தாராம். இம்மரத்தின் பெயராலேயே சுவாமி “ஏகாம்பரேஸ்வரர் (ஏகம் – ஒரு; ஆம்ரம் – மரம்)” எனப்படுகிறார். இதனை வேத மாமரம் என்றும் அழைப்பர்.

 

  • இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. மிகவும் புனிதமானது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது.

 

  • திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுக்கும் காலத்தில் மகாவிஷ்ணு மேல் ஏற்பட்ட வெப்பம் நீங்குவதற்கு ஈசான பாகத்தில் தியானம் செய்து சிவனுடைய சிரசிலிருந்து சந்திர ஒளி விஷ்ணு மேல் பட்டு வெப்பம் நீங்கி சாந்தி அடைந்ததால் நிலாத்துண்ட பெருமாள் எனும் பெயர் பெற்றார்.

 

  • இத்தல விநாயகர் “விகடசக்ரவிநாயகர்” என்ற திருநாமத்துடனும், முருகன் மாவடி கந்தர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.

 

  • இங்குள்ள ராஜகோபுரம் 9 நிலைகளைக் கொண்டது.

 

  • இங்குபிரம்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூஜித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன.

 

  • பார்வையில்லாத நிலையிலும் சிவதலயாத்திரையை தொடர்ந்த சுந்தரருக்கு திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் கொடுத்த சிவன், இத்தலத்தில் இடது கண் மட்டும் தெரியும்படி அருள்செய்தார். எனவே, இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்கும், கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

 

  • சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானிடம் இடக்கண் பெற்ற தலம் (திருக்கச்சூர் – ஊன்றுகோல், காஞ்சி – இடக்கண், திருவாரூர் – வலக்கண்)

 

  • சிவ ஆலய பிராகாரத்துக்குள் வைணவர்கள் முக்கியமாக கருதப்படும் திவ்ய தேச தலமான நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி இருப்பது மிகவும் சிறப்பு.

 

  • உமை, திருமகள், வாணி ஆகிய மூவரும் முறையே வழிபட்ட ஏகம்பம், காயாரோகணம், கச்சபேசம், ஆகிய கோயில்கள் உள்ள தலம்.

 

  • அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். இவை தவிர பெரிய புராணம் போன்ற புராண இலக்கியங்களிலும் இத்தலம் ஏராளமாக பாடப்பெற்றுள்ளது.

 

திருவிழா: 

பங்குனி உத்திரம் பெருவிழா – 13 நாட்கள் நடைபெறும் – வெள்ளி ரதம், வெள்ளி மாவடி சேர்வை, தங்க ரிஷபம் ஆகியவை விசேசம் – இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடுவர் பௌர்ணமி, அமாவாசை, பிரதோச நாட்களில் கோவிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்,

காஞ்சிபுரம்-631501.

 

போன்:    

+91- 44-2722 2084.

 

அமைவிடம்:

காஞ்சிபுரம் நகரின் மத்தியில் கோயில் இருக்கிறது. பஸ் ஸ்டாண்டில் இருந்து நடந்தே சென்றுவிடலாம்.

Share this:

Write a Reply or Comment

5 − five =