அருள்மிகு மாவூற்று வேலப்பர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : வேலப்பர்
தல விருட்சம் : மாமரம்
தீர்த்தம் : மாவூற்று
ஊர் : தெப்பம்பட்டி
மாவட்டம் : தேனி
ஸ்தல வரலாறு:
பல்லாண்டுகளுக்கு முன்பு தெப்பம்பட்டி (ஆண்டிபட்டி) பகுதி, மருதம் மற்றும் மாமரங்கள் நிறைந்த மலைப்பகுதியாக இருந்துள்ளது. இங்கு பழியர் இனத்தைச் சேர்ந்த பலர் வாழ்ந்து வந்தனர். இவர்கள் வள்ளிக்கிழங்கைப் பயிரிட்டு, அவற்றை தமது உணவாக உண்டு வந்தனர். ஒரு சமயம், மலைவாழ் மக்கள் ஒன்றுகூடி மலையின் ஒரு பகுதியில் விளைந்திருந்த வள்ளிக்கிழங்கை தோண்டத் தொடங்கினர். அதிக ஆழத்துக்கு தோண்டியும் கிழங்கு கிடைக்கவில்லை. ஆனால், அதன் வேர் மட்டும் அதிக ஆழத்துக்கு சென்றுகொண்டே இருந்தது. நிறைவாக வேரின் முடிவில் வேலப்ப சுவாமியின் சுயம்புத் திருமேனி காணப்பட்டது. இதுதொடர்பான தகவலை மலைவாழ் மக்கள், தெப்பம்பட்டி பகுதியை ஆண்ட கண்டமனூர் ஜமீன்தாரிடம் தெரிவித்தனர். பிற்காலத்தில் ஜமீன் ஏற்பாட்டில் வேலப்ப சுவாமிக்கு கோயில் எழுப்பி, வழிபாடுகள் நடைபெற்றன.
கோயில் சிறப்புகள்:
- குன்றுதோறும் குமரன் இருப்பான் என்பதற்கு ஏற்ப, இயற்கைச் சூழல் நிறைந்த தெப்பம்பட்டி மலைப் பகுதியில் வேலப்ப சுவாமியாக குமரன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
- குகைகள் நிறைந்த இம்மலையில் பல சித்தர்கள், தவ யோகிகள் இன்றும் அமர்ந்து தவம் புரிவதாக ஒரு நம்பிக்கை.
- முருகப்பெருமான் கோயில்களுள் சிறப்பு பெற்ற நீர் ஊற்றை (மாவூற்று) கொண்டுள்ளது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு தெற்கே மாமரத்தின் அடியில் எப்போதும் வற்றாத நீர், ஊற்றாக பொங்கிக் கொண்டிருப்பது தனிச்சிறப்பு.
- இந்தத் தலத்துக்கு அருகிலுள்ள நீர் மருத மரத்தின் வேர்ப்பகுதியில் ஊற்றெடுக்கும் சுனைநீர் வழிந்தோடி, பெரிய தீர்த்தமாகப் பெருகி நின்றதாம். இதன் காரணத்தை ஒட்டியே அதற்கு ‘மாவூற்று’ என்றும், ஸ்வாமிக்கு மாவூற்று வேலப்பர் என்றும் திருப்பெயர்கள் வந்ததாகச் சொல்கிறார்கள்.
- தீராத வயிற்று உபாதை, தோல் சம்பந்தப்பட்ட பிணிகள் உள்ளவர்கள் இங்கு வந்து மாவூற்றில் நீராடி, வேலப்பரை வழிபட்டுச் சென்றால், விரைவில் பிணிகள் நீங்கி நலம்பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
- வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் சித்திரைத் திருவிழாவில் பால்குடம், காவடி சுமந்து வந்தும், அலகு குத்திக்கொண்டு வந்தும் வேலப்பனை வழிபடுகிறார்கள். அதேபோல் இந்தத் திருவிழாவில் முளைப்பாரி எடுத்து வந்து வழிபட, விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம்.
- மாவூற்று வேலப்பரும், விநாயகரும் வடக்கு நோக்கி அருள்வது இத்தலத்தின் தனிச் சிறப்பம்சம்.
- மலையடிவாரத்தில் சக்தி, கருப்பண்ணசாமி ஆகியோர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றர். 300 படிகள் மலையேறிச் சென்றால் குன்றின் மீது மாவூற்று விநாயகர், சப்த மாதாக்கள் சந்நிதிகளை தரிசிக்கலாம்.
- கோயிலின் தென் பகுதியில் மாமரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அதில் ஒரு மரத்தின் அடியில் எப்போதும் வற்றாத நன்னீர் ஊற்றாக பொங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம். இதனாலேயே இப்பகுதி ‘மாவூற்று’ என்று அழைக்கப்படுகிறது. இத்தல முருகன் ‘மாவூற்று வேலப்பர்’ என்று போற்றப்படுகிறார்.
- கோயில் அமைந்துள்ள பகுதியில் பெரிய தீர்த்தக் குளம் அமைந்துள்ளது. கோயிலுக்கும், இந்த தெப்பக்குளத்துக்கும் சுரங்கத் தொடர்புகள் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- 27 நட்சத்திரங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம். தை மாதத்தில் பூச நட்சத்திரம் வரும் நாள் பெரும்பாலும் பௌர்ணமி தினமாக இருக்கும். அசுரனை அழிக்க அன்னை பார்வதி தேவியிடம் இருந்து வீர வேலை வாங்கி, முருகன் தன் கையில் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும்.
- இங்கே தைப்பூசத் திருநாளை முன்னிட்டு வேலப்ப சுவாமிக்கு 21 வகையான சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் தெப்பத்தில் நீராடி, முருகனை வணங்கினால், முன்னோர் நன்மைகள் செய்வார்கள் என்பது ஐதீகம்.
- இங்கே சித்திரைத் திருவிழா 5 வாரங்கள் கொண்டாடப்படுகிறது. சித்திரை 1-ம் தேதி தொடங்கும் இத்திருவிழா 5-வது வாரத்துக்குப் பிறகுதான் நிறைவுபெறுகிறது. மக்களின் வேடிக்கை விளையாட்டு, பாரம்பரிய சொல்லாடல் நிகழ்ச்சிகள், தெருக் கூத்து, சிறப்பு இசை நிகழ்ச்சிகள், கந்த புராண சொற்பொழிவுகள், கந்தனின் திருவிழாக்கள் குறித்த உபன்யாசங்கள், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் இத்திருவிழாவில் நடைபெறும். சுற்றுப்புற கிராமங்கள் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்திருந்து இந்நிகழ்ச்சிகளை கண்டுகளிப்பர்.
திருவிழா:
சித்திரைத் திருவிழா, கந்த சஷ்டி பெருவிழா, தைப்பூசத் திருவிழா, பங்குனி உத்திரத் திருவிழா முதலியவை இங்கே சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. பங்குனி உத்திரத்தின் போது நடைபெறும் தேர்த் திருவிழாவில் எண்ணற்ற பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுப்பர். அப்போது தெப்பம்பட்டி மலையே விழாக் கோலம் பூண்டு காணப்படும். கந்த சஷ்டி பெருவிழா நிறைவில் வேலப்ப சுவாமிக்கு கல்யாண உற்சவம் நடைபெறும்.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை
மாலை 3 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மாவூற்று வேலப்பர் திருக்கோயில்,
தெப்பம்பட்டி. (ஆண்டிபட்டி) – 627851
தேனி மாவட்டம்.
அமைவிடம்:
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இருந்து 15 கி.மீ தொலைவில் தெப்பம்பட்டி என்ற சிற்றூரில் உள்ள மலை மீது அமைந்துள்ளது வேலப்பர் கோயில்.
முக்கிய ஊர்களில் இருந்து தூரம்: தேனியில் இருந்து 32 கி.மீ., மதுரையில் இருந்து 98 கி.மீ. ஆண்டிபட்டியில் இருந்து காலை, மாலையில் மட்டும் பஸ்கள் செல்கின்றன. மாதஅமாவாசை, திருவிழா தினங்களில் ஆண்டிபட்டியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.