October 28 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வானகரம்

  1. அருள்மிகு சுவாமிநாத பாலமுருகன் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     சுவாமிநாத பாலமுருகன்

உற்சவர்        :     பாலமுருகன்

தல விருட்சம்   :     வன்னி

ஊர்             :     வானகரம்

மாவட்டம்       :     திருவள்ளூர்

 

ஸ்தல வரலாறு:

வேடர் குலத்தின் தலைவர் நம்பிராஜனின் மகளாக அவதரித்த வள்ளி, திருத்தணி மலையில் தனது தோழியருடன் தங்கியிருந்தாள். ஒருநாள் முருகப்பெருமான் முதியவர் வேடம் தாங்கி, வள்ளியை தேடிச் சென்றார். முதியவரைக் கண்டு ஒதுங்கிய வள்ளி, அவரை நோக்கி, முதியவரே! கன்னியர் இருக்கும் இடத்தில் உமக்கு என்ன வேலை? என்று கேட்டாள். இதைக் கேட்டதும் முருகப்பெருமான் அங்கிருந்து கிளம்பினார். மறுநாள் இளைஞர் வடிவம் தாங்கி அதே இடத்துக்குச் சென்றார் முருகப்பெருமான். அவரை அடையாளம் கண்டுவிட்ட வள்ளி, என்ன முதியவரே! தினம் ஒரு வேடத்தில் வருகிறீர்களே? நேற்று முதியவர் வேடம். இன்று இளைஞர் வேடம்… இதற்கான காரணம் என்ன? என்று வினவினாள். தான் வேடம் மாறி வந்ததை எப்படி வள்ளி உணர்ந்தாள் என்று முருகப்பெருமான் ஆச்சரியப்பட்டார். உடனே வள்ளியை நோக்கி, என்னை எப்படிக் கண்டுபிடித்தாய்? என்று கேட்டார். அதற்கு முருகப்பெருமானின் கன்னத்தை சுட்டிக்காட்டிய வள்ளி, உம்மை இந்த மச்சம்தான் காட்டிக் கொடுத்தது என்று கூறினாள். வள்ளியின் ஞானத்தை முருகப் பெருமான் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியின் அடிப்படையிலேயே இத்தலத்தில் முருகப்பெருமான் வலது கன்னத்தில் மச்சத்துடன் அருள்பாலிக்கிறார். இந்த அருட்காட்சி மிகவும் அபூர்வமானதாகக் கருதப்படுகிறது. இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முருகப்பெருமானை மச்சக்காரன் என்றே அழைக்கின்றனர்.

தினை விளையும் பூமியாக திருத்தணி இருந்தது. அங்குள்ள வேடுவர்கள் தினை உள்ளிட்ட சிறுதானியங்களை பயிர்செய்து அவற்றை தங்கள் குல தெய்வமான முருகப்பெருமானுக்கு படைத்து வழிபாடு செய்வது வழக்கம். தினைப்புனம் என்பது உலக இன்பத்தைக் குறிக்கிறது. இது தொடர்பாக ஓர் உட்கருத்து கூறப்படுகிறது. உலகில் மனிதர்கள் பிறந்ததும், இன்பங்களில் மூழ்கித் திளைக்கின்றனர். எது நிஜம், எது நிரந்தரம் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. அவர்கள் எதிர்காலம் குறித்த எவ்வித கவலையும் இன்றி உள்ளனர். மரணத்தைப் பற்றியும் அவர்கள் சிந்திப்பதில்லை. இவ்வுலகிலேயே பல ஆண்டு காலம் வாழப் போவதாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உலக இன்பத்தில் மூழ்கிக் கிடக்கும் உயிர்கள் அனைத்தையும் தானே வலிய தேடிச் சென்று அவர்களை ஆட்கொள்ள இறைவன் (முருகப் பெருமான்) திருவுள்ளம் கொள்கிறார்.

உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் கருணையோடு அருள்பாலிப்பவராக முருகப்பெருமான் உள்ளார். தேவ லோகத்தில் பிறந்த தெய்வானையை மணந்த முருகப்பெருமான், வேடர் இனத்தில் பிறந்த வள்ளியையும் மணம் முடிக்க (ஆட்கொள்ள) திருவுள்ளம் கொண்டார். இறை சிந்தனை இல்லாத உயிர்கள் அவனைப் பற்றி நினைப்பதில்லை. வள்ளியும் முருகப்பெருமானைக் கண்டு ஒதுங்கி ஓடினாள். பின்னர் விநாயகப் பெருமானின் உதவியுடன் முருகப்பெருமான் வள்ளியை மணம் முடித்தார். இதனால் தன்னிடம் ஈர்ப்பு இல்லாது ஒதுங்கும் மக்களையும் அரவணைத்து அருளும் குணம் கொண்டவர் முருகப்பெருமான் என்பது புனலாகிறது. உலக இன்பத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு இறை இன்பத்தில் திளைக்க ஒவ்வொரு உயிரும் முயற்சி செய்யாவிட்டாலும், இறைவனே அவர்களை காக்க ஓடோடி வருகிறான் என்பதுதான் இதன் பொருளாக விளக்கப்படுகிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • இத்தலத்தில் உள்ள கந்தனின் கன்னத்தில் மச்சம் இருப்பது தனிச்சிறப்பு.

 

  • முருகப்பெருமான் இத்தலத்தில் மயில் விமானத்தின் கீழ் பாலமுருகனாக, இடுப்பில் கை வைத்தபடி, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

 

  • மூலஸ்தானத்தில் மயில் கிடையாது. விசேஷ நாட்களில் முருகப்பெருமான் கன்னத்தில் மச்சம் உள்ள இடத்தில், குங்குமம் வைத்து அலங்காரம் செய்யப்படுகிறது. அப்போது மட்டுமே மச்சம் பக்தர்களின் கண்களுக்குத் தெரியும். மற்ற நாட்களில் எண்ணெய் காப்பு இடப்படுவதால், இந்த மச்சத்தைக் காண முடியாது.

 

  • முருகப்பெருமான் சந்நிதிக்கு வலதுபுறம் வலம்புரி விநாயகர் சந்நிதி உள்ளது. அம்பிகையில் இருந்து தோன்றியவர் என்பதால் இவர் சக்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். அதன்படி அம்பாளுக்கு உரிய ஸ்ரீசக்கரம், விநாயகரின் (சக்தி விநாயகர்) சந்நிதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

 

  • பிரகாரத்தில் சீதாபிராட்டி, லட்சுமணருடன் ராமபிரான், ஆஞ்சநேயர், யோக நரசிம்மர், விஷ்ணு துர்கா லட்சுமி, பைரவி சமேத ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், ஆதி சேஷ நாராயண பெருமாள் சந்நிதிகள் உள்ளன.

 

  • சக்தியின் உருவகம், வீரத்தின் தெய்வம், அனைத்து எதிர்மறை சக்திகளையும் அழிப்பவளாக விஷ்ணு துர்கா லட்சுமி உள்ளாள். மகாலட்சுமியின் அவதாரமாகக் கருதப்படும் இவள் கைகளில் சங்கு, சக்கரத்துடன் காணப்படுகிறாள்.

 

  • தர்மம், பக்தி, பணிவு, வீரம் ஆகிய அனைத்தையும் உடைய யோக ஆஞ்சநேயர் சிறப்பு வாய்ந்த சாளக்கிராம மாலையால் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.

 

  • தலவிருட்சத்தின் கீழ் பால கோபாலகிருஷ்ணர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

 

  • வேம்பு மற்றும் அரச மரத்தடியில் உள்ள சிவலிங்கத்துக்கு (சிவ வனதீஸ்வரர்) பிரதோஷ காலங்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறும்.

 

  • கோயிலின் உள்ளே இருக்கும் கோசாலையில் வெள்ளிக்கிழமைகளில் கோபூஜை நடைபெறும். இங்கு கிடைக்கும் பால், கோயிலில் உள்ள தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்ய மட்டுமே பயன்படுத்தப்படும். சதய நட்சத்திர தினத்தில் அகஸ்திய முனிவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.

 

  • டாக்டர் வரதராஜன் என்ற பிரபல மருத்துவர், சென்னை வடபழனி கோயிலை நிறுவிய மூன்று சித்தர்களின் மீது மிகுந்த ஈடுபாடு உடையவராக இருந்தார். தன்னுடைய இலவச மருத்துவ சேவை தவிர, பல ஆன்மிகப் பணிகளையும் செய்து வருகிறார். சித்தர்களின் ஆணைப்படி இத்தல முருகப்பெருமானுக்கு கோயில் எழுப்பினார். முருகப்பெருமானுக்கு மச்சம் இருந்ததை அறிந்து மருத்துவர் உள்ளிட்ட பக்தர்கள் ஆச்சரியப்பட்டனர். கடந்த 2014-ம் ஆண்டு, இக்கோயிலுக்கு புதியதாக ராஜ கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

 

திருவிழா: 

வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, கந்த சஷ்டி, ஆஞ்சநேயர் ஜெயந்தி, தைப்பூசம், பங்குனி உத்திரம், ராமநவமி.

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

 

முகவரி:  

அருள்மிகு சுவாமிநாத பாலமுருகன் திருக்கோயில்,

மேட்டுக்குப்பம், வானகரம்-602102,

திருவள்ளூர் மாவட்டம்.

 

போன்:    

+91- 94444 04201.

 

அமைவிடம்:

திருவள்ளூர் மாவட்டம், வானகரம் ஊராட்சியில் அமைந்துள்ள சுவாமிநாத பாலமுருகன் கோயில், சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவேற்காடு செல்லும் வழியில் 10 கி.மீ., தூரத்தில் வானகரம் உள்ளது. போரூர் தோட்டம் தொழிற்பேட்டையில் உள்ள வானகரம் மேட்டுக்குப்பத்தில் இத்தலம் அமைந்துள்ளது. போரூர் ரவுண்டானாவில் இருந்து ஆற்காடு சாலையில் பயணித்து, காரம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இடது புறம் சென்றால் போரூர் தோட்டம் தொழிற்பேட்டையை அடையலாம்.

 

Share this:

Write a Reply or Comment

four × one =