அருள்மிகு குலசை முத்தாரம்மன் திருக்கோயில் வரலாறு
மூலவர் : முத்தாரம்மன் , ஞானமூர்த்தி
அம்மன் : முத்தாரம்மன்
தல விருட்சம் : வேம்பு
தீர்த்தம் : வங்கக்கடல்
புராண பெயர் : வீரைவளநாடு
ஊர் : குலசேகரன்பட்டினம்
மாவட்டம் : தூத்துக்குடி
ஸ்தல வரலாறு:
வரமுனி என்ற ஒரு அசுரன் இருந்தார். தவ வலிமை பெற்றிருந்த அவர், மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஒருநாள் அகத்திய முனிவர் வந்தபொழுது, வரமுனி என்கிற அந்த அசுரன் அவரை அவமரியாதை செய்தார் அப்போது அவரை நோக்கி எருமைத் தலையும், மனித உடலும் கொண்ட பெண் தெய்வத்தால் நீ அழிந்து போவாய் என்று அகத்திய முனிவர் சாபம் கொடுத்தார். மகிஷம் என்றால் எருமை, எருமைத்தலை கொண்ட அந்த அசுரனுக்கு மகிஷாசுரன் என்ற பெயர் வந்தது. எருமைத்தலை கொண்ட அவர், கடும் தவம் செய்து பல வரங்களைப் பெற்றார். அதன் பின்பு அவர் தேவர்களையும் முனிவர்களையும் கொடுமைப் படுத்திய காரணத்தால் அவர்கள் சென்று இறைவனிடம் முறையிட்டனர்.
இறைவனிடம் முறையிடப்பட்ட காரணத்தால், நிவாரணத்திற்காக வழித் தானாகவே வந்தது. எருமைத்தலை கொண்ட அந்த மகிஷாசுரனின் தொல்லைகளிலிருந்து விடுபட முனிவர்கள் யாகம் மேற்கொண்டனர். அந்த யாகத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்கப் பால் அரண் அமைத்துக் கொடுத்தாள் அன்னை பார்வதி. முறைப்படி நடந்த யாகத்தில் ஒரு பெண் குழந்தையாக ஸ்ரீ லலிதாம்பிகை அன்னை தோன்றினார். அந்த வேள்வியில் அன்னையானவள் ஒன்பது நாட்கள் தொடர்ந்து வளர்ந்தார். அந்த ஒன்பது நாட்கள் நவராத்திரி என்று போற்றப்படுகிறது பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று அன்னையருக்கான தலா மூன்று நாட்கள் என்ற அவைகள் ஒன்பது நாட்கள் கொண்ட நவராத்திரி என்று உருவாயின.
யாகத்தில் தோன்றிய அன்னை, அந்த மகிஷாசுரனை வதம் செய்தார். மகிஷாசுரனை வதம் செய்த காரணத்தால் அன்னைக்கு உண்டான தோஷத்தைச் சிவபெருமான் நிவர்த்தி செய்து அன்னையைச் சாந்தப்படுத்தினார். சிவபெருமான் திரு உடலிலே வாமபாகம் என்று அழைக்கப்படும், இடதுபுறத்தில் அன்னை சுயம்புவாகத் தோன்றினார். சுயம்புவாக தோன்றிய ஐயனும், அம்மையும் பக்தர்களுக்கு இத்திருக்கோயிலில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிகழ்வை எடுத்துரைக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் ஆலயத்தில் ‘தசரா திருவிழா’ வெகு சிறப்பாக நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் முதல் 9 நாட்கள் அம்மன் தவம் செய்யும் நிகழ்வும், 10-ம் நாளான விஜயதசமி அன்று, மகிஷாசுரனை அன்னை வதம் செய்யும் நிகழ்வும் நடைபெறுகின்றன. இந்த விழாவிற்காக பக்தர்கள் பலர் காப்பு கட்டி, பல்வேறு வேடங்கள் தரித்து அம்மனுக்கு விரதம் இருப்பது வழக்கமாக உள்ளது. புரட்டாசி மாத அமாவாசை கழிந்த மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது ‘தசரா திருவிழா’. மைசூர், உத்தரப்பிரதேசம் போன்ற இடங்களில் நடைபெறும் தசரா விழாவைப் போன்று தமிழகத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் ஆலயம் சிறப்புக்குரிய இடமாக உள்ளது.
தமிழகத்தின் தசரா எனில் குலசைதான். மைசூர் தசராவை மிஞ்சும் வகையில், தமிழ்நாட்டின் தென்கோடி கடற்கரையில் மகிஷாசூரனை சக்தியின் அம்சமான முத்தாரம்மன் சம்ஹாரம் செய்கிறாள். சங்க காலத்தில் குலசேகரன்பட்டினம் ‘‘தென் மறைநாடு’’என்றழைக்கப்பட்டது. பாண்டிய மன்னன் சடையவர்ம சுந்தரபாண்டியனின் மகன் குலசேகரப்பாண்டியன். இப்பகுதியை கி.பி.1251 ஆம் ஆண்டு முதல் சுமார் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தான். கேரள மன்னனை வெல்ல குலசேகரப்பாண்டியன் படையெடுத்தபோது, அவன் கனவில் முத்தாரம்மன் தோன்றி அருளாசி வழங்கினாள் என்றும் கூறப்படுகிறது. வெற்றி பெற்ற குலசேகரப் பாண்டியன் முத்தாரம்மனின் உத்தரவுப்படி துறைமுகத்தை சீர்படுத்தி ஊரையும் பெரிதாக்கினான். தன்னுடைய பெயரையே குலசேகரப்பட்டினம் என வைத்தான். அச்சமயத்தில் குலசேகரன்பட்டினம் துறைமுகம் மிகப்பெரும் வாணிப கேந்திரமாகத் திகழ்ந்துள்ளது என்பதும் வரலாறு. குலசேகரப்பட்டினம் தேவிக்கு முத்தாரம்மன் என பெயர் வழங்க பல காரணங்கள் கூறப்படுகிறது. ‘பாண்டி நாடு முத்துடைத்து’ என்பார்கள். பாண்டிய மன்னர்கள் முத்துக்களைக்குவித்து தேவியாக பாவித்து வழிபட்டனர். அம்முத்துகள் அம்பாளாகத் திருமேனி கொண்டன.
முத்துக்களிலிருந்து அன்னை உதித்ததால் ‘முத்தாரம்மன்’ என அழைக்கப்பட்டாள். பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாகத் தொடுத்து அன்னைக்குச் சூட்டி மகிழ்ந்தனர். எனவே அன்னை, முத்தாரம்மன் எனவும் வழங்கலானாள். அம்மை நோயினை முத்துப் போட்டதாகக் கூறுவது மரபு. முத்துக் கண்டவர்கள் அம்பாளை வழிபட்டதன் காரணமாக அம்மை நோய் (முத்து நோய்) குணமாகும். முத்துக்களை ஆற்றிக் குணப்படுத்தியதால் அன்னை, முத்து ஆற்று அம்மன் என்றழைத்து, அதுவே மருவி முத்தாரம்மன் என அழைக்கப்படுகிறாள் என்றும் கூறப்படுகிறது. சிப்பியிலிருந்து விடுபட்டது முத்து. முத்தைச் சிப்பி மூடியிருக்கிறது. உயிர்களை ஆணவ மலம் மூடி மறைத்துள்ளது. உயிர்களை மலக்கட்டுகளிலிருந்து விடுவித்தால், உயிர்கள் ஜீவன் முக்தர்கள் ஆவார்கள். அம்பாள் சிப்பியிலிருந்து முத்துக்களைப் பிரித்தெடுப்பதுபோல உலக உயிர்களை மாயைகளிலிருந்து பிரித்து ஜீவன் முக்தர்களாக மாற்றுகிறாள். இதனால் அன்னைக்கு, முத்தாரம்மன் என்ற பெயர் நிலைக்கலாயிற்று என்பது மற்றுமொரு கூற்று. நவமணிகள் என்பது முத்து, மரகதம், பச்சை, புஷ்பராகம், நீலம், வைடூரியம், பவளம், மாணிக்கம், வைரம் ஆகியவையாகும். இதில் முத்து மட்டுமே பட்டை தீட்டப்படாமலேயே தானே ஒளிவிடும் தன்மையுடையது.
இங்கே அம்பாள் சுயம்புவாகத் தோன்றி உலகைக் காக்க ஒளிர்வதால் முத்தாரம்மன் எனவும் சிறப்பிக்கப்படுகின்றாள். அவளிடம் நாம் பணிந்தால் நம் வாழ்வும் முத்துப்போல் பிரகாசிக்கும் என்பது அன்னையின் தத்துவம்.
கோயில் சிறப்புகள்:
- இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
- இந்த ஆலயத்தில் ஒரே பீடத்தில் வடக்கு திசை நோக்கி ஈசன் ஞானமூர்த்தீஸ்வரராகவும், அம்பாள் முத்தாரம்மனாகவும் சுயம்புவாக இருந்து அருள்பாலித்து வருகிறார்கள்.
- பொதுவாக எல்லா கோவில்களிலும் சிவனுக்கும், அம்பாளுக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கும். ஆனால் இக்கோவிலில் சக்தி மயமாக சிவனும், சிவமயமாக சக்தி யும் இருந்து அருள்பாலிக்கின்றனர். குலசை முத்தாரம்மன் கோவிலில் எங்கும் காண முடியாத அதிசயமாக இங்கு மூலவர் ஞானமூர்த்தீஸ்வரரும் அம்பாள் முத்தாரம்மனும் சுயம்புவாக தோன்றி ஒரே விக்கிரகமாக வடக்கு திசை நோக்கி வீற்றிருக்கின்றனர்.
- குலசேகரப்பாண்டியன் என்னும் மன்னனே இந்த கோவிலை கட்டியுள்ளான். மேலும் இந்த ஊரில் உள்ள அறம் வளர்த்த நாயகி சமேத கச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோவிலையும் இந்த அரசனே கட்டி முடித்துள்ளான். அக்கசாலை விநாயகர் கோவில், விண்ணகரப் பெருமாள் கோவில், சிதம்பரேஸ்வரர் கோவில், வீரகாளி, பத்ரகாளி, கருங்காளி, முப்புடாதி, உச்சினி, மகாகாளி, அங்காளம்மன், ஈஸ்வரி அம்மன், வண்டி மறித்த அம்மன் என அஷ்ட காளி கோவில்களும் குலசையில் அமைந்துள்ளன.
- ஞானமூர்த்தீஸ்வரர் இடது காலை மடக்கிய நிலையில் இரண்டு திருக்கரங்களுடன், வலக்கரத்தில் செங்கோலும், இடக்கரத்தில் விபூதிக் கொப்பரையும் கொண்டு அருள்பாலிக்கிறார். முத்தாரம்மன் வலது காலை மடக்கிய நிலையில் நான்கு திருக்கரங்களுடன், வலது மேல் கரத்தில் உடுக்கையும், கீழ் கரத்தில் திரி சூலமும், இடது மேல் கரத்தில் நாகபாசமும், கீழ் கரத்தில் விபூதி கொப்பரையும் கொண்டுள்ளாள்.
- குலசேகரப்பட்டினத்தில் வீரகாளியம்மன், பத்ரகாளியம்மன், கருங்காளியம்மன், முப்புடாரியம்மன், முத்தாரம்மன், உச்சினி மாகாளியம்மன், மூன்று முகம் கொண்ட அம்மன், வண்டிமறித்த அம்மன் என்று அட்டகாளிகளுக்கும் கோவில் உள்ளது.
- முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரரின் சுயம்பு விக்கிரகங்களை ஆரம்ப காலத்தில் வழிபட்டு வந்த பக்தர்கள், அம்மையப்பன் இருவரையும் பெரிய திருஉருவில் வழிபட விருப்பம் கொண்டனர். அப்போது கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய முத்தாரம்மன், ‘எங்கள் திருமேனியை கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி என்ற ஊரில் உள்ள சிற்பி சுப்பையா என்பவரிடம் பெற்றுக்கொள்ளுங்கள்’ என கூறி மறைந்தாள். அம்மனின் அருளால் சிலையை செதுக்கிய சிற்பியிடம் இருந்து அம்மையப்பனின் சிலையைப் பெற்று வந்து 1934-ம் ஆண்டு கருவறையில் பிரதிஷ்டை செய்தனர். பழைய சுயம்பு சிலைகள் தற்போது கருவறையின் அடியில் உள்ளதாக கூறப்படுகிறது. இத்தல கருவறையின் எதிரில் நின்றாலே ஆன்மிக அதிர்வுகளை பக்தர்கள் உணர்வார்கள்.
- குலசை முத்தாரம்மன் தசரா விழா வெளி உலகுக்கு பிரபலமாக தெரியாத காலகட்டத்தில் பக்தர்கள் தங்களின் நோய் மற்றும் குடும்ப கஷ்டங்கள் நீங்க வேண்டுதலை நிறைவேற்றிக்கொள்ள வேடமணிந்து, விரதமிருந்தனர். அதுவும் முகத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தும் வேடம் மட்டுமே. காலப் போக்கில் இந்த வேடமணிதலே குலசை தசரா விழாவின் முக்கிய அம்சமாக மாறியது.
திருவிழா:
புரட்டாசி மாத அமாவாசை அடுத்து வரும் பிரதமை திதியில் கொடியேற்றத்துடன் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தொடங்குகிறது. நவராத்திரி விழாவின் முதல் நாள் முத்தாரம்மன் துர்க்கையாகவும், இரண்டாம் நாள் விஸ்வகர்மேஸ்வரராகவும், மூன்றாம் நாள் பார்வதிதேவியாகவும், நான்காம் நாள் பாலசுப்பிரமணியராகவும், ஐந்தாம் நாள் கிருஷ்ணராகவும், ஆறாம் நாள் மகிஷாசுரமர்த்தினியாகவும், ஏழாம் நாள் நடராஜராகவும், எட்டாம் நாள் மகாலட்சுமியாகவும், ஒன்பதாம் நாள் சரஸ்வதியாகவும் காட்சி தந்து வீதி உலா வருவாள்.
பத்தாம் நாள் விஜயதசமி அன்று இரவு 11 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், சூரசம்ஹாரத்துக்குக் கொண்டு செல்லப்படும் சூலத்துக்கும் பூஜைகள் நடைபெறும். இரவு 12 மணிக்கு முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் ஆலயத்துக்கு முன்பாக எழுந்தருள்வாள். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பின்னர் முத்தாரம்மன் மகிஷாசுரமர்த்தினி கோலம் கொண்டு சூரனை சம்ஹாரம் செய்ய, சுற்றிலும் வாண வேடிக்கை நிகழ்த்தப்படும். தொடர்ந்து முத்தாரம்மன் திருத்தேர் மற்றும் பூச்சப்பரத்தில் வீதி உலா வருவாள். இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடுவர்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 1 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில்,
குலசேகரன்பட்டினம்,
தூத்துக்குடி மாவட்டம்.
அமைவிடம்:
திருச்செந்தூரிலிருந்து பஸ்ஸில் சென்று தரிசிக்கலாம்.
முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :
திருச்செந்தூரிலிருந்து – 12கி.மீ., தூத்துக்குடியிலிருந்து – 60 கி.மீ., கன்னியாகுமரியிலிருந்து – 72 கி.மீ., திருநெல்வேலியிலிருந்து – 70 கி.மீ.,