September 26 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் குறுக்குத்துறை

  1. அருள்மிகு குறுக்குத்துறை முருகன் கோயில் வரலாறு

ஆற்றின் நடுவே ஒரு அதிசய முருகன் கோயில்

 

மூலவர்   :     சுப்பிரமணிய சுவாமி.

தீர்த்தம்    :     தாமிரபரணி.

சிறப்பு     :     குடைவறைத் திருமேனி.

ஊர்       :     குறுக்குத்துறை

மாவட்டம்  :     திருநெல்வேலி

 

ஸ்தல வரலாறு:

இறைவன் அருள்புரியும் நிலையங்களாக ‘காடுங் காவுங் கவின்பெறு துருத்தியும் யாறுங் குன்னும் வேறுபல் வைப்பும்’ என திருமுருகாற்றுப்படையும், ‘என்றும் உலவாது உலவும் யாதொறு உலாவுங் குன்றுதொறும் உலாவும் உறையங் குமரவேளே’ என கச்சியப்பரும், குமரன் எழுந்தருளியுள்ள இடங்களை புகழ்கின்றனர். இதன்படி பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் பொய்யா பெருநதிக்ரையில் அமைந்த திருத்தலம் திருவுருமாமலை எனும் குறுக்குத்துறையாகும்.

இந்தப் பகுதியில் காணப்படும் கற்பாறைகளில் தெய்வ திருவுருவை வடிப்பது மரபு. எனவே இத்திருத்தலம் திருவுருமாமலை எனப்பட்டது. உலக உயிர்கள், இறைவனின் அருளை எளிதில் பெற, முருகப்பெருமான் இங்கு எழுந்தருளியிருப்பதால் ‘குறுக்குத்துறை’ எனவும், திருநெல்வேலி நகரில் இருந்து ஆற்றுக்கு செல்ல, குறுக்கு வழியாக உள்ளதால் ‘குறுக்குத்துறை’ என்றும் ஊரின் பெயருக்கு இருவேறு காரணங்கள் கூறப்படுகிறது.

திருச்செந்தூர் மூலவர் சிலை இங்குதான் உருவாக்கப்பட்டது. அப்போது, ஒரே மாதிரியான இரண்டு சிலைகளை உருவாக்கி, ஒன்றை திருச்செந்தூர் கருவறையிலும், மற்றொன்றை குறுக்குத்துறை மேலக்கோயில் கருவறையிலும் வைத்து வணங்கி வருகிறார்கள்.  குறுக்குத்துறையில் உள்ள பாறையில் முருகன் சிலை வடிக்கப்பட்டு திருச்செந்தூர் சென்றதால், இந்த கோயிலை திருச்செந்தூரின் தாய்வீடு என்றழைக்கிறார்கள். ஆனாலும் இந்தச் சிலையை மக்கள் வழிபட்டு வந்தார்கள். இந்த சிலை வெயில் பட்டு, மழை பட்டு, பாதுகாப்பற்ற நிலையில் கிடந்தது.

ஒரு சமயம் அந்த வழியாக வந்து ஒரு மூதாட்டி, இந்தத் திருவுருவைக் கண்டார். முருகனின் திருவுருவை கண்டதும் உளம் மகிழ்ந்த அந்த மூதாட்டி, முருகன் திருவுருவுக்கு ஆட்பட்டு அங்கேயே தங்கியிருந்து இறை பணி செய்யத் தொடங்கினார். தினமும் முருகன் திருவுருவை நீராட்டி, மலரிட்டு வழிபட்டு வந்தார். அவரை தொடர்ந்து பலரும் வழிபடத் தொடங்கினர். பக்தர்கள் கூட்டம் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பெருகியது. இதனைத்தொடர்ந்து அந்த இடத்தில் முருகப்பெருமானுக்கு ஒரு நிழலிடம் அமைக்கப்பட்டது. வழிபாடு தொடர்ந்து சிறப்புடன் நடைபெற்றது. பின்னர் இத்திருக்கோவில் திருவாவடுதுறை ஆதீன ஆளுகைக்கு வந்தது. இந்த ஆலயத்தில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று இன்று இக்கோவில் சீரோடும், சிறப்போடும் விளங்குகிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • இங்கு கருவறையில் பாறையில் குடையப்பட்ட திருமேனியாக வள்ளி, தெய்வானை உடன் நான்கு கரங்கள் கொண்டு நின்ற கோலத்தில் காட்சித் தருகிறார் சுப்பிரமணிய சுவாமி.

 

  • இங்கு கருவறையில் வலது மேல் கரத்தில் வச்சிராயுதம் தாங்கியும், வலது கீழ்க் கரத்தில் மலர் ஏந்தியும், இடது மேல் கரத்தில் ஜெப மாலை கொண்டும், இடது கீழ்க்கரத்தை தொடையில் வைத்த நிலையிலும் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் சுப்பிரமணிய சுவாமி.

 

  • தாமிரபரணி ஆற்றின் நடுவே இருந்தாலும், கட்டுக்கடங்காத வெள்ளத்தை தாங்கி 300 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக நிற்கிறது குறுக்குத்துறை முருகன் கோயில்.

 

  • திருநெல்வேலி அருகே குறுக்குத்துறையில் திருவாவடுதுறை ஆதினத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், தாமிரபரணியின் நடுவே அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இக்கோயில் மூழ்குவதும் வாடிக்கை. அப்போது, 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஆற்றில் வருகிறது என நெல்லை மக்கள் புரிந்து கொள்வர்.

 

  • வெள்ளப்பெருக்கு காலங்களில் இக்கோயிலில் இருந்து உற்சவர், சப்பரங்கள், உண்டியல் போன்றவற்றை அங்கிருந்து எடுத்துச் சென்று, கரையில் அமைந்துள்ள மேலக்கோயிலில் வைத்துவிடுவர். மூலவர் சிலை மட்டும் அப்படியே இருக்கும். வெள்ளம் வடிந்தபின் கோயிலை முழுமையாக சுத்தப்படுத்தி, உற்சவரை மீண்டும் கோயிலுக்கு கொண்டு வருவர்.

 

  • கடந்த 300 ஆண்டுகளாக எந்த வெள்ளத்தையும் தாங்கும் வகையில் இந்த கோயில் கம்பீரமாக நிற்கிறது. 1992-ல் புயல் மழையின்போது 2 லட்சம் கனஅடி தண்ணீர் தாமிரபரணியில் கரைபுரண்டபோதும், இக்கோயிலின் மேல்தள ஓடுகள் மட்டுமே சேதமடைந்தன. வேறு பாதிப்புகள் ஏற்படவில்லை. வெள்ளத்தை எதிர்கொள்ளும் வகையில் கோயிலின் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம்.

 

  • பொங்கி வரும் வெள்ளத்தை கிழித்து பிரிக்கும் வகையில், படகுகளின் முன்பகுதி கூர்முனையுடன் இருப்பதுபோல், இக்கோயிலின் மேற்கு பகுதி மதிற்சுவர் கட்டப்பட்டிருக்கிறது. வெள்ளம் மோதும்போது இந்த கூர்மையான சுவரில் பட்டு சிதறி ஓடிவிடும். கோயிலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மண்டபத்தினுள் புகும் வெள்ளம் மறுபுறம் வெளியேறும் வகையில் கற்சுவரில் ஜன்னல் வடிவிலான திறப்புகள் காணப்படுகின்றன. இதுபோன்ற நுட்பமான கட்டுமானத்தால்தான் 300 ஆண்டுகளாக இக்கோயில் வெள்ளத்தை எதிர்கொண்டு வருகிறது.

 

  • 17-ம் நூற்றாண்டுக்குப்பின் நாயக்கர் மன்னர் காலத்தில், திருநெல்வேலி பகுதியின் ஆளுநராக இருந்த வடமலைப்பிள்ளையன் காலத்தில்தான் இக்கோயில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

 

  • இங்கு கோயிலை கட்டி சுவாமியை வைக்கவில்லை. சுவாமி சுயம்புவாக இருந்த இடத்தில் கோயிலை கட்டியிருக்கிறார்கள்.

 

  • கருவறை வாசலில் இருபுறமும் வாயிற்காவலர்களும், வடபுறம் நெல்லையப்பர், காந்திமதி அம்மாள், ஐம்பொன் வடிவில் நடராசர், சமய குரவர்கள் நால்வர், விநாயகர், படைத்தேவர் முதலிய திருமேனிகள் உள்ளது. தென்புறம் உள்ள அறையில் முருகனின் உலாத்திருமேனி உள்ளது. இதற்கு அடுத்து இடைநாழி. அதற்கு அடுத்து கருவறை அமைந்து உள்ளது.

 

  • இந்தத் தலத்தில் 2½ அடி உயரத்தில் முருகப்பெருமான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவர் திருச்செந்தூர் கருவறை மூர்த்தம் போலவே, வலது மேல் கரத்தில் வச்சிராயுதமும், வலது கீழ்க்கரத்தில் மலர் எடுத்தும், இடது மேற்கரத்தில் அக்க மலையும், இடது கீழ்க்கரத்தை இடது தொடையில் வைத்த நிலையிலும் உள்ளார். மேலும் முருகப்பெருமானின் இடது பக்கம் சிவலிங்க திருமேனி உள்ளது. இந்த கருவறை மூர்த்தி சிவபூஜை செய்யும் நிலையில் உள்ளது.

 

  • வெளியே கருவறை திருச்சுற்று உள்ளது. இங்கு தெற்கு சுற்றில் தட்சிணாமூர்த்தியும், தென்மேற்கு முனையில் விநாயகரும், வடமேற்கில் முருகனும், பைரவரும் உள்ளனர். வடக்கு சுற்றில் சண்டீசரும், அவருக்கு பின்புறம் வடக்கு சுற்றின் மேல்புறம் சுவரில் பஞ்சலிங்கம் தேவியாருடன் உள்ளார்கள். இப்பகுதி ஒரு பெரும்பாறையாக காட்சி தருகிறது. இப்பகுதியில் பாறைகள் உள்ளமைக்கு சான்றாக இது அமைந்துள்ளது.

 

  • தென்முகமமாக எழிலுடன் ஐம்பொன் படிமமாக ஆறுமுகப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.

 

  • திருச்செந்தூர் முருகன் கோயில் தோன்றிய காலத்திலேயே குறுக்குத்துறை முருகனின் மேலக்கோயில் தோன்றியுள்ளது. அதற்குக் காரணம், குறுக்குத்துறையில் உள்ள கற்கள். இந்த இடத்துக்கு திருவுருமாமலை என்று பெயர். இங்குள்ள கற்கள் சிலை வடிக்க ஏற்றவை.

 

  • திருச்செந்தூருக்குக்கும் குறுக்குத்துறைக்கும் நிறையவே தொடர்புள்ளன என்பதை மற்றொரு சம்பவத்தாலும் தெரிந்துகொள்ளலாம். ஒருமுறை திருச்செந்தூர் உற்ஸவ மூர்த்தியை டச்சுக்காரர்கள் திருடிக்கொண்டு சென்று விட்டார்கள். உடனே வடமலையப்ப பிள்ளை புதிதாக ஒரு உற்ஸவர் விக்கிரஹம் செய்தார். அந்தச் சிலை செய்து முடிப்பதற்குள் திருடிச்சென்ற சிலை மீட்கப்படவே, புதிதாகச் செய்த உற்ஸவ விக்கிரஹம் குறுக்குத்துறை கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.

 

  • இன்னும் ஒரு சிறப்பும் சொல்லப்படுகிறது. செந்திலாண்டவரையும் பழநியாண்டவரையும் ஒரே நாளில் தரிசிப்பது கடினம். ஆனால், குறுக்குத் துறையில் உள்ள முருகப்பெருமானின் கோயிலையும் மேலக்கோயிலையும் தரிசித்தால், ஒரே நாளில் செந்திலாண்டவரையும் பழநி யாண்டவரையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

 

  • கோயில் ராஜகோபுரத்தில் இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட காந்தி, வ.உ.சி. போன்ற தலைவர்களின் உருவங்களும் சுதைச் சிற்பங்களாக அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு

 

  • எல்லாக்கோயில்களிலும் இந்தத் தாமிரபரணி நீர் தான் அபிஷேகத்துக்குச் செல்லும். ஆனால் இங்கே வருஷத்துக்கு ஒரு முறை தாமிரபரணி அன்னையே முருகனுக்கு அபிஷேகம் செய்து ஆனந்தப்படுகிறாள்.

 

திருவிழா: 

இங்கு சித்திரை மாதம் கொடியேற்றமாகி பத்து நாட்கள் பெருந்திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவின் ஒன்பதாம் நாள் தேரோட்டம் நடைபெறும்.

இங்கு வைகாசி விசாகத் திருவிழா சிறப்பாக நடைபெறும் அன்று இங்குள்ள கருவறை சுப்பிரமணியருக்கு தஙுகக் கவசம் சாத்தப்படும்.

இங்கு ஆவணி மாதம் கொடியேற்றமாகி பத்து நாட்கள் பெருந்திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவின் ஒன்பதாம் நாளும் தேரோட்டம் விமரிசையாக நடைபெறும்.

இது தவிர திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 11:30 மணி வரை

மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை

 

முகவரி:  

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,

குறுக்குத்துறை,

திருநெல்வேலி மாவட்டம்.

 

அமைவிடம்:

திருநெல்வேலி மாநகரிலிருந்து தென் கிழக்கே சுமார் 2.5 கி. மீ தொலைவில் அமையப் பெற்றுள்ளது குறுக்குத்துறை முருகன் கோவில். இங்கு செல்ல பேருந்து வசதிகள் குறைவு என்பதால் தனியார் வாகனங்களில் செல்வதே சிறப்பு.

Share this:

Write a Reply or Comment

3 × four =