August 28 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவையாறு

  1. அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     ஐயாறப்பன், பஞ்ச நதீஸ்வரர்

அம்மன்         :     தரும சம்வர்த்தினி

தல விருட்சம்   :     வில்வம்

தீர்த்தம்         :     சூரிய புஷ்கரணி தீர்த்தம், காவேரி

ஊர்             :     திருவையாறு

மாவட்டம்       :     தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு:

சிலாத முனிவர் என்பவரின் மகனாக அவதரித்தவர் நந்திகேசர். பிறக்கும் போது இந்த குழந்தைக்கு நான்கு கைகள் இருந்தன. அவர் ஒரு பெட்டியில் இந்த குழந்தையை வைத்துவிட்டு மூடி திறந்தார். அப்போது குழந்தையின் இரண்டு கைகள் நீங்கி அழகான குழந்தையாக விளங்கியது. அவரது தந்தை குழந்தையை திருவையாறு தலத்தில் விட்டு சென்றார். பரமேஸ்வரன் அந்த குழந்தைக்கு ஐந்து விதமான அபிஷேகம் செய்தார். அம்பிகையின் பால் நந்தி வாய்நுரைநீர் அமிர்தம் சைவ தீர்த்தம் சூரிய புஷ்கரணி தீர்த்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தார். நந்திகேசர் தமக்கு ஆயுள் 16 ஆண்டுகளே என்பதை அறிந்து கழுத்தளவு குளத்தின் நீரில் நின்று கடுந்தவம் புரிந்தான். ஏழுகோடி முறை ஓம் நமசிவாய உருத்திர ஜபம் செய்தார். தவத்தை ஏற்றுக் கொண்ட இறைவன் ஞானோபதேசமும் நந்தீசர் எனும் தீட்சாநாமமும் சிவகணத் தலைமையும் முதல் குருநாதன் என்ற தகுதியையும் அருளினார். அத்துடன் இறைவன் தாமே முன்னின்று திருமழபாடியில் வியாக்ரபாதரின் மகளை சுயசாம்பிகையை பங்குனிப் புனர்பூச நட்சத்திரத்தன்று திருமணம் செய்துவைத்தார். சுந்தரரும் சேரமான் நாயனாரும் அக்கோவில் இறைவனை தரிசிக்க வரும்போது காவிரியின் இரு பக்கத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுந்தரர் பதிகம் பாடியதும் வெள்ளம் ஒதுங்கி நின்று இருவருக்கும் வழி தந்தது.

கோவில் 15 ஏக்கர் பரப்பளவில் 7 நிலைகளையுடைய ராஜகோபுரமும் 5 பிரகாரங்களும் உள்ள ஒரு பெரிய கோவிலாகும். இரண்டாம் பிரகாரத்தில் சோமஸ்கந்தருக்கு தனி ஆலயம் உள்ளது. அருகில் உள்ள ஜப்பேசுர மண்டபத்தில் பஞ்சபூதலிங்கங்களும் சப்தமாதர்களும் ஆதிவிநாயகரும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் இச்சுற்றில் விநாயகர் சுப்பிரமணியர் சோமஸ்கந்தர் தட்சினாமூர்த்தி நடராஜர் ஆகிய திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூன்றாம் பிரகாரத்தில் கிழக்கிலும் தெற்கிலும் இருகோபுரங்கள் உள்ளன. நான்காம் பிரகாரத்தில் சூரியபுஷ்கரணி தீர்த்தமும் அப்பர் கைலாயக் காட்சி கண்ட வடகயிலாயம் அமைந்துள்ளன. இச்சுற்றின் 4 புறமும் கோபுரங்கள் இருக்கின்றன. ஐந்தாம் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய ஐயாரப்பன் சந்நிதியும் திரிபுரசுந்தரி சந்நிதியும் இருக்கிறது. சுவாமி சந்நிதியிலும் அம்பாள் சந்நிதியிலும் தனித்தனியாக ராஜகோபுரங்கள் உள்ளன. இறைவன் சந்நிதி கருவறை விமானத்தின் பின்புறக் கோஷ்டத்தில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் சற்று மாறுபட்டது. வழக்கமாக அர்த்தநாரீஸ்வரர் சிற்பங்களில் சிவபெருமான் வலப்புறமும் உமையம்மை இடப்புறமும் தான் காணப்படுவர். ஆனால் இங்கு சிவன் இடப்புறமும் உமை வலப்புறமும் அமைந்திருப்பதைக் காணலாம்.

 

கோயில் சிறப்புகள்:

  • சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 51 வது தேவாரத்தலம் திருஐயாறு (திருவையாறு) ஐந்து ஆறுகள் சேரும் இடம் என்பதால் இப்பெயர் பெற்றது.

 

  • இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த லிங்கம் ஒரு பிருத்வி லிங்கம் ஆகையால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையார் மேல் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். லிங்கத் திருமேனிக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்பெறும்.

 

  • அம்பாள் அறம்வளர்த்த நாயகி தர்மசம்வர்த்தினி. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது தர்ம சக்தி பீடம் ஆகும். உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் நாயகியாக பெண்களுக்கு தர்மத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் தருமசம்வர்த்தினி என்ற பெயரில் அம்பாள் இங்கே எழுந்தருளி உள்ளாள்.

 

  • எல்லா நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் வகையில் அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.

 

  • இத்தலத்தில் இறைவி இடக்கரம் இடுப்பில் ஊன்றியுள்ளபடியும் மேல் இரு கரங்களில் சங்கு சக்கரம் போன்றவையுடன் காணப்படுவதால் இத்தலத்தில் அம்பிகை மஹாவிஷ்னு ஸ்வரூபத்தில் தோற்றமளிக்கிறாள். எனவே அம்பாள் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறாள். எனவே திருவையாறு எல்லைக் குட்பட்ட இடங்களில் பெருமாளுக்கு கோயில்களே கிடையாது.

 

  • சுவாமி பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியை பெருமாள் வழிபட்டிருக்கிறார். பெருமாள் வழிபட்ட தட்சிணாமூர்த்தி தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் உள்ளார். எனவே இவரை ஸ்ரீஹரிகுருசிவயோக தட்சினாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். வலது கரங்களில் கபாலம் அபய முத்திரையும் இடது கரங்களில் சூலம் வேதச்சுவடிகள் தாங்கியும் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். மகாவிஷ்ணுவுக்கு குருவாக இருந்து தட்சிணாமூர்த்தி வேதங்களை உபதேசித்த ஒப்பற்ற திருத்தலம் இது.

 

  • திருவீழிமிசையில் கண் மலரிட்டு அர்ச்சனை செய்து ஸ்ரீசக்கரத்தைப் பெற்ற திருமால் வேதங்களின் பெருமைகளை உணர்ந்து இந்தத் தலத்துக்கு வந்து தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றார் என்று தலபுராணம் கூறுகிறது. எனவே இக்கோவில் குரு ஸ்தலம் என்று போற்றப்படுகிறது. இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் பாதத்தின் கீழே முயலகனுக்கு பதிலாக ஆமையை மிதித்துள்ளார்.

 

  • சிவனின் ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். சிவபெருமானின் ஜடா முடியை மிதிக்கக்கூடாது என்பதால் சன்னதியை சுற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

  • இத்திருக்கோயிலுள் ஐயாறப்பர் கோயில் தென் கயிலைக் கோயில் ஒலோகமாதேவீச்சரம் என்று மூன்று கோயில்கள் உள்ளன.

 

  • கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டு ஐயாறப்பா என உரக்க கொடுத்தால் ஏழு முறை திருப்பிக் கேட்கிறது. அந்த அளவிற்கு இந்த கோயிலில் கட்டடக்கலை அமைந்துள்ளது. வெளிநாட்டில் உள்ள இன்ஜினியர்கள் இந்த சப்தம் கேட்பது பற்றி ஆய்வு செய்தனர். ஆனால் இதற்கான காரணத்தை அறிய முடியவில்லை.

 

  • இத்தலத்தில் முருகப்பெருமான் வில் வேல் அம்பு ஆகிய படைக்கலங்களுடன் வில்லேந்திய வேலவனாக தனுசுசுப்ரமணியம் என்ற பெயருடன் விளஙகுகிறார். இவர் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் பின்புறம் மயில் விளங்கக் காட்சி தருகின்றார். மயிலின் முகம் தெற்கு நோக்கி உள்ளது. அருகில் இருபுறமும் தேவியர் எழுந்தருளியுள்ளனர்.

 

  • இத்தலத்திலுள்ள வடகயிலாயம் தென்கயிலாயம் ஆகிய இரு சந்நிதிகள் முக்கியமானவை. இக்கோவிலின் மூன்றாம் பிரகாரத்தின் வடபுறம் ஓலோக மாதேவீச்சுரம் என்ற கற்கோவில் உள்ளது. இது வட கைலாயம் எனப்படும்.

 

  • அப்பர் கைலாயக் காட்சி கண்ட வடகயிலாயம் முதலாம் ராஜராஜசோழனின் பட்டத்தரசி உலகமகாதேவியால் எழுப்பப்பட்டது.

 

  • மூன்றாம் பிரகாரத்தின் தென்புறம் தென் கைலாயம் எனப்படும் கற்கோவில் உள்ளது. இது முதலாம் ராஜேந்தர சோழனின் மனைவிகளில் ஒருவரான பஞ்சவன் மாதேவியால் பழுது பார்க்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

 

  • ஆலயத்தின் தென்கோபுர வாசலில் உள்ள ஆட்கொண்டார் சந்நிதியில் எப்போதும் குங்கிலியம் மணந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் இங்குள்ள குண்டத்தில் குங்கிலியம் அர்ப்பணிப்பார்கள். சிவபெருமான் சுசரிதன் என்ற சிறுவனை எமனிடமிருந்து காப்பாற்றிய சமயம் எடுத்த உருவமே இந்த ஆட்கொண்டாரின் உருவம்.

 

  • அப்பர் பெருமானுக்குக் கயிலைக் காட்சி அருளிய தலம்.

 

  • திருநாவுக்கரசர் கைலாயம் சென்று சிவபெருமானை தரிசிக்க விரும்பினர். காசியில் தன்னுடன் வந்த அடியார்களை தங்கியிருக்குமாறு சொல்லிவிட்டு தனித்துப் புறப்பட்டார். கைலாயப் பயணம் மிகவும் கடினமாக இருந்ததால் முதலில் நடந்து சென்ற அவர் பிறகு நடக்க முடியாமல் தவழ்ந்து செல்லத் தொடங்கினார். திருநாவுக்கரசர் படும் சிரமத்தைப் பார்த்த இறைவன் அவரை ஆட்கொள்ள நினைத்தார். அருகில் ஒரு குளத்தை ஏற்படுத்தி ஒரு முனிவர் வேடத்தில் அவரை நெருங்கி கைலாயம் செல்லும் வழியில் உள்ள சிரமங்களை எடுத்துக் கூறி திரும்பிச் செல்லும்படி கூறினார். இறந்தாலும் கைலைநாதனைக் காணாமல் ஊர் திரும்ப மாட்டேன் என்ற உறுதியுடன் இருந்த திருநாவுக்கரசரை ஆகாயத்தில் இருந்து அசரீரியாக அழைத்த சிவபெருமான் அங்குள்ள குளத்தில் மூழ்கி திருவையாற்றில் எழுவாய் அங்கே உனக்கு கைலாயக் காட்சி தருகிறேன் என்று அருளினார். அதே போல் குளத்தில் மூழ்கி திருவையாற்றில் சூரியபுஷ்கரணி தீர்த்தத்தில் எழுந்தார். சிவபெருமான் தான் கூறியபடி அவருக்கு கைலாயக் காட்சி தந்து அருளினார்.

 

  • திருநந்தி தேவர் லட்சுமி இந்திரன் வருணண் வாலி சேரமான் பெருமாள் ஐயடிகள் காடவர்கோன் பட்டினத்துப் பிள்ளையார் அருணகிரிநாதர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

 

  • சூரியபகவான் இத்தலத்தில் பூஜித்துள்ளார்.

 

  • அருணகிரிநாதர் திருஞானசம்பந்தர் அப்பர் சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

 

  • சிவாச்சாரியார் ஒருவர் காசியாத்திரை சென்று உரிய காலத்தில் வர தாமதம் ஏற்பட, இறைவன், சிவாச்சாரியார் வடிவம் கொண்டு தம்மைத் தாமே பூசித்துக்கொண்டார். (இதனை மாணிக்கவாசகர் ஐயாறு அதனிற் சைவனாகியும் என்பார்.)

 

  • நந்திதேவர் இப்பதியில் ஏழுகோடி முறை உருத்திர ஜபம் செய்து இறைவனால் தீர்த்தமாட்டப் பெற்றார். அது ஐந்து தீர்த்தங்களாகப் புகழ் பெற்றன. அந்த ஐந்து தீர்த்தங்களின் காரணமாக திருவையாறு என அழைக்கப்படுகின்றது.

 

  • இறைவர், நந்திதேவருக்கு சுயம்ப்ரகாசை என்னும் பெண்ணைத் திருமணம் செய்துவைத்த தலம். இதனைச் சுற்றி ஏழூர்த் தலங்கள் (சப்தஸ்தானம்) இதனோடு தொடர்புடையன.

 

  • சப்தஸ்தானத் தலங்களாக திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்கள் அழைக்கப்படுகின்றன. இவற்றில் முதல் தலமான திருவையாறில் சித்திரை மாதம் பௌர்ணமி விசாகத்தில் சப்தஸ்தான பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஏழு ஊர் இறைவனும் எழுந்தருளி அருள்புரியும் காட்சியை ஆயிரக்கணக்கானோர் ஒவ்வோராண்டும் கண்டு களிக்கின்றனர்.

 

திருவிழா :

மகா சிவராத்திரி

சித்திரைப்பெருந்திருவிழா (சப்தஸ்தான பெருவிழா)

ஆடி அமாவாசை (அப்பர் கயிலாயக் காட்சி திருவிழா)

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில்,

திருவையாறு – 613 204

தஞ்சாவூர் மாவட்டம்.

 

போன்:    

04362 – 260332, 9443008104.

 

அமைவிடம்:

தஞ்சாவூரிலிருந்து 14 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 33 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது இக்கோயில். தஞ்சாவூரிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் பேருந்துகள் உள்ளன. ரயிலில் வருவோர் தஞ்சாவூர் அல்லது கும்பகோணத்தில் இறங்கி, அங்கிருந்து பேருந்து மூலம் சென்றடையலாம்.

Share this:

Write a Reply or Comment

4 × 4 =