August 23 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பெரியபாளையம்

  1. பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோவில் வரலாறு

 

மூலவர்   :     பவானி அம்மன்

உற்சவர்   :     பவானி அம்மன்

ஊர்       :     பெரியபாளையம்

மாவட்டம்  :     திருவள்ளூர்

 

ஸ்தல வரலாறு:

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில், ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது பவானி அம்மன் திருக்கோவில். இந்த ஆலயத்தின் தல வரலாறு, கிருஷ்ணரின் பிறப்போடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.

கம்சனின் தங்கை தேவகிக்கும், வசுதேவருக் கும் திருமணம் நடைபெற்றது. தங்கையையும், மைத்துனரையும் தேரில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றான் கம்சன். அப்போது வானில் இருந்து ஒரு அசரீரி, “கம்சா.. உன் தங்கைக்கு பிறக்கப்போகும் 8-வது ஆண் குழந்தையால் உனக்கு மரணம் நிகழும்” என்றது. அதைக் கேட்டு ஆத்திரமடைந்த கம்சன், தங்கையென்றும் பாராமல் தேவகியை கொல்ல முயன்றான். அவனைத் தடுத்து நிறுத்திய வசுதேவர், தங்களுக்கு பிறக்கும் அனைத்து குழந்தைகளையும், பிறந்த மறுகணமே கொடுத்துவிடுவதாக கம்சனிடம் வாக்குறுதி கொடுத்தார். தங்கை தேவகியையும், வசுதேவரையும் சிறை யில் அடைத்தான், கம்சன். சிறையிலேயே வாழ்க்கை நடத்திய தேவகிக்கும், வசு தேவருக்கும் பிறந்த 7 குழந்தைகளை கம்சன் கொன்றான். 8-வதாக கண்ணன் பிறந்தார். அது நள்ளிரவு நேரம். கண்ணன் பிறந்ததும் ஒரு அசரீரி, “வசுதேவரே.. உங்கள் மகனை கோகுலத் தில் உள்ள நந்தகோபரின் மனைவி யசோதை யிடம் சேர்த்து விட்டு, அங்கு யசோதையிடம் இருக்கும் பெண் குழந்தையை இங்கே தூக்கி வந்து விடுங்கள்” என்றது.

மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் வசுதேவர், தன்னுடைய மகன் கண்ணனை கூடையில் வைத்து தலையில் சுமந்தபடி சென்று, யசோதை யிடம் வைத்து விட்டு, அங்கிருந்த பெண் குழந்தையை எடுத்து வந்து தேவகியின் அருகில் வைத்தார். அதிகாலையில் தேவகிக்கு 8-வது குழந்தைப் பிறந்தது பற்றி கம்சனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த கம்சன், ஆண் வாரிசுக்கு பதிலாக பெண் குழந்தை இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தான். இருப்பினும் 8-வது குழந் தையால் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்தக் குழந்தையை கையில் எடுத்து, அந்தரத்தில் சுவரில் வீசி கொல்ல முயன்றான். அந்தரத்தில் பறந்த குழந்தை, சக்தியின் உருவம் எடுத்து காட்சியளித்தது. அதோடு ‘உன்னைக் கொல்லப்போகிறவன், வேறு ஒரு இடத்தில் வளர்ந்துவருகிறான்’ என்று கூறி மறைந்தது. அந்த சக்தியே, பெரிய பாளையத்தில் பவானி அம்மனாக வந்தமர்ந்ததாக தல வரலாறு சொல்கிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • கோவில் கருவறையில் பவானி அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள்.

 

  • ஓங்கார வடிவ மாக, சங்கு சங்கரதாரிணியாக, பாதி திருவுருவத்துடன் அமர்ந்த கோலத்தில் அன்னை வீற்றிருக்கிறாள்.

 

  • நான்கு கரங்களுடன் காட்சியளிக்கும் அன்னையின் மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரமும், கீழ் இரு கரங்களில் வாள், அமுத கலசமும் தாங்கியிருக்கிறாள்.

 

  • அன்னையின் அருகில் கண்ணன், நாகதேவன் ஆகியோரது திருவுருவங்கள் உள்ளன.

 

  • இத்தல அன்னையிடம் மாங்கல்ய பலம் வேண்டி வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகமானது. வாழ்வில் வளம் பெருகவும், குழந்தை வரம் கிடைக்கவும் வழிபடுபவர்களும் ஏராளம்.

 

  • கிருஷ்ண பரமாத்மா பிறந்ததை கம்சனுக்கு அறிவித்தவள் துர்கை. இவளே கண்ணின் சகோதரி என்று துதிக்கப்படுபவள். வடபுலத்தில் துர்க்கையாக அவதரித்த ஆதிசக்தி, பெரிய பாளையத்தில் பவானியாக அமர்ந்தாள் என்கிறது திருத்தல வரலாறு.

 

  • மீனவக்குலப் பெண்களின் தாயாக இருப்பவள் பவானி. கடலுக்குச் சென்ற தங்கள் கணவன்மார்கள் பாதுகாப்பாகத் திரும்பி வர பவானியை துணை நிற்பாள் என்பது அவர்களின் நம்பிக்கை. பெரும் போராட்டத்துக்குப் பின்பு உயிர் பிழைத்து கணவன் திரும்பி வந்ததும், இந்த கோயிலுக்கு வந்து தங்களது திருமாங்கல்யத்தைக் காணிக்கையாக வழங்குவது அந்த பெண்களின் வேண்டுதல். இது இன்றும் நடக்கும் வழக்கம்.

 

  • உத்தர வாகினியாக ஓடும் ஆரணி நதிக்கரையில் புற்று உருவில் அமர்ந்தாள் அன்னை ஆதிசக்தி, அவளோடு பரசுராமரின் அன்னையான ரேணுகாதேவியும் வந்து அமர்ந்தார்கள் என்கிறது தல புராணம்.

 

  • நீண்ட காலம் புற்று வடிவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்த பவானி அம்மா, ஒருமுறை வளையல் வியாபாரி வழியே தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள். வளையல் வியாபாரியின் கனவில் வந்த அன்னையின் ஆணைப்படி அந்த புற்றை இடிக்க, அங்கு ரத்தம் பீறிட்டுக் கிளம்பியது. புற்றுக்குள் சுயம்பு ஒன்று இருந்தது. அதில்தான் ரத்தம் வடிந்தது. இன்றும் அன்னையின் வெள்ளிக் கவசத்தை நீக்கிப் பார்த்தால் சுயம்புவின் உச்சியில் கடப்பாரை பட்ட வடுவைக் காணலாம்.

 

  • இங்கு பவானி அன்னையோடு தனித்தனி சந்நிதிகளில் கணபதி, மகா மாதங்கி (ரேணுகாதேவிக்கு அடைக்கலம் தந்த தேவி) ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீநிவாசப் பெருமாள், மகாலட்சுமி, ஆஞ்சநேயர், ஸ்ரீபரசுராமர், நாகர், புற்றுக்கோயில் தேவி, ஆகியவர்களையும் தரிசிக்க முடியும்.

 

திருவிழா:

ஆடி மாதம் தொடங்கி 14 வாரங்களும், சித்திரா பௌர்ணமி திருநாளும் இங்கு விசேஷம்

 

திறக்கும் நேரம்:

திங்கள் முதல் சனிக்கிழமை வரை

காலை 5.30 முதல் 12.30 மணி வரையும்;

பிற்பகல் 2 முதல் இரவு 9 மணி வரையும்.

ஞாயிற்றுக்கிழமைகளில்

காலை 5 முதல் தொடர்ந்து இரவு 9 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பவானி அம்மன் திருக்கோவில்,

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம்

 

அமைவிடம்:

சென்னையில் இருந்து 43 கிலோமீட்டர் தூரத் திலும், திருவள்ளூரில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம். சென்னை கோயம்பேடு மற்றும் ரெட் ஹில்ஸ் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதி உண்டு.

 

 

Share this:

Write a Reply or Comment

8 + fifteen =