August 20 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கண்ணங்குடி

  1. அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     லோகநாதப்பெருமாள், சியாமளமேனி பெருமாள்

உற்சவர்        :     தாமோதர நாராயணன், ஸ்ரீதேவி, பூதேவி

தாயார்          :     லோக நாயகி (உற்சவர்: அரவிந்த நாயகி)

தல விருட்சம்   :     மகிழ மரம்

தீர்த்தம்         :     சிரவண புஷ்கரிணி

ஊர்             :     திருக்கண்ணங்குடி

மாவட்டம்       :     நாகப்பட்டினம்

 

ஸ்தல வரலாறு:

வசிஷ்ட மகரிஷி எந்நேரமும் கிருஷ்ண பக்தியில் திளைத்திருந்தார், வெண்ணெயில் கிருஷ்ணர் விக்கிரகம் செய்து வழிபட்டு வந்தார். அவரது பக்தியால் வெண்ணெய் இளகாமல் இருந்தது. முனிவரின் பக்தியைக் கண்ட கிருஷ்ணர், சிறு குழந்தை வடிவம் கொண்டு வசிஷ்டரின் ஆசிரமம் சென்றார். அப்போது வசிஷ்டர் பூஜை செய்து வந்த வெண்ணெய் கிருஷ்ணரை அப்படியே எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். இதைக் கண்ட வசிஷ்டர், கிருஷ்ணரைப் பிடிக்க முயன்றார். சமயோசிதமாக கிருஷ்ணர் தப்பித்து, ஆசிரமத்தில் இருந்து காடுகளை நோக்கி ஓடினார். அவரைப் பிடிப்பதற்காக, வசிஷ்டரும் ஓடினார். அப்போது கிருஷ்ணாரண்யத்தில் (திருக்கண்ணங்குடி) மகிழ மரத்தடியில் அமர்ந்து நிறைய ரிஷிகள் தவம் செய்துக் கொண்டிருந்தனர். ஞான திருஷ்டியில் கண்ணன் தங்களை நோக்கி ஓடி வருவதை உணர்ந்த முனிவர்கள், அவரை பாசக்கயிற்றால் கட்டிப் போட்டனர். முனிவர்களின் பக்திக்கு கட்டுப்பட்ட கிருஷ்ணர், “வசிஷ்டர் , என்னைப் பிடிப்பதற்காக வருகிறார். அவர் வருவதற்குள், உங்களுக்கு என்ன வரம் வேண்டும்? கேட்டுப் பெறவும்” என்றார். தங்களுக்கு கிருஷ்ண தரிசனம் கிடைத்ததுபோல், இவ்விடத்துக்கு வருபவர்களுக்கும் கிருஷ்ண தரிசனம் கிடைக்க வேண்டும் என்று முனிவர்கள், கிருஷ்ணரிடன் வேண்டினர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கிருஷ்ணர் அங்கேயே நின்றார். ஓடி வந்த வசிஷ்டரும் அப்படியே கிருஷ்ணரின் பாதங்களைப் பற்றிக் கொண்டார். உடனே கோபுரங்களும், விமானங்களும் தோன்ற, பிரம்மதேவரும் தேவர்களும் வந்திருந்து பிரம்மோற்சவம் நடத்தினர். முனிவர்களின் (பக்தர்கள்) பக்திக்கு கட்டுண்டு நின்றதால், இத்தலம் கண்ணங்குடி ஆனது.

 

கோயில் சிறப்புகள்:

  • 108 வைணவ திவ்ய தேசங்களில் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணங்குடி லோகநாயகி தாயார் சமேத லோகநாதப் பெருமாள் கோயில் 18-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.

 

  • திருக்கண்ணங்குடி கோயில் பரந்த வளாகத்தில் 5 நிலை ராஜ கோபுரம், இரண்டு பிரகாரங்களுடன், பக்த உலா மண்டபம், சோபன மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் கொண்டு அமைந்துள்ளது.

 

  • இக்கோயிலில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் லோகநாதப் பெருமாள், சியாமளமேனிப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார்.

 

  • உற்சவர் தாமோதர பெருமாள் இடது கரத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு குழந்தைக் கண்ணனாக அருள்பாலிக்கிறார்.

 

  • தாயார் மூலவர் மற்றும் உற்சவர் முகமும் ஒரே போல் இருப்பது தனிச்சிறப்பு.

 

  • அனைத்து தலங்களிலும் கைகளை குவித்து வணங்கும் நிலையில் அருள்பாலிக்கும் கருடாழ்வார், இத்தலத்தில் (வைகுண்டத்தில் இருப்பதுபோல்), இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு அருள்பாலிக்கிறார்.

 

  • திவ்ய இத்தலத்துக்கு ‘காயா மகிழ், ஊறாக் கிணறு, உறங்கா புளி, தீரா வழக்கு’ ஆகிய அதிசயங்கலை இத்தலம் பெற்றுள்ளது.

 

  • சிரவண புஷ்கரிணி என்ற இத்தல தீர்த்தத்தின் பெயரைக் கேட்டாலே அனைத்து பாவங்களும் தீரும் என்பது ஐதீகம்.

 

  • பிரம்மதேவர், கௌதமர், மன்னர் உபரிசரவசு, வசிஷ்டர், பிருகு முனிவர், மாடரர், திருமங்கையாழ்வார் இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர்.

 

  • ஒருசமயம் திருமங்கையாழ்வார் சில பொருட்களுடன் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு செல்வதற்காக நாகப்பட்டினம் வழியாக வரும்போது, இத்தலம் வழியாகச் சென்றார். சிறிது நேரம் ஓய்வெடுத்துச் செல்லலாம் என்ற எண்ணத்தில் அப்பொருட்களை வயலில் உள்ள புளிய மரத்தடியில் புதைத்துவிட்டு, அவற்றை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாறு புளியமரத்திடம் கூறிவிட்டு, ஓய்வெடுத்தார். புளிய மரமும், திருமங்கையாழ்வாரின் சொல் கேட்டு, உறங்காமல் அப்பொருட்களை பாதுகாத்தது. அதனால் இந்த புளிய மரம் ‘உறங்காப் புளிய மரம்’ என்ற அழைக்கப்படுகிறது.

 

  • மறுநாள் காலையில் அந்த இடத்தை உழுவதற்கு, வயல் உரிமையாளர் வந்திருப்பதை அறிந்து, புளியமரம் ஆழ்வாரை எழுப்பியது. இதையடுத்து ஆழ்வாருக்கு நிலத்தின் உரிமையாளருக்கும் நிலப்பிரச்சினை ஏற்பட்டது. வாதம் முற்றியது, ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. நிலத்தின் உரிமையாளர் தனது உரிமைப் பட்டாவை சமர்ப்பித்தார். ஆழ்வாரும் தனக்கு பட்டா ஸ்ரீரங்கத்தில் இருப்பதாகக் கூறி, ஒரு நாள் அவகாசம் கேட்டார். ஊர் பஞ்சாயத்து அதற்கு சம்மதம் தெரிவித்தது. ஆனால் வழக்கு முடிவுறாமல் போனது. அன்று முதல் இன்றுவரை இந்த ஊரில் பதிவு செய்யப்படும் எந்த வழக்கும் முடிவு பெறாமல் (தீரா வழக்கு – தோலா வழக்கு) உள்ளது.

 

  • ஒருநாள் இந்த ஊரில் தங்குவதற்கு அவகாசம் கேட்ட ஆழ்வாருக்கு தாகம் எடுத்தது. ஊர் கிணற்றடியில் உள்ள பெண்களிடம் தண்ணீர் கேட்டபோது, அவர் மீது வழக்கு இருப்பதால் அவர்கள் தண்ணீர் தர மறுத்துவிட்டனர். வருத்தப்பட்ட ஆழ்வார், “இனி இந்த ஊர் கிணறுகளில் நீர் ஊறாமல் போகட்டும்” என்று கூறிவிட்டார். அதனால் இன்றுவரை இவ்வூர் கிணறுகளில் நீர் ஊறுவதில்லை. அப்படியே நீர் ஊறினாலும், உப்பு நீரே கிடைக்கிறது. கோயில் மடப்பள்ளி கிணற்றில் மட்டும் நன்னீர் கிடைக்கிறது.

 

  • திருமங்கையாழ்வார் மகிழ மரத்தடியில் பசியுடன் அமர்ந்திருந்தார். அப்போது கிருஷ்ணரே தீர்த்தமும் பிரசாதம் கொண்டு வந்து அவருக்கு அளித்தார். உணவை உண்டுவிட்டு, திரும்பிப் பார்த்தால் அங்கு யாரும் இல்லை. மகிழ்ச்சியாக இருந்த ஆழ்வார், மகிழ மரத்தைப் பார்த்து, என்றும் இளமை குன்றாமல் காயா மகிழ மரமாக இருக்க வாழ்த்தினார். அன்று இரவே அவரது பொருட்களுடன் ஸ்ரீரங்கம் சென்றார்.

 

  • “ஊராக் கிணறு, உறங்காபுளி, தேராவழக்கு திருக்கண்ணங்குடி’ என்று இத்தலத்திற்கு திவ்ய தேச சிறப்பு பழமொழி உண்டு.

 

  • பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. 1.திருக்கண்ணமங்கை. 2. திருக்கண்ணபுரம். 3.கபிஸ்தலம். 4.திருக்கோவிலூர். 5.திருக்கண்ணங்குடி

 

திருவிழா:

வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறும்.

முன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) நடைபெறும் திருநீறணி விழாவின்போது பெருமாளுக்கும் திருநீறு அணிவிக்கப்படும். உபரிசரவசு மன்னருக்காக இவ்விழா எடுக்கப்படுகிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 12 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:

அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில்,

திருக்கண்ணங்குடி-611 104

நாகப்பட்டினம் மாவட்டம்

 

போன்:    

+91- 4365-245 350

 

அமைவிடம்:

நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ள ஆழியூரில் இறங்கி தெற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தை அடையலாம். ஆழியூருக்கு பேருந்து வசதி நிறைய உண்டு.

Share this:

Write a Reply or Comment

3 × five =