அருள்மிகு சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில் வரலாறு
மூலவர் : சோமேஸ்வரர்
அம்மன் : சவுந்தரவல்லி
ஊர் : நங்கவள்ளி
மாவட்டம் : சேலம்
ஸ்தல வரலாறு:
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நங்கவள்ளி பகுதி பெரும் காடாக இருந்தது. அப்போது ஆந்திர மாநிலத்திலுள்ள மக்கள் தங்கள் பசுக்களுடன் இப்பகுதிக்கு பிழைக்க வந்தனர். அவர்களில் “தொட்டிநங்கை’ என்ற பெண்மணி ஒரு கூடையுடன் வந்து கொண்டிருந்தாள். கூடை கனத்தது.
இறக்கி பார்த்தபோது, உள்ளே ஒரு சாளக்கிரம வடிவ கல் இருந்தது. தனக்கு தெரியாமல் இந்தக்கல் எப்படி வந்தது என யோசித்தவள், அதை வெளியே எறிந்துவிட்டாள். சற்று தூரம் நடந்தபோது மீண்டும் கூடை கனத்தது. இறக்கி பார்த்த போது கல் கூடைக்குள் இருந்தது. ஞாபக மறதியாக மீண்டும் கூடையிலேயே வைத்திருக்கலாம் என்ற நினைப்பில் எறிந்துவிட்டு நடந்தாள். ஆனால் மீண்டும் கூடை கனக்கவே, பயந்துபோன அவள் கூடையோடு அதை ஒரு குளத்தில் எறிந்துவிட்டாள். அதன்பிறகு, அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கு அருள் வந்து, தூக்கி எறியப்பட்ட அந்தக்கல் லட்சுமியின் வடிவத்தைக் கொண்டது என கூறினாள். ஊர்மக்கள் அந்த கல்லைத் தேடி எடுத்து பார்த்தபோது, பாம்பு புற்றுடன் லட்சுமிவடிவ கல்லை கண்டனர். அதன்பிறகு கீற்று ஓலைகளால் பந்தல் அமைத்து வழிபட்டு வந்தனர். விஜயநகர மன்னர்கள் இந்த கோயிலை விருத்தி செய்தனர். பெரிய கோயிலாக கட்டப்பட்டது.
கோயில் சிறப்புகள்:
- சிவாலயத்தில் நரசிம்மர் சுயம்புவாக அமைந்துள்ளது இங்கு தனிசிறப்பு.
- மூலஸ்தானத்தில் உள்ள மூலவர் சிலைக்கு அக்காலத்தில் பால் அபிஷேகம் செய்து கற்பூர தீபம் காட்டி, அடுத்து தயிர் அபிஷேகம் செய்வதற்குள் ஒரு அடி உயரத்திற்கு சாமி சிலைகளை புற்று மண் மூடி இருக்குமாம் ! புற்று மண்ணை அகற்றி விட்டு மீண்டும் அடுத்த அபிஷேகம் செய்வார்களாம். அதற்குள் சிலைகளைச் சுற்றி புற்றுமண் மூடிக்கொண்டே வருமாம். புற்றில் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் புற்று நிரம்புவதில்லை. தற்போது, மூலஸ்தானத்தில் சாமிக்குப் பக்கத்தில் உள்ள பாம்புப் புற்று, தட்டு வைத்து மூடி வைக்கப்பட்டு இருக்கிறது.
- இத்தல விநாயகர் வன்னி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
- இக்கோவிலில் 75 அடி உயரத்தில் ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. ராஜகோபுர வாயிலில் நுழைந்து சென்றால் இருபக்கமும் பெரியதிருவடி, சிறிய திருவடிகளான கருடாழ்வார், அனுமன் சிலைகள் உள்ளன. இதையடுத்து தெற்குப் பக்கமாக அரச மரத்து விநாயகர் உள்ளார். இதன் பக்கத்தில் சோமேஸ்வரர் ஆலய வன்னி மரத்து விநாயகர். இதைத் தொடர்ந்து நாகர் சிலைகள் வரிசையாகக் காட்சி தருகின்றன.
- கோவிலைச் சுற்றி கஜலட்சுமி, விஷ்வக்சேனர், சன்னதியும், இதனருகில் ஆண்டாள் சன்னதியும் உள்ளன. பக்கத்தில் சவுந்தரவல்லி சமேத சோமேஸ்வரர் ஆலயம். இதை அடுத்து நாகர் புற்றும், உள்ளன. வடக்குப் பக்கமாக விஷ்ணு துர்க்கை சன்னதியும், வடமேற்கில் வாகனங்களின் மண்டபமும், வடக்கில் சொர்க்க வாசல், வடக்கு மற்றும் தெற்கில் அஷ்டலட்சுமி, துளசிமடம் உள்ளது. உள்ளே சென்றால் கருடாழ்வார் சன்னதி உள்ளது.
திருவிழா:
பங்குனி மாதத்தில் 19 நாள் பிரம்மோற்சவம் நடக்கும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 1 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில்,
நங்கவள்ளி,
சேலம் மாவட்டம்.
அமைவிடம்:
சேலத்தில் இருந்து 36 கி.மீ. தொலைவில் நங்கவள்ளி உள்ளது. ஈரோடு, பழநி, கோவை, மைசூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் மேட்டூர் வழியாகவும், பெங்களூர், ஓசூர், திருவண்ணாமலை, தர்மபுரியைச் சேர்ந்தவர்கள் மேச்சேரி வழியாகவும், தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல் பகுதியை சேர்ந்தவர்கள் சேலம் வழியாகவும் இங்கு வரலாம்.