August 07 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவிடந்தை

  1. அருள்மிகு நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     நித்யகல்யாணப்பெருமாள், லட்சுமிவராகப்பெருமாள்

உற்சவர்        :     நித்யகல்யாணப்பெருமாள்

தாயார்          :     கோமளவல்லித்தாயார்

தல விருட்சம்   :     புன்னை, ஆனை

தீர்த்தம்         :     வராஹ தீர்த்தம், கல்யாண தீர்த்தம்

புராண பெயர்    :     வராகபுரி, திருவிடவெந்தை

ஊர்             :     திருவிடந்தை

மாவட்டம்       :    செங்கல்பட்டு

 

ஸ்தல வரலாறு:

திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அரசனின் மகன், பலி ஆட்சி புரிந்து வந்தார். மாலி, மால்யவான், சுமாலி ஆகிய அரக்கர்கள், பலியிடம் வந்து, தேவர்களை வீழ்த்துவதற்கு உதவி கேட்டனர். இச்செயலுக்கு உடன்பட பலி மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து, தேவர்களுடன் தனியாகப் போரிட்ட அரக்கர்கள் தோற்றனர். மீண்டும் பலியின் உதவியை அரக்கர்கள் நாடியதும், அவர்களுக்கு உதவி புரிய பலி சம்மதித்தார். அதன்படி தேவர்களுடன் போரிட்டு, அரக்கர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தார் பலி. தேவர்களை வீழ்த்தியதால், பலிக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. தோஷத்தில் இருந்து விடுபட, பலி, திருமாலை நோக்கி இத்தலத்தில் தவம் புரிந்தார். பலியின் தவத்தில் மகிழ்ந்த திருமால், வராஹ அவதாரத்தில் அவருக்கு காட்சி கொடுத்து, தோஷம் போக்கினார்.

 

ஒரு சமயம் சரஸ்வதி ஆற்றங்கரையில் சம்புத் தீவில், குனி முனிவரும் அவரது மகளும், சொர்க்கம் செல்வதற்காக தவம் மேற்கொண்டனர். இதில் முனிவர் மட்டும் சொர்க்கம் புகுந்தார். திருமணம் ஆகாததால் அப்பெண்ணால் சொர்க்கம் புக முடியாது என்று கூறிய நாரத முனிவர், அங்கிருந்த முனிவர்களிடம் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார். காலவரிஷி என்ற முனிவர் அப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்தன. பெண்களின் தாய் சிறிது காலத்தில் இறைவனடி சேர்ந்ததால், அவர்களை வளர்க்க காலவரிஷி மிகவும் சிரமப்பட்டார். கால ஓட்டத்தில், பெண்கள் வளர்ந்து, திருமண வயதை எட்டிவிட்ட நிலையில், தனது பெண்களை ஏற்றுக் கொள்ளும்படி திருமாலை வேண்டினார் காலவரிஷி. ஆனால் திருமால் வரவில்லை.

ஒருநாள் திவ்ய தேச யாத்திரை செல்ல உள்ளதாகக் கூறி ஒரு பிரம்மச்சாரி காலவரிஷியின் குடிலுக்கு வந்தார். வந்த இளைஞர், திருமாலைப் போன்று தெய்வீக அழகு நிறைந்தவராக இருந்ததால், அவருக்கே தனது 360 பெண்களையும் மணமுடித்துக் கொடுக்க முடிவு செய்தார் காலவரிஷி. தனது எண்ணத்தை இளைஞரிடம் காலவரிஷி தெரிவித்ததும், இளைஞரும் தினம் ஒரு பெண்ணை மணந்து கொண்டார். கடைசி நாளில் தனது சுயரூபம் காட்டினார் இளைஞர். அவர்தான் வராஹமூர்த்தி வடிவில் வந்து அருள்பாலித்த நாராயணன். 360 பெண்களையும் ஒருவராக்கி, தன் இடப்பாகத்தில் வைத்துக் கொண்டு சேவை சாதித்தார். திருமகளை தன் இடப்பாகத்தில் ஏற்றுக் கொண்ட பெருமாள் என்பதால் இவ்வூர் திருவிடவெந்தை என்றும் பின்னர் திருவிடந்தை என்றும் அழைக்கப்படுகிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • 108 வைணவ திவ்ய தேசங்களில், செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாள் கோயில், 62-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.

 

  • 108 திவ்ய தேசங்களில் இத்தலத்தில் மட்டுமே வருடத்தின் அனைத்து நாட்களிலும் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.

 

  • .திருவிடவெந்தை கருவறையில் வராகர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்தோடு சேவை சாதிக்கிறார். இடது மடியில் தாயாரை அமர்த்தி அவரின் காதருகே சரம ஸ்லோகம் உபதேசிக்கும் கோலம்.

 

  • திருமங்கையாழ்வார், மணவாள மாமுனிகள் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

 

  • 360 பெண்களையும் ஒரே பெண்ணாகச் செய்தமையால், இத்தல தாயாருக்கு அகிலவல்லி நாச்சியார் என்ற பெயர் ஏற்பட்டது. 360 கன்னியரில் முதல் பெண் கோமளவல்லி என்ற பெயரைத் தாங்கியிருந்ததால், தனிசந்நிதியில் அருள்பாலிக்கும் தாயார் கோமளவல்லி என்று அழைக்கப்படுகிறார். பெருமாள் மட்டுமே நாயகர், நாம் அனைவரும் நாயகி என்பதே இக்கோயிலின் தத்துவம்.

 

  • இத்தலத்தில் உள்ள பெருமாள் தனது ஒரு திருவடியை பூமியிலும், மற்றொன்றை ஆதிசேஷன் மற்றும் அவரது மனைவி மீது வைத்துக் கொண்டும், அகிலவல்லித் தாயாரை இடது தொடையில் தாங்கிக் கொண்டும் வராக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 

  • கல்யாண விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் மூலவர் நித்ய கல்யாணப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

 

  • மூலவரின் சந்நிதிக்கு வலதுபுறத்தில் கோமளவல்லித் தாயார் சந்நிதியும், இடது புறத்தில் ஆண்டாள் சந்நிதியும் அமைந்துள்ளன. திருவரங்கப் பெருமாளுக்கும் தனி சந்நிதி உள்ளது.

 

  • நித்யகல்யாண பெருமாளாக அருள்பாலிக்கும் இத்தல பெருமாளின் தாடையில் ஒரு பொட்டு இருக்கிறது. திருஷ்டிப்பொட்டு போல இயற்கையாக அமைந்துள்ளது சிறப்பு.

 

திருவிழா:

 

தினந்தோறும் இத்தல பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு நித்ய கல்யாணபெருமாள் திருக்கோயில்,

திருவிடந்தை- 603112

புதுச்சேரி சென்னை கிழக்கு கடற்கரை சாலை.

காஞ்சிபுரம் மாவட்டம்

 

போன்:    

+91 -44- 2747 2235,98405 99310, 98409 36927

 

அமைவிடம்:

சென்னையில் இருந்து புதுச்சேரி வரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், கோவளம் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கிமீ தொலைவில் திருவிடந்தை எனும் கடற்கரை கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

Share this:

Write a Reply or Comment

18 − nine =