அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு
முருகப் பெருமான் பிரணவ மந்திரத்தின் பொருளை ஓமாம்புலியூரில் அம்பாளுக்கு சிவபெருமான் உபதேசம் செய்யும் போது கேட்டுத் தெரிந்து கொண்ட தலம் இது.
மூலவர் : பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் (துயர்தீர்த்த நாதர்)
அம்மன் : பூங்கொடிநாயகி, புஷ்பலதாம்பிகை
தல விருட்சம் : இலந்தை
தீர்த்தம் : கொள்ளிடம், கவுரி
புராண பெயர் : உமாப்புலியூர், திருவோமாம் புலியூர்
ஊர் : ஓமாம்புலியூர்
மாவட்டம் : கடலூர்
ஸ்தல வரலாறு:
உமாதேவியார் ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை அறிந்து கொள்வதற்காக சிவனிடம் உபதேசம் கேட்டார். சிவன் அதற்குரிய விளக்கத்தை சொல்லிக் கொண்டிருக் கும்போது அவரது கவனம் திசை திரும்பவே அவளை மானிடப் பிறப்பு எடுக்கும்படி சிவன் தண்டனை கொடுத்து விட்டார். அதன்படி பார்வதிதேவி பூமிக்கு வந்து ஓமாப்புலியூரில் தங்கியிருந்து இத்தலத்து சரஸ்வதி தேவியை வணங்கி சிவனை நினைத்து இலந்தை மரத்தின் அடியில் கடுந்தவம் மேற்கொண்டாள்.
அம்பாளின் தவத்தினை மெச்சி இறைவன் தேவி விரும்பியபடி இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி வடிவில் உமாதேவிக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்ததார். உபதேசம் செய்யும்போது இடையூறு வரக்கூடாது என்பதற்காக நந்திகேஸ்வரரை வாசலில் காவலுக்கு வைக்கிறார். அப்போது முருகப் பெருமான் அங்குவர நந்தி தடுக்கிறார். முருகப் பெருமான் வண்டு உருவம் எடுத்து அபிஷேக தீர்த்தம் வரும் கோமுகம் வழியாக உள்ளே சென்று அம்பாள் தலையில் சூடியிருக்கும் பூவில் உட்கார்ந்து குரு தட்சிணாமூர்த்தியாக இறைவன் அம்பாளுக்கு உபதேசம் செய்வதைக் கேட்டுக் கொள்கிறார். (சுவாமிமலையில் முருகப் பெருமான் தந்தைக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்தது ஓமாம்புலியூரில் அம்பாளுக்கு உபதேசம் செய்யும் போது கேட்டுத் தெரிந்து கொண்டதால் தான்).
சிவன் தட்சிணாமூர்த்தியாக உபதேசித்ததால் இது குருமூர்த்தி ஸ்தலமாக கருதப்படுகிறது. குருவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்தலத்தில் மற்ற நவக்கிரகங்கள் கிடையாது. குரு சன்னதி பொதுவாக கோயில் பிரகாரத்தில் தெற்கு நோக்கி இருக்கும். ஆனால் இந்த தலத்தில் சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் மத்தியில் மகாமண்டபத்தில் தட்சிணாமூர்த்தி அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
கோயில் சிறப்புகள்:
- சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 31 வது தேவாரத்தலம் ஓமாம்புலியூர்.
- மூலவர் சுயம்பு மூர்த்தியாக சதுர பீடத்தில் உயர்ந்த பாணத்துடன் காட்சித் தருகிறார்.
- இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து உமாதேவிக்கு பிரணவப் பொருளை உபதேசித்தத் தலம். ஓமம் – வேள்வி, வேள்விச்சிறப்புடைய ஊர். பிரணவப் பொருளுபதேசம் நடந்த தலமாதலின் ஓம்-ஆம்-புலியூர் = ஓமாம்புலியூர் என்றாயிற்று என்றும் கூறுவர்.
- திருநாவுக்கரசர் தனது பாடலில் இவ்வூரில் எப்போதும் ஹோமங்கள் நடந்தது என்றும் ஹோம புகையால் சூழப்பட்டதால் இவ்வூர் ஓமாப்புலியூர் என்று பெயர் பெற்றதாக கூறுகிறார்.
- உமாதேவி அருள் பெற்ற தலம் என்பதால் உமாப்புலியூர் என்ற பெயர் ஓமாப்புலியூர் என மாறிவிட்டதாகவும் செய்திகள் உள்ளது.
- காவிரியின் வடகரையில் 63 சிவ ஸ்தலங்கள் உள்ளன இவற்றில் தட்சிணாமூர்த்திக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அமையப்பெற்ற 31 வது ஸ்தலம் ஓமாப்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோயிலாகும்.
- ஆலய முகப்பு வாயிலுக்கு எதிரிலுள்ள கெளரி தீர்த்தத்தின் அக்கரையில் வடதளி என்று ஓர் சிறிய ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் இறைவன் பெயர் நாகவல்லி சமேத வடதளீஸ்வரர்.
- கிழக்கு நோக்கிய இக்கோயில் மதிற்சுவருடன் கூடிய ஒரு வாயிலுடன் அமைந்துள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடத்தையும் நந்தி மண்டபத்தையும் காணலாம். அடுத்துள்ள ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது.
- பிராகாரத்தில் ஆறுமுகப் பெருமான் சந்நிதி உள்ளது. சுவாமி சந்நிதியில் ஒருபுறம் சலந்தரனை அழிக்கத் திருமாலுக்குச் சக்கரம் வழங்கிய சிற்பமும் மறுபுறம் ஐந்து புலியூர்களில் வழிபடப்பட்ட ஐந்து சிவலிங்கங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
- இறைவன் சந்நிதியில் வலதுபுறம தெற்கு நோக்கி உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி உயர்ந்த பீடத்தில் சிலாரூபத்தில் காட்சி தருகின்றார்.
- ஓமாம்புலியூர் தலத்தில் சிவாகம ரீதியாக கருவறை தெற்கு கோஷ்டத்தில் ஒரு தட்சிணாமூர்த்தியும் இறைவன் சந்நிதிக்கும் அம்பாஈள் சந்நிதிக்கும் இடையில் மகாமண்டபத்தில் தனி மூலஸ்தானத்தில் ஞானகுருவாக இன்னொரு தட்சிணாமூர்த்தியும் அருளுகின்றனர்.
- குருவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்தலத்தில் மற்ற நவக்கிரகங்கள் கிடையாது என்பதும் குறிப்படத்தக்க அம்சமாகும்.
- புலிக்கால் முனிவரால் (வியாக்ரபாதர்) பூசிக்கப்பெற்றதால் புலியூர் என்றும், வேத ஓமங்களில் (வேள்விகளில்) சிறப்புற்றதால் ஓமம் புலியூர் எனப் பெயர் பெற்றது.
- தில்லையில் நடராஜ பெருமானின் திருநடனத்தை காணும் முன்பு வியாக்ரபாத முனிவர் ஓமாப்புலியூர் வந்தார். சிதம்பரத்தில் நடராஜரின் திருநடனத்தைக் காண தனக்கு அருள்தர வேண்டும் என வேண்டினார். வியாக்ரபாதரால் பூஜிக்கப்பட்டதால் இவ்வூர் இறைவன் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டார். வியாக்ர பாதருக்குக் காட்சி தந்த நடராசரின் வடிவம் சிலாரூபமாக கருவறை கோஷ்டத்தில் உள்ளது.
- வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்) அம்பிகை வழிபட்டுள்ளனர்.
- திருஞானசம்பந்தர் பாடலில் ஓமமாம்புலியூர் என்று குறிப்பிடுகிறார். திருநாவுக்கரசர் தனது பாடலில் ஓமாம்புலியூர் என்று குறிப்பிடுகிறார். இருவரும் வடதளி என்றும் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
- பஞ்ச புலியூர் தலங்களில் இத்தலமும் ஒன்று. பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), கானாட்டம்புலியூர், எருக்கத்தம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர். இவற்றில் கானாட்டம்புலியூர், இத்திருத்தலத்திலிருந்து அருகில் உள்ளது. திரு எருக்கத்தம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர் ஆகிய இரண்டும் நடுநாட்டுத் தலங்கள். திருப் பெரும்பற்றப்புலியூர், திரு ஓமாம்புலியூர், திருக் கானாட்டம்புலியூர் ஆகிய மூன்றும் காவிரி வடகரைத் தலம். இந்த ஐந்து தலங்களிலும் வியாக்ரபாத முனிவர் சிவனை வழிபட்டுள்ளார்.
- வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “விண் இடை வாம்ஆம் புலியூர் மலர்ச் சோலை சூழ்ந்து இலங்கும் ஓமாம் புலியூர் வாழ் உத்தமமே” என்று போற்றி உள்ளார்.
திருவிழா:
இங்கு குருபெயர்ச்சி விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தப்படுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
முகவரி:
அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்,
ஓமாம்புலியூர்- 608 306.
கடலூர் மாவட்டம்.
போன்:
+91- 4144-264 845
அமைவிடம்:
சிதம்பரம் மற்றும் காட்டுமன் னார்கோயிலில் இருந்து ஓமாப்புலியூருக்கு பஸ் உள்ளது. சென்னையிலிருந்து எய்யலுர் என்ற ஊருக்கு செல்லும் பஸ்கள் இவ்வூர் வழியே செல்லும்.