அருள்மிகு கோலவிழி அம்மன் திருக்கோயில் வரலாறு
மூலவர் : கோலவிழி அம்மன்
ஊர் : வானமாதேவி
மாவட்டம் : கடலூர்
ஸ்தல வரலாறு:
வானமாதேவி என்ற இத்திருத்தலம் சமயக் குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு சுவாமிகளால் கூற்றாயினவாறு என்ற பதிகம் பாடி இறையருளால் சூலைநோய் தவிர்த்து சமணத்திலிருந்து சைவ சமயத்தைத் தழுவிய வரலாறு நடைபெற்ற திருவதிகை வீரட்டத்திற்குக் கிழக்கேயும், திருமங்கையாழ்வாரால் மங்களாஸாசனம் செய்யப் பெற்றதும் வேதாந்த தேசிகரால் பாடப்பெற்றதுமான 108 வைணவ திருப்பதிகளில் ஒன்றான திருவந்திபுரத்திற்கும், திருஞானசம்பந்தராலும், அருணகிரிநாதராலும் பாடப்பெற்ற திருமாணிகுழி சிவதலத்திற்கு மேற்கேயும் அவுஷதகிரி தொடர்ச்சிக்கு வடக்கேயும் கங்கையில் சிறந்த கெடில நதியின் (கருடநதி) தெற்கேயும் மற்றும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழநாட்டின் பொற்காலம் எனப்போற்றுமாறு ஆட்சி செய்தவனும் திருமுறை கண்ட சோழனும், தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியவனுமாகிய இராஜராஜ சோழனின் தாயார் வானவன்மாதேவியின் (வானமாதேவி) பெயரால் அமைந்த திருத்தலமாகும்.
தமிழகத்திலே சமணர்கள் அதிகமாக வாழ்ந்த காலத்தில், இராஜராஜ சோழனின் தாயார் வானவன்மாதேவி அவர்கள் சமணர்களுக்கு தானமாக (இறையீலி நிலமாக) இந்த ஊருக்கு அருகில் இருந்த நிலப் பகுதியைக் கொடுத்ததால், அந்தப் பகுதியின் பெயர் அவர்களின் பெயராலேயே வானவன்மாதேவி என்று அழைக்கப்பட்டு, இன்று வானமாதேவியாக மருவி நிற்கிறது. சமணர்கள் இந்த ஊரில் வாழ்ந்ததற்குச் சான்றாக, தியான நிலையில் அமர்ந்த ஒரு பெரிய மகாவீரருடைய அழகுவாய்ந்த கற்சிலை 1998 ஆம் ஆண்டு வரை இங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பகுதியை ஆண்ட சந்திரசேகர நயினார் என்ற ஒரு சமணர், பல சமூகங்களையும், சைவ சமயத்தையும் சார்ந்த பொது மக்களை எல்லாம், இந்த ஊரில் உள்ள விளை நிலங்களில் எல்லாம் ஓர் இரவுக்குள் நடவு நட்டு மறுநாள் பொழுதுக்குள் அறுவடை செய்து தானியங்களைக் கொடுக்கா விட்டால், அனைவரும் சமண சமயத்தைத் தழுவ வேண்டும் என்று கட்டளையிட்டார். இதை எப்படி நிறைவேற்றுவது என்று திகைத்த பொது மக்கள் அனைவரும் கோலவிழி அம்மனிடம் சென்று மனமுருகி தங்களைக் காப்பாற்ற வேண்டுமென வேண்டினர். அவர்களின் வேண்டுதலை செவிமடுத்த கோலவிழி அம்மன், செல்லியம்மன் மற்றும் பூஞ்சோலையம்மன் என்ற இரு தேவதைகளைப் பார்த்துக் கட்டளையிட்டதன்பேரில், மேற்படி இரு தேவதைகளும் ஓர் இரவுக்குள் அத்துணை விளைநிலங்களிலும் நடவு நட்டு கோலவிழி அம்மன் அருளால் மறுநாள் பொழுதுக்குள் விளைவித்து அறுவடை செய்து கொடுத்தனர். இதைக் கேள்வியுற்ற சந்திரசேகர நயினார், கோலவிழி அம்மனின் சக்தியை முழுதாகப் புரிந்துகொண்டு, மனந்திருந்தி, பொதுமக்கள் அனைவரையும் அவரவர்கள் சமயத்திலே இருக்க அனுமதித்து, கோலவிழி அம்மனை வணங்கி நின்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
இதற்குச் சான்றாக இப்பொழுதும் இந்தத் திருக்கோவிலையட்டி சுமார் 800 ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது. அந்த நிலப்பரப்பின் முடிவில் அமைந்துள்ள அடுத்த கிராமமான திருமாணிக்குழியில் செல்லியம்மன் ஆலயமும் அமைந்துள்ளது. திருவிழாக் காலங்களில் நடைபெறும் தெருக்கூத்துகளிலும் இந்த வரலாறு செல்லியம்மன் நாடகமாக நடைபெற்று வருகிறது. இந்த ஊரைச் சார்ந்த சமணர்கள் புலம்பெயர்ந்து விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றும் வசித்து வருகின்றனர். அவர்களுக்கும் இந்தக் காளி குலதெய்வமாக விளங்குகிறாள்.
கோயில் சிறப்புகள்:
- இந்த ஊரிலே, எங்குமே காண முடியாத அளவுக்கு 6 அடி உயரத்திற்கு மேல், சங்கு சக்கராயுதங்களோடு எட்டு திருக்கரங்களுடன் விஷ்ணு துர்க்கையாக கோலவிழி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றாள்.
- திருவக்கரையில் கோயில் கொண்ட வக்ரகாளி அம்மனை விடவும், தில்லையில் கோயில் கொண்டுள்ள தில்லை எல்லை காளியைவிடவும் உயரத்திலும் உருவத்திலும் பெரியவள் இந்த கோலவிழி அம்மன்.
- வானமாதேவி என்கிற இந்த ஊரின் முந்தைய பெயர் திருமலைராயன்பேட்டை என்பதாகும்.
- அண்மைக் காலத்தில் 140 ஆண்டுகாலம் வாழ்ந்து மறைந்த சித்தர் ஸ்ரீ அப்பா பைத்தியம் சுவாமிகள் இந்தக் காளியின் பெருமையை பலமுறை சொன்னதோடு மட்டுமல்லாமல், இந்தக் கோயிலிலேயே 30 ஆண்டுகளுக்கு முன் இரண்டு ஆண்டுகள் தங்கி தவமிருந்தார். தனக்குப் பெரும் சக்தியை இந்தக் காளி அருளியதாக இந்த ஊரில் வாழ்ந்த வேங்கடசாமி என்ற நிலகிழாரிடம் அவர் கூறியிருக்கிறார். அதன் பிறகு அவர் கடலூர், பாண்டிச்சேரி மற்றும் சென்னையில் வசித்து சேலத்திலே சித்தியானார்.
- அவருக்கும்முன்னே இந்தக் கோயிலின் முன்பு எண்கோண வடிவில் ஒரு கருங்கல் யந்திரமும், வேப்பமரமும் நட்டு அதனடியில் ஒரு சித்தர் தவம் செய்து வந்ததாக இந்த ஊரைச் சார்ந்த பெரியோர்கள் கூறுகின்றனர். அந்த வேப்பமரம் காலங்காலமாக வளர்ந்து, தன் அருகேயிருந்த கருங்கல்லால் ஆன யந்திரத்தை தன் வேரால் முழுவதும் மறைத்து நிற்கின்ற காட்சியை இன்றும் அந்த ஊரிலே காணலாம்.
- காளி கோயிலில் பைரவர் சன்னதி அமைந்துள்ளதும் சிறப்பு.
- இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
திருவிழா:
ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கோலவிழி அம்மன் திருக்கோயில்
வானமாதேவி – 607301
கடலூர்.
போன்:
+91 94421 75842, 94433 75843
அமைவிடம்:
கடலூரிலிருந்து (13 கி.மீ.)பாலூர் வழியாக பண்ருட்டி செல்லும் வழியில் கோயில் அமைந்துள்ளது.