June 25 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் சிறுவாச்சூர்

  1. அருள்மிகு சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்                :     மதுரகாளி

தல விருட்சம்   :     மருதமரம்

தீர்த்தம்                :     திருக்குளம்

ஊர்                         :     சிறுவாச்சூர்

மாவட்டம்          :     பெரம்பலூர்

 

ஸ்தல வரலாறு:

 

வேதங்களில் பழைமையான வேதம் ரிக் வேதம். ரிக் வேதத்தில், ‘அதிதி’ என்கிற பெண் தெய்வம் பற்றிய குறிப்பு வருகிறது. அதிதியை தேவர்களின் தாய் என்கின்றனர். அனைத்திற்கும் காரண கர்த்தாவாக நிகழ்ந்து ஆட்டுவிப்பவளும் அவள்தான். திதி குறிப்பிடாமல் தோன்றி இந்தப் பிரபஞ்சத்தைக் காத்தருள்பவள் என்று பொருள். அதிதி என்றால் விருந்தினர் என்றும் பொருள். அன்னை காளி அதிதியாய், ஒரு கிராமத்துக்கு வந்து, அந்த ஊருக்கு அனுகிரகம் செய்து அங்கேயே கோயில்கொண்டு அருள்புரிகிற அற்புதத் தலம் சிறுவாச்சூர். இங்குக் கோயில் கொண்டு அருள்புரிபவள் மதுரகாளியம்மன். சிறுவாச்சூர் கிராமத்தில் செல்லியம்மன் என்னும் அம்மன் கோயில்கொண்டிருந்தாள். அங்கே வாழ்ந்துவந்த பில்லிக்காரன் என்கிற மந்திரவாதி அதர்வண வேதம் முழுமையும் அறிந்து தேவதைகளை ஆட்டுவிக்கும் வல்லமை பெற்றான். மக்களைத் துன்புறுத்தி வந்த அவன், செல்லியம்மனையும் தனக்கு ஏவல் செய்யும்படிப் பணித்தான். அவனின் அக்கிரமம் ஒரு எல்லையைத் தாண்டவே, அவனை அழிக்க அங்கு அன்னைக் காளி அதிதியாய் வந்தாள். ஒருநாள் இரவு அந்த கிராமத்தில் தங்க இடம் வேண்டி மக்களிடம் கேட்டாள். அவர்களோ மந்திரவாதிக்குப் பயந்து இடம் தரமறுத்தனர். காளியும் செல்லியம்மனின் ஆலயத்துக்குச் சென்று தங்க இடம் கேட்டாள்.

செல்லியம்மனும், ‘நாங்களே, மந்திரவாதியால் துன்புறுகிறோம். நீயும் அவனிடம் மாட்டிக்கொள்ள வேண்டாம்’ என்று சொல்லி மறுத்தாள். ‘மகிஷன் போன்ற அசுர சக்திகளையே அழித்தொழித்த காளிக்கு இந்த மந்திரவாதி ஒரு எதிரியே இல்லை’ என்பதால் காளியம்மன் சிரித்தபடியே, ‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சொல்லி அந்தக் கோயிலிலேயே தங்கினாள். இரவு ஆங்காரமாய் அங்கு வந்த மந்திரவாதி காளியம்மனைக் கண்டதும் கடும் ஆத்திரம் அடைந்தான். காளியோ தன் கைவசம் இருந்த சூலத்தை அவன் மேல் வீசினாள். அடுத்த கணம் சூலம் அவன் உடலைத் துளைத்தது. மந்தரவாதி உயிர் இழந்தான். மந்திரவாதி மறைந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் ஊராரும் செல்லியம்மனும் மகிழ்ந்தனர். காளிக்கு நன்றிகூறி வணங்கினர்.

தன்னை அந்த மந்திரவாதியிடம் இருந்து விடுவித்ததற்காக செல்லியம்மனும் காளிக்கு நன்றி கூறி, தான் தன் அண்ணன் வாழும் மலைக்கே போவதாகவும், காளியம்மனே அந்த ஆலயத்தில் குடிகொள்ளுமாறும் வேண்டிக்கொண்டாள். அதன்படியே காளியம்மன் அங்குக் கோயில்கொண்டாள்.

 

கோயில் சிறப்புகள்:

  • மதுரைக் காளியம்மன் என்ற திருப்பெயரே பின்னாட்களில் மருவி மதுரகாளியம்மனாக வந்ததாகக் கூறுகிறார்கள்.

 

  • அம்மன் சுமார் 4 அடி உயரமாக இருக்கிறார். வடக்கு நோக்கிய சந்நிதியில் அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளாள்.நான்கு திருக்கரங்கள் இவற்றில் உடுக்கை, பாசம், சூலம், அட்யபாத்திரம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள்.

 

  • இடது திருவடியை மடித்த நிலையில் வைத்து வலது திருவடியை சிம்மத்தின் மீது ஊன்றி அமர்ந்த திருக்கோலம். திருவடியில் அரக்கன் இல்லாததால் அழிக்கும் தொழிலில் காட்சியில்லை. அருளும் நிலையிலேயே காட்சி.

 

  • சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சக்கரம் இங்குள்ளது. வாரத்தின் திங்கள், வெள்ளி ஆகிய இருநாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது. திருவிழா மற்றும் சில குறிப்பிட்ட பண்டிகைகளின் போது மட்டும் பிற நாட்களிலும் ஆலயம் திறக்கப்படுகிறது. மற்ற நாட்களில் கோயில் திறக்கப்பட மாட்டாது.

 

  • மதுர காளியை மதுரைக் காளி என்றும் சொல்கிறார்கள். மதுரை அழித்த அன்னை காளியின் வடிவம் கண்ணகி. மதுரையை அழித்தபின்பு அவள் கேரளா சென்று அங்கிருந்து விண்ணகம் சென்றாள் என்பது இலக்கியச் செய்தி. ஆனால், மதுரையை எரித்த பின்பு அன்னை கண்ணகி, இந்த ஊருக்கு வந்து தங்கி அவர்களின் தெய்வமானார் என்கின்றனர் இந்த ஊர்க்காரர்கள்.

 

  • குலோத்துங்கச் சோழனால் திருப்பணி செய்யப்பட்ட இந்த ஆலயம், பிற ஆலயங்களில் இருந்து மாறுபட்ட சில வழக்கங்களைக் கொண்டது. ஒரு வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்களில் மட்டுமே இந்த ஆலயம் திறந்திருக்கும்.

 

  • இந்த ஆலயத்துக்குள் விநாயகரைத் தவிரவேறு தெய்வங்கள் இல்லை.

 

  • இங்குப் பிரதான நைவேத்தியம் மாவிளக்கு. மாவிளக்கு ஏற்றி வழிபட வேண்டிய எண்ணம் ஈடேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆனால் மற்ற ஆலயங்களைப் போல மாவாகச் செய்து கொண்டு சென்று மாவிளக்கு இட இங்கு அனுமதியில்லை. அரிசியாகக் கொண்டு சென்று அங்கே இருக்கும் உரலில் இட்டு இடித்து அங்கேயே மாவைத் தயார் செய்து மாவிளக்கிடவேண்டும்.

 

  • பூஜையின் போது நடைபெறும் முதல் தீபாராதனை, செல்லியம்மன் உறையும் மலை நோக்கியே காட்டப்படும். பின்பே மதுரகாளியம்மனுக்குக் காட்டப்படும்.

 

  • மதுரகாளியம்மன் கோயிலுக்கு நேர் வடக்காகச் சோலை முத்தையா ஆலயம் அமைந்துள்ளது. இவரே செல்லியம்மன் மற்றும் மதுரகாளியம்மனின் காவல் தெய்வமாக விளங்குபவர். இவர் அருகிலேயே அகோர வீரபத்திரர் நிற்கிறார்.

 

திருவிழா: 

ஆண்டுதோறும் சித்திரைத் திங்களில் அம்மாவாசைக்கு பின்வரும் முதல் செவ்வாயன்று பூச்சொரிதல் தொடங்கும், அதற்கடுத்த செவ்வாய் காப்பு கட்டி 13 நாட்கள் பெருந்திருவிழா சிறப்புடன் நடைபெறுகிறது.

 

திறக்கும் நேரம்:

*தரிசன நாட்கள் : வாரத்தில் திங்கள், வெள்ளி ஆகிய இருநாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது. திருவிழா மற்றும் சில குறிப்பிட்ட பண்டிகைகளின் போது மட்டும் பிற நாட்களிலும் ஆலயம் திறக்கப்படுகிறது.காலை 8 மணிக்கு சந்நிதி திறக்கப்படும்.காலை 11 மணிக்கு மேல் அம்மனுக்கு அபிசேகம் நடைபெறும். பிற்பாடு தங்கக் கவசம் அணிவிக்கப்படும். இரவு 8 மணி வரை தொடர்ந்து தரிசனம் செய்யலாம்.

 

முகவரி:  

அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில்,

சிறுவாச்சூர்,

பெரம்பலூர் மாவட்டம்.

 

போன்:    

+91- 4328 2325444, 291 375

 

அமைவிடம்:

சென்னை திருச்சி வழியில் பெரம்பலூரிலிருந்து தெற்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது

 

Share this:

Write a Reply or Comment

18 − 16 =